Friday, 6 December 2013

0 சாத்தானை விரட்டவேண்டுமா??

ஸ்தோத்திரம்
நமது தேவனைத் துதிக்கும் புதுப்பாட்டை அவர் என் வாயிலே கொடுத்தார், அநேகர் அதைக் கண்டு, பயந்து, கர்த்தரை நம்புவார்கள். (சங்கீதம் 40:3)

ஜேம்ஸ் ஹூவரும்
அவரது மனைவியும் புதிதாக திருமணமானவர்கள். அவர்கள் போர்னியோ என்னும் ஆசியாவிலுள்ள உலகின் மூன்றாவது மிகப் பெரிய தீவிலே ஊழியம் செய்யும்படி வந்திருந்தார்கள். புதிதாக அவர்கள் வந்திருந்தபடியால் அவர்களுக்கு அந்த மக்களின் மொழி தெரியாது. இரவில் ஒரு குடிசையில் தங்கலாம் என்று தீர்மானித்து, ஒரு குடிசையில் போய் சேரும்போது, அவர்களை சுற்றி அந்த தீவை சேர்ந்த மக்கள் கூடிவிட்டார்கள். அந்த ஜனங்கள் மிகவும் மோசமானவர்கள் என்று அவர்கள் ஏற்கனவே கேள்விப்பட்டிருந்தார்கள். ஆனாலும் எல்லா புத்திக்கும் மேலான தெய்வீக சமாதானம் அவர்களை நிரப்பியிருந்தது.

அந்த மக்கள் இவர்களிடம் தங்கள் மொழியில் ஏதேதோ பேச ஆரம்பித்தார்கள். இவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அப்போது ஹூவர் அவர்களின் மனைவி தன் கையில் வைத்திருந்த சிறிய ஆர்கனை வைத்து, பழைய கீர்த்தனைகளில் ஒன்றை பாட ஆரம்பித்தார். என்ன ஆச்சரியம்! அந்த ஜனத்தில் ஒவ்வொருவராக தங்கள் கைகளில் இருந்த தடிகளை கீழே போட்டு விட்டு, தூங்க ஆரம்பித்தார்கள். பாடலை பாடி முடிக்கும்போது அவர்கள் அனைவரும் தரையில் படுத்து நன்கு தூங்கி விட்டிருந்தனர். ஹூவரும் அவரது மனைவியும் அங்கேயே முழங்கால் படியிட்டு, கர்த்தருக்கு நன்றி செலுத்தினார்கள்.

இப்படி தொடர்ந்து பத்து நாட்கள் நடந்தது. அதன் முடிவில் அந்த மக்கள் அவர்களை பற்றி தெரிந்து கொண்டு, அவர்களோடு நட்புக் கொள்ள ஆரம்பித்தார்கள்.

ஹூவர் அவர்கள் 30 வருடஙகள் கழித்து மரித்தபோது, அந்த தீவில் 91 சதவிகிதம் பேர் கிறிஸ்தவர்களாக மாறி இருந்தனர். அந்த தீவும் நன்கு முன்னேற்றமடைந்ததாகவும், ஹூவர் மரித்ததற்கு மரியாதை செலுத்தும் வகையில் அவர்கள் தேசியக்கொடியை பாதி கம்பத்திலும் பறக்க விட்டிருந்தனர்.

கர்த்தரை துதிக்கும் துதி நம் வாயில் இருந்தால் சத்துரு ஓடுவான் என்பது நிச்சயம். ‘மோவாப் புத்திரரும், அம்மோன் புத்திரரும், அவர்களோடே அம்மோனியருக்கு அப்புறத்திலுள்ள மனுஷருங்கூட யோசபாத்திற்கு விரோதமாய் யுத்தம்பண்ண வந்தார்கள் (2 நாளாகமம் 20:1) இப்படி எதிர்பாராதவிதமாக யோசபாத் என்னும் யூத இராஜாவிற்கு விரோதமாக அநேக ஜாதியார் கூடி வந்தபோது, யோசபாத்திற்கு என்ன செய்வது என்று தெரியாமல், யூதாவெங்கும் உபவாசத்தை கட்டளையிட்டு, கர்த்தரை நோக்கி ஜெபித்தார். ‘பின்பு அவன் ஜனத்தோடே ஆலோசனைபண்ணி, பரிசுத்தமுள்ள மகத்துவத்தைத் துதிக்கவும், ஆயுதம் அணிந்தவர்களுக்கு முன்னாக நடந்துபோய், கர்த்தரைத் துதியுங்கள், அவர் கிருபை என்றும் உள்ளதென்று கர்த்தரைப் பாடவும், பாடகரை நிறுத்தினான். அவர்கள் பாடித் துதிசெய்யத் தொடங்கினபோது, யூதாவுக்கு விரோதமாய் வந்து பதிவிருந்த அம்மோன் புத்திரரையும், மோவாபியரையும், சேயீர் மலைத் தேசத்தாரையும், ஒருவருக்கு விரோதமாய் ஒருவரைக் கர்த்தர் எழும்பப்பண்ணினதினால் அவர்கள் வெட்டுண்டு விழுந்தார்கள் (2 நாளாகமம் 20:21-22) என்று வேதத்தில் காண்கிறோம். அவர்கள் துதி செய்ய தொடங்கின உடனே யோசபாத்திற்கு விரோதமாக வந்திருந்த அத்தனை கூட்டத்தாரும் ஒருவருக்கொருவர் தங்களுக்குள்ளேயே யுத்தம் செய்து ஒருவரை ஒருவர் வெட்டி மடிந்து போனார்கள்.

பிரியமானவர்களே, ‘எனக்கு விரோதமாக அநேகர் கூடி என்னை பகைக்கிறார்கள். எனக்கு விரோதமாக காரியங்கள் செய்கிறார்கள்என்று கூறுகிறீர்களோ, கர்த்தரை துதிக்க ஆரம்பியுங்கள். அவருடைய மகத்துவத்தை போற்றி பாடுங்கள். அவருடைய கிருபைகளை சொல்லி துதியுங்கள். உங்கள் கண்களுக்கு முன்பாக சத்துருக்கள் ஓடுவதை காண்பீர்கள்.

துதிக்கும் ஒரு விசுவாச வீரனுக்கு முன்பாக யாரும் நிற்க முடியாது. துதிக்கு அத்தனை வல்லமை உள்ளது. ஒரு பிரசங்கம் செய்பவர் ஒரு நல்ல செய்தியை தரலாம். ஒரு ஜெபிக்கிற வீரன் ஜெபத்திற்கு பதிலை கொண்டு வரலாம். ஆனால் துதிக்கிறவனோ கர்த்தரையே அந்த இடத்திற்கு கொண்டு வந்து விடுகிறான். ஏனெனில் நம் தேவன் துதிகளின் மத்தியில் வாசம் செய்கிறவர். எங்கே அவரை துதிக்கிற துதி இருக்கிறதோ அங்கே அவர் வந்து விடுகிறார்.

துன்மார்க்கருடைய பலி கர்த்தருக்கு அருவருப்பானது (நீதிமொழிகள் 15:8) என்று வேதம் கூறுகிறது. நம் மனதிலும், செய்கைளிலும் துன்மார்க்கத்தை வைத்து கர்த்தரை துதிப்போமானால், அது கர்த்தருக்கு அருவருப்பானது. ஆனால் சுத்த இருதயத்தோடு, நமக்கு வரும் பிரச்சனைகளின் நடுவில் கர்த்தரை துதிப்போமானால் கர்த்தர் அதில் வந்து இறங்கி, நமக்கு ஆசீர்வாதத்தை கட்டளையிடுகிறார். நமது சத்துருக்கள் புறமுதுகிட்டு ஓடுவார்கள். ஆமென் அல்லேலூயா!


கர்த்தரை துதிக்கும் துதியினால் எப்போதும் நம் வாய் நிறைந்திருக்கட்டும். அவரை புகழந்து பாடும் பாடல்களினால் நம் இருதயம் எப்போதும் நிறைந்திருக்கட்டும். அப்போது தேவ பிரசன்னம் எப்போதும் நம்மோடு இருக்கும். சத்துரு வெட்கப்பட்டு ஓடுவான். ஆமென் அல்லேலூயா!

நன்றி:URYF

0 comments:

Post a Comment

இந்த தளத்தில் வெளியாக்கப்படும் கட்டுரைகளின் ஏதேனும் ஒரு பகுதி தேவைப்பட்டால் தயவு செய்து http://waytoheaven2011.blogspot.com/ -லிருந்து எடுக்கப்பட்டது என்று குறிப்பிடவும்.