Saturday 19 March 2016

0 யொகெபேத் அறிமுகம்! யாரிவர்?

யாத்தி:2:1,2  “லேவியின் குடும்பத்தாரில் ஒருவன் லேவியின் குமாரத்திகளில் ஒருத்தியை விவாகம் பண்ணினான். அந்த ஸ்திரி கர்ப்பவதியாகி, ஒரு ஆண் பிள்ளையைப் பெற்று, அது அழகுள்ளதென்று கண்டு அதை மூன்று மாதம் ஒளித்து வைத்தாள்.
 குணசாலியான ஸ்திரி
நாம் சிப்பிராள், பூவாள் என்ற மருத்துவச்சிகள் தேவன் மேல் கொண்டிருந்த பயத்தினால் எகிப்தில் வாழ்ந்த இஸ்ரவேல் மக்களைக் கர்த்தர் காத்தார் என்று பார்த்தோம். பார்வோன் அவர்களை கடின உழைப்பினால்
வாதித்தான், ஆனாலும் இஸ்ரவேல் மக்கள் பலுகிப் பெருகினார்கள். அதனால் பார்வோன், பிறந்த ஆண்பிள்ளைகளை நதியில் போட்டுவிட வேண்டுமென்று கட்டளையிட்டான்.

இப்படிப்பட்ட சமயத்தில் வாழ்ந்த யொகெபேத் என்ற ஒரு பெண்ணின் வாழ்க்கையைப் பற்றி பார்ப்போம்!

ஒரு தாய் என்றவுடன் எனக்கு நீதி:31 ம் அதிகாரத்தில் வரும் குணசாலியான ஸ்திரி தான் ஞாபகத்துக்கு வருகிறது.  பெண்ணை ஒரு நல்ல மனைவியாக, ஒரு நல்ல தாயாக சித்தரிக்கும் படம் அது. அதில் வர்ணிக்கப்பட்ட குணவதியான பெண்ணின் பல நற்குணங்களை, 38 வருடங்களுக்கு முன்னால் கர்த்தரிடம் சென்று விட்ட  என்னுடைய அம்மாவின் வாழ்வில் கண்டிருக்கிறேன். தன் வாழ்க்கை பல பல கஷ்டங்கள், துன்பங்கள் போன்ற புயலில் அடிபட்டாலும் தன் பிள்ளைகளை கோழி தன் குஞ்சுகளை காப்பதுபோல காத்தவர்கள்! அம்மாவிடம் கண்ட அநேக நற்குணங்களை என்னுடைய பிள்ளகளுக்கு பிரதிபலிக்க முயற்சி செய்திருக்கிறேன்!

இன்று நாம் படிக்கப்போகிற யொகெபேதின் வாழ்க்கையும் மலரால் அமைக்கப்பட்ட மெத்தை அல்ல.
யார் இந்த யொகெபேத்????? இவள் மோசேயைப் பெற்றெடுத்த தாய்.

யாக்கோபின் குடும்பத்தினர் எகிப்தில் உள்ள கோசேன் நாட்டில் குடியேறி வாழ்ந்தனர் என்ற நமக்கு தெரியும். அந்த தேசத்திலே யாக்கோபின் குமாரனாகிய லேவிக்கு பிறந்தவள் தான் இந்த யொகெபேத்.

 எண்ணா: 26: 59 வாசித்து பாருங்கள்! “ அம்ராமுடைய மனைவிக்கு யொகெபெத் என்று பேர்; அவள் எகிப்திலே லேவிக்கு பிறந்த குமாரத்தி; அவள் அம்ராமுக்கு ஆரோனையும், மோசேயையும், அவன் சகோதரியான மிரியாமையும் பெற்றாள்” என்று பார்க்கிறோம்.

இவளுக்கு தெரிந்ததெல்லாம் அடிமைத்தனம் என்ற கடினமான உழைப்பும், வேதனையும் நிறைந்த வாழ்க்கையே. இவள் கானானைக் கண்டவள் இல்லை, எகிப்தை மட்டுமே கண்டவள். ஒவ்வொரு நாளும் வாழ்க்கையையே  பாரமாக சுமந்த இந்தத் தாய் தன் பிள்ளைகளின் நலனுக்காக எதையும் செய்ய தயாராக இருந்தாள்.

முதலாவது அவளின் தைரியத்தையும், நம்பிக்கையையும் நமக்கு எடுத்துக் காட்டுவது அவள் தனக்கு பிறந்த ஆண் பிள்ளையை மூன்று மாதங்கள் யாருக்கும் தெரியாமல் ஒளித்து வைத்ததுதான். ஏனெனில் எகிப்தின் ராஜாவாகிய பார்வோன், எபிரேய மருத்துவச்சிகளால், தன் சூழ்ச்சி நிறைவேறாததை அறிந்து, பிறந்த ஆண்பிள்ளைகளை நைல் நதியில் போட்டுக் கொன்றுவிட கட்டளை கொடுத்திருந்தான்.

இந்த கொடூர செயலுக்கு பயந்த யொகெபேத், தன் பிள்ளையை மிகுந்த புத்திசாலித்தனத்துடன் மறைத்து வைத்தது மாத்திரமல்ல, அந்தக் குழந்தையை ஆபத்திலிருந்து இரட்சிக்கவும் வகை தேடினாள். பார்வோனின் கட்டளையை மீறி தன் பிள்ளையை காப்பாற்ற வேண்டும் என்ற இந்த மனத்தைரியம் எங்கிருந்து வந்தது?

அவளுடைய சொந்த வாழ்க்கையில் புயல் வீசினாலும், இந்தப் பெண்மணி இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் மேல் தன் நம்பிக்கையை வைத்து, கர்த்தருடைய பெலத்தினால் தன் குடும்பத்தை நடத்தியதால் தான்..

எகிப்து என்னும் அடிமைத்தன வீட்டில் தாங்கள் படும் கஷ்டங்களை நினைத்து அவள் அழுது புலம்பவுமில்லை, சூழ்நிலையால் தன் குடும்பம் அழிந்து விடுமோ என்று அஞ்சி ஒளிந்து கொள்ளவுமில்லை. நம்பிக்கை என்னும் விதையை அவள் தன் குடும்பத்தில், தன் பிள்ளைகளின் பிஞ்சு மனதில் விதைக்கிறாள்!

ஒரு நல்ல தாயை அடைந்த பாக்கியம் உங்களுக்கு கிடைத்திருக்கிறதா? அல்லது ஒரு நல்ல தாயாக வாழும் சிலாக்கியம் உங்களுக்கு உண்டா?

பெண்களாகிய நாம் எந்த நிறுவனத்தில் வேலை செய்கிறோம் என்று கூறிக்கொள்வதில் பெருமையடைகிறோம். எவ்வளவு சம்பளம் வாங்குகிறோம் என்பதில் பெருமிதம் கொள்கிறோம். ஆனால் ஒரு நல்ல தாயாக, நம் பிள்ளைகளுக்கு தைரியத்தையும், நம்பிக்கையையும் ஊட்டுகிறவர்களாக, நம் குடும்பத்தை தேவன் மேல் கொண்ட விசுவாசத்திலும், அன்பிலும் கட்டுகிறவர்களாக வாழ்கிறோமா?

ஒரு தாயால் தான் தன் பிள்ளைகளை சரிவர புரிந்து கொள்ளவும், அவர்களை உருவாக்கவும் முடியும்! உனக்கு கர்த்தர் கொடுத்திருக்கிற இந்த பெரிய பொறுப்பில் தவறி விடாதே!

கர்த்தர் தம்முடைய வார்த்தையின் மூலம் உங்களோடு பேசுவாராக!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்










நன்றி:http://rajavinmalargal.com/

0 comments:

Post a Comment

இந்த தளத்தில் வெளியாக்கப்படும் கட்டுரைகளின் ஏதேனும் ஒரு பகுதி தேவைப்பட்டால் தயவு செய்து http://waytoheaven2011.blogspot.com/ -லிருந்து எடுக்கப்பட்டது என்று குறிப்பிடவும்.