Wednesday 8 January 2014

0 நான் கீழ் நோக்கி மூழ்கிக் கொண்டிருந்தாலும், மேலே போகிறேன் ??????? - டைடானிக்

1912, ஏப்ரல் 15, அதிகாலை வேளை... "ஆண்டவராலும் மூழ்கடிக்க முடியாத கப்பல்' என்று புகழ் பெற்ற "டைட்டானிக்' என்ற கப்பல்,
அட்லான்டிக் கடலில் இருந்த பனிப்பாறையில் மோதி மூழ்க ஆரம்பித்தது. பயணிகள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த நேரம்.

என்ன நடக்கிறது என்பதை அவர்கள் அறியவில்லை. பனிப்பாறை வெட்டியதில் கப்பல் ஏறத்தாழ இரண்டாகப் பிளந்துவிட்டது. கப்பலின் தலைவர், ஒரு துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கிச் சுட்டார். சப்தம் கேட்டு விழித்த பிறகு தான், பயணிகள் தாங்கள் எத்தகைய ஆபத்தில் சிக்கியிருக்கிறோம் என்பதை உணர்ந்தனர். அதில் பயணித்தவர்கள் நூறோ, இருநூறோ அல்ல. 1528 பேர்.


எங்கும் அலறல் ஒலி. உயிர் மீட்சி படகுகள் மற்றும் ஜாக்கெட்களைத் தேடி அவர்கள் அங்குமிங்கும் ஓடினர். பிழைப்போம் என்ற நம்பிக்கை பயணிகளுக்கு அறவே போய் விட்டது. அப்போது, கப்பலில் பயணித்த பாடல் குழுவினர், ""ஆண்டவரே! எங்களை உம் அருகில் சேர்த்துக் கொள்ளும்' என்று பொருள்படும்படியான பாடலைப் பாடினர். பல பயணிகள் அவர்கள் அருகே வந்து நின்று அவர்களும் இணைந்து பாடினர்

அந்தக் கப்பலில் ஸ்காட்லாந்தைச் ÷ சர்ந்த புனித ஜான் ஹார்ப்பரும், அவரது எட்டு வயது மகள் நானா, அவரது மனைவியின் சகோதரி ஜெசி லெயிட்டக் ஆகியோரும் பயணம் செய்தனர். அந்த மகள் மீது அவருக்கு பாசம் அதிகம். அவர் கப்பலின் தலைவனைச் சந்தித்தார். கெஞ்சிக்கூத்தாடி ஒரு உயிர் மீட்சிப் படகைப் பெற்றார். அதில் மகளையும், ஜெசியையும் ஏற்றி, மகளுக்கு முத்தமிட்டு "குட்பை' சொல்லி அனுப்பிவிட்டார்

அதன்பின் அவருக்கு ஒரு உயிர் மீட்சி ஜாக்கெட் கிடைத்தது. அதை அணிந்து கொண்டு அவர் தப்பியிருக்கலாம். ஆனால், அங்குமிங்கும் ஓடிய அவர், அந்தக் கடைசி நேரத்திலும் தனது ஊழியத்தைக் கைவிடவில்லை. ""இயேசு கிறிஸ்துவை விசுவாசியுங்கள். அப்பொழுது நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள்'' என்று சப்தமிட்டார்.

கப்பல் இப்போது முழுமையாக மூழ்கும் நிலைக்குச் சென்றுவிட்டது. வேறு வழியின்றி ஜாக்கெட்டை அணிந்து கொண்டு கடலில் குதித்தார். அவரருகே ஸ்காட்லாந்தைச் சேர்ந்த அக்கியுலா வெப் என்ற இளைஞன் உயிரைக் காக்க நீந்திக் கொண்டிருந்தான். பனிக்கடலாக இருந்ததால் அவனால் நீண்டநேரம் தாக்குப் பிடிக்க முடியவில்லை.

இன்னும் சிறிது நேரத்தில் மூழ்கி விடுவான் என்ற நிலையில், ""தம்பி! நீ இரட்சிக்கப்பட்டிருக்கிறாயா?'' என்று கேட்டார்.
""இல்லை'' என்றான் அவன்.
""அப்படியானால் இதை நீ பிடி,'' என்று தன் ஜாக்கெட்டை கழற்றி அவனருகே வீசினார்.
""இதை நீ அணிந்து கொள், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி. அப்போது, நீ இரட்சிக்கப்படுவாய். என்னைக் குறித்து நீ கவலைப்படாதே. நான் கீழ் நோக்கி மூழ்கிக் கொண்டிருந்தாலும், மேலே போகிறேன்,'' என்றார். அந்த இளைஞன் அதை அணிந்து கொண்டான். சற்று நேரத்தில் கடலில் அவர் மூழ்கிவிட்டார்.


ஜான் ஹார்ப்பர் தன் கடைசி மூச்சு அடங்கும் வரை "இயேசு கிறிஸ்துவை விசுவாசியுங்கள்'என்று சொன்னதை அவர்கள் நினைவு கூர்ந்தனர்.
""அந்தக் கப்பல் மூழ்காமல் இருந்திருக்குமானால் ஹார்ப்பர் சிகாகோ நகரிலுள்ள ஒரு சபையில் பிரசங்கம் மட்டுமே செய்திருப்பார். ஆனால், தேவனோ அவரது தியாகத்தை வெளிப்படுத்தும் வகையில், தன்னுயிரைக் கொடுத்து பிற உயிரைக் காக்கும் மனப்பாங்கை அவரது மரணத்தின் மூலம் தந்துள்ளார்,'' என்றனர்.



"ஒருவன் தன் சிநேகிதருக்காக தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை" (யோவா.15:13) என்ற வசனம் இங்கே நினைவுகூரத் தக்கது.

0 comments:

Post a Comment

இந்த தளத்தில் வெளியாக்கப்படும் கட்டுரைகளின் ஏதேனும் ஒரு பகுதி தேவைப்பட்டால் தயவு செய்து http://waytoheaven2011.blogspot.com/ -லிருந்து எடுக்கப்பட்டது என்று குறிப்பிடவும்.