Saturday 19 March 2016

0 பிள்ளைகளின் எதிர்காலத்துக்குக்காக என்ன செய்கிறீர்கள்?

யாத்தி :2:2, 9  “அந்த ஸ்திரி (யொகெபேத்) கர்ப்பவதியாகி, ஒரு ஆண் பிள்ளையைப் பெற்று, அது அழகுள்ளதென்று கண்டு அதை மூன்று மாதம் ஒளித்து வைத்தாள்.
child
பார்வோனுடைய குமாரத்தி அவளை நோக்கி, நீ இந்தப் பிள்ளையை எடுத்துக்கொண்டுபோய் அதை எனக்கு வளர்த்திடு; நான் உனக்கு சம்பளம் கொடுக்கிறேன் என்றாள். அந்த ஸ்திரி பிள்ளையை எடுத்துக்கொண்டுபோய் அதை வளர்த்தாள்”


பெண்களின் வாழ்க்கையை மலரோடு ஒப்பிடுவார்கள்! ஏனெனில் மலர் என்றாள் கிள்ளி எறிந்து விடலாம் அல்லவா? ஆனால் யாரோ ஒருவர் பெண்களை தேயிலையோடு ஒப்பிட்டது எனக்கு மிகவும் பிடித்தது, ஏனெனில் தேயிலையை கொதித்த நீரில் போட்டாலும் அதிக சுவையும், மணமும் உள்ள தேநீரைத்தான் கொடுக்கும்!

நேற்று யொகெபேத் என்ற ஒரு பெண்ணின் அறிமுகத்தை பார்தோம்! தன்னுடைய பிள்ளைகளின் நலனுக்காக, எதையும் செய்ய தயாராக இருந்த இந்த தாய், பார்வோன் ராஜா பிறந்த ஆண்குழந்தைகளை நைல் நதியில் போட கட்டளை கொடுத்திருந்தபோதும், இஸ்ரவேலின் தேவன் மேல் நம்பிக்கையோடு தன் குழந்தையை மூன்று மாதம் ஒளித்து வைத்தாள்.

வேதம் கூறுகிறது, மூன்று மாதங்களுக்கு பின் அவள் நாணலினால் செய்த ஒரு பெட்டியில் நீர் உள்ளே செல்லாமலிருக்க பிசினும் கீலும் பூசி, தன் குமாரனைப்  படுக்க வைத்து, பார்வோன் குமாரத்தி நதிக்கு ஸ்நானம் செய்ய வரும் நேரம் அறிந்து, நதியோரமாய் நாணலுக்குள்ளே வைத்து, என்ன நடக்கிறது என்று கவனிக்க குழந்தையின் அக்காவை அங்கே நிற்க வைக்கிறாள்.

அவள் திட்டமிட்டு எதிர்பார்த்தபடியே பார்வோன் குமாரத்தி அந்தக் குழந்தையின் அழகில் மயங்கி அதை வளர்க்க ஆசைப்படுகிறாள். அதை பால் கொடுத்துவளர்க்கும் ஒரு தாதியாக யொகெபேத் மாறி தன் குழந்தையை பார்வோன் குமாரத்திக்கு விட்டுக் கொடுக்கிறாள் என்று பார்க்கிறோம்.

இதைப் படிக்கும்போது என் எண்ணத்தில் ஓடியதெல்லாம், எவ்வளவு உறுதியான மனப்பக்குவம் இவளுக்கு என்று தான்!

பார்வோனின் போர்வீரர்கள் கண்ணில் பட்டால் தன் குழந்தைக்கு ஆபத்து என்று நன்கு அறிந்த யொகெபேத், தன் பிள்ளையை பார்வோன் குமாரத்திக்கு தத்து கொடுத்தாலும் பரவாயில்லை, அவனை அந்த கொலைகாரப் பார்வோன் கையிலிருந்து காப்பாற்றினால் போதும் என்று எண்ணினாள்.!

யொகெபேத், தன் குழந்தையாகிய மோசேக்கு ஜீவனை மாத்திரம் கொடுக்கவில்லை, அவனை அழிவிலிருந்து மீட்டு, அவனுக்கு நல்ல எதிர்காலத்தையும் கொடுத்தாள்.

வேதாகம வல்லுநர்கள் கூறுகின்றனர் மோசே, மிகுந்த அழகுள்ளவனாயும், பார்க்கும்போதே ஒரு சிறப்புத்தன்மை வாய்ந்த குழந்தையாக இருந்திருப்பான் என்று. அவனைப் பார்த்தவுடன் தேவனை அறிந்த இந்த தாயின் உள்ளம் ‘இவன் நம்மை இரட்சிப்பான், நம்மை எகிப்த்தின் அடிமைத்தனத்திலிருந்து மீட்பான்’ என்று திட்டமாக கூறியிருக்கும். அவனை எப்படியாவது காப்பாற்றி நல்ல எதிர்காலத்தை அமைத்துக் கொடுப்பது தன் கடமை என்று உணர்ந்திருப்பாள்.

அவள் தான் பெற்றெடுத்த செல்லக் குழந்தையை பார்வோன் குமாரத்தியின் கையில் கொடுத்து, அவனை எகிப்து அரண்மனையில், எபிரேய ஆண்பிள்ளைகளை கொலைசெய்ய கட்டளை பிறப்பித்த ராஜாவின் அரண்மனையில் வளரும்படி அனுப்பியபோது அவள் உள்ளம் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபின் தேவனை நோக்கி கெஞ்சி மன்றாடியிருக்கும் அல்லவா?

யொகெபேத்தின் சுயநலமில்லாத தாய்மையைப் பற்றி சிந்தித்தபோது, என் பிள்ளைகளுக்காக, அவர்களின் எதிர் காலத்துக்காக எதையெல்லாம் நான் விட்டுக் கொடுத்திருக்கிறேன் என்று நான் சிந்திக்க ஆரம்பித்தேன்!

என் பிள்ளைகள் இருவரும் திருமணமாகி தங்கள் கால்களில் நிற்கும் அளவுக்கு வளர்ந்து விட்டனர். கர்த்தருடைய கிருபையால் இருவரையும்  தேவனுடைய பயத்திலும் வளர்த்துவிட்டேன்.

ஆனால் இளம் தாய்மாராகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்காக என்ன செய்கிறீர்கள்? பிள்ளைகளுக்கு நல்லதொரு எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்க இந்த எபிரேய தாயைப் போல, தேவன் மேல் திடமான நம்பிக்கையும், பமன உறுதியும், ஞானமும் உங்களிடம் உண்டா? உங்கள் பிள்ளைகளுக்காக உங்கள் நேரத்தை தியாகம் செய்ய உங்களால் முடியுமா? பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக, அவர்களின் இரட்சிப்புக்காக, கர்த்தரிடம் மன்றாடி ஜெபிக்க நேரம் உண்டா?

தேவன் தாமே இந்த வார்த்தைகளின் மூலம் உங்களோடு பேசுவாராக!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்








நன்றி: http://rajavinmalargal.com/

0 comments:

Post a Comment

இந்த தளத்தில் வெளியாக்கப்படும் கட்டுரைகளின் ஏதேனும் ஒரு பகுதி தேவைப்பட்டால் தயவு செய்து http://waytoheaven2011.blogspot.com/ -லிருந்து எடுக்கப்பட்டது என்று குறிப்பிடவும்.