Sunday 13 April 2014

0 தத்தளிப்பு - நான்காம் வார்த்தை (ஏழு வார்த்தைகள்)

ஏழு வார்த்தைகள்
ஒன்பதாம் மணி நேரத்தில் இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம். (மத்தேயு 27 : 46)

இவர் தேவனுடைய குமாரனாயின் ஏன் இவ்வாறு கதறவேண்டும் என எல்லா மனிதர்களுக்குள்ளும் இது ஒரு கேள்விக்குரியான வார்த்தையாக காணப்படுகின்றது. வேதத்தை ஆராய்ந்து பார்த்தால் ஏசாயா 59:2 இப்படி கூறுகின்றது உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாக பிரிவினை உண்டாக்குகிறது, உங்கள் பாவங்களே அவர் உங்களுக்கு செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது. ஆகவே தேவனுடைய முகத்தை மனுஷன் பார்க்க முடியாமல் மறைப்பது பாவம் நமக்கும் தேவனுக்கும் இடையே பாவம் ஒரு இரும்பு திரையாக உள்ளது. தேவன் நம்மை பார்க்க முடியாத சந்தர்ப்பம் பாவத்தின் மூலம் வருகின்றது.

யோவான் 8:29 ல் பார்ப்போமானால் என்னை அனுப்பினவர் என்னுடனே கூட இருக்கிறார் பிதாவுக்கு பிரியமானவைகளை நான் எப்பொழுதும் செய்கிறபடியால் அவர் என்னை தனியேயிருக்கவிடவில்லை என்றார். அதே போன்று மறுரூபமலையிலே எலியாவோடும் மோசேயோடும் பேசிக்கொண்டிருக்கையில் இவர் என் நேசக்குமாரன் இவருக்கு செவிகொடுங்கள் எனக் கூறினார். இங்கே பார்க்கும் போது பிதா எப்பொழுதும் அவரோடு உறவாடியதற்கு காரணம் அவரிடம் பாவமில்லை என்பதினால் தான்

அன்று கல்வாரியிலே பிதா அவரை ஒரு நிமிடம் கைவிட வேண்டும் என்றால் அதற்கு அவருக்கும் பிதாவிற்கும் இடையில் ஒன்று வரவேண்டும் அது பாவம் ஆனால் அவர் பாவம் செய்யவில்லையே! எப்படியெனில் உலகமும் அதில் உள்ளவர்களும் செய்த பாவமே அதற்கு காரணம். 2கொரி 5:21 இப்படி சொல்லுகின்றது நாம் அவருக்குள் நீதியாகும் படிக்கு அவரை நமக்காகப் பாவமாக்கினார். எனவே இயேசு முதன் முறையாக பிதாவின் தொடர்பு இல்லாமல் இருந்தார்.


நம்முடைய பாவங்கள் அனைத்தையும் அவர் தாமே ஏற்றுக்கொண்ட போது இயேசு குற்றவாளியாகவும் பிதா நீதிபதியாகவும் நின்று ஒருகணம் தன்னுடைய முகத்தை அவருக்கு மறைத்தார் அது நியாயத்தீர்ப்பின் நேரமாய் காணப்பட்டது. அவ்வேளையிலே இயேசு தேவனை நோக்கி கதறிய வார்த்தை இது. ஆகவே இனி மனிதனுடைய பாவத்திற்காக ஆடு, மாடுகளின் இரத்தம் சிந்தப்பட வேண்டியதில்லை இயேசுவே நமது பாவத்தை தன் மேல் சுமந்து தன்னுடைய கடைசி சொட்டு இரத்தத்தையும் சிந்தி மீட்பை பெற்றுத்தந்துள்ளார்.


எபிரெயர் – 2:4 ல் பவுல் கூறுகிறார்
அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் பலவிதமான பலத்த செய்கைகளினாலும், தம்முடைய சித்தத்தின்படி பகிர்ந்து பரிசுத்த ஆவியின் வரங்களிலும், தேவன் தாமே சாட்சிகொடுத்ததுமாயிருக்கிற இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக்குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம்.
தண்டனைக்கு தப்பித்துக்கொள்ள சிலுவையில் தொங்கும் இயேசுவை நோக்கி பார்ப்போமா?






நன்றி:இயேசு நேசிக்கிறார் (agwjja)
Gnana Wilson

0 comments:

Post a Comment

இந்த தளத்தில் வெளியாக்கப்படும் கட்டுரைகளின் ஏதேனும் ஒரு பகுதி தேவைப்பட்டால் தயவு செய்து http://waytoheaven2011.blogspot.com/ -லிருந்து எடுக்கப்பட்டது என்று குறிப்பிடவும்.