Wednesday 31 December 2014

0 கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டி - கண்டெடுக்கப்பட்டது.

ark of the covenant
யெகோவா தேவன் இஸ்ரவேலரோடு பண்ணிய உடன்படிக்கையின் அடையாளமாக மோசேயின் மூலமாக உருவாக்கப்பட்டதுதான்
இந்த உடன்படிக்கைப் பெட்டி, உடன்படிக்கைப்பெட்டி என்றால் தெரியாத கிறிஸ்தவர்கள் யாரும் இருக்க இயலாது என்றே எண்ணுகிறேன், ஆனால் சிலரோ, இல்லை, இல்லை உடன்படிக்கைப்பெட்டியை என்னவென்றே தெரியாத கிறிஸ்தவர்கள் அநேகர் உள்ளனர் என்று முனுமுனுப்பது என் காதில் விழுகிறது, ஆகவே அதன் சில சிறப்பம்சங்களை பார்க்கலாமா.
உடன்படிக்கை பெட்டியை சுமந்துகொண்டு சென்ற ஆசாரியர்களின் பாதம் யோர்தான் ஆற்றில் பட்டவுடன் பாய்ந்து வந்த யோர்தான் நதி படபடத்து பின் நின்று இஸ்ரவேலருக்கு வழிவிட்டதே ஞாபகம் வருகிறதா?, இஸ்ரவேலர்கள் எரிகோ கோட்டையை ஏழுநாள் சுற்றி வந்தபோது ஆசாரியர்கள் சுமந்து சென்ற அதே உடன்படிக்கைப்பெட்டி, பெலிஸ்தர்கள் இஸ்ரவேலரை முறியடித்து, கர்த்தருடைய பெட்டியை ஆக்கிரமித்து சென்று தங்கள் தெய்வமாகிய தாகோன் விக்ரக கோயிலில் வைத்துவிட்டு, தாகோனே! இதோ இஸ்ரவேலரின் தேவனுடைய உடன்படிக்கை பெட்டியை சிறைப்பிடித்து உன் பாதத்தில் காணிக்கையாக்குகிறோம் என்று வீரவசனம் பேசி கலைந்து சென்றனர். அதுக்கப்புறம் என்ன நடந்தது என்கிறீர்களா? தாகோனுக்கு ராத்திரியெல்லாம் குளிர் ஜுரம் வராத குறைதான், ஏன் காலை வரை காத்திருக்க வேண்டும், கர்த்தருடைய பெட்டிக்கு முன் சரணாகதி ஆகிவிட வேண்டியதுதான் என்று முகங்குப்புற விழ,  தாகோனின் தலை தனியாக போனது, கைகள் தறிப்புண்டு போனது, அடுத்த நாள் காலை வந்த பெலிஸ்தர்கள், தங்கள் இஸ்ட தெய்வமாகிய தாகோனின் பரிதாப நிலையை கண்டு, இதைத்தான் இவ்வளவு காலம் விழுந்து விழுந்து வணங்கினோமா, இதை தெய்வமென்று நம்பி தோளில் தூக்கி சுமந்தோமே, என்று தங்களையே நொந்து கொண்டதோடு, இனி உன் வாசற்படியை மிதிப்பதில்லை, என்று காரி உமிழ்ந்து, வெளியே சென்றனர்,
அதன் பின் தேவன் பெலிஸ்தர்களை மூல வியாதியினால் வாதிக்கத்தொடங்கினார், பயந்துபோன பெலிஸ்தர்கள் இனி இஸ்ரவேலரின் உடன்படிக்கை பெட்டி நம்மிடம் இருக்கலாகாது, என்று சொல்லி ராஜ மரியாதையுடன் அனுப்பி வைத்தனரே, அந்த உடன்படிக்கைப் பெட்டிதான் தற்போது கண்டுபிடிக்கப்பட்டதாக வேர்ல்டு நெட் டெய்லி (World net daily) என்ற இணையதள செய்தி நிறுவனம் கடந்த ஜூன் 24-2009 அன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளாக எத்தியோப்பியாவின் பழமைவாய்ந்த சபையின் அடியில் மறைந்திருந்த கர்த்தருடைய உடன்படிக்கை பெட்டி முதல் முறையாக நம்முடைய தலைமுறையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது, இதுவே உலகின் விலையேறப்பெற்ற அருட்கொடையாக அகழ்வாராய்ச்சி மற்றும் ஆவிக்குரியவர்களுக்கு விளங்குகிறது.
இதனை நேரில் கண்ட எத்தியோப்பியாவின் பழமை வாய்ந்த கிறிஸ்த சபையின் பிரதான போதகர் அடினா பவுலோஸ், போப் பெனடிக்ட் XVl அவர்களை சந்தித்தப்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பவுலோஸ் வெகுவிரைவில் உலகம் கர்த்தருடைய உடன்படிக்கை பெட்டியின் மகத்துவத்தை அறிந்து அதில் ஈடுபாடு கொள்ளும், இந்த உடன்படிக்கை பெட்டியானது எத்தியோப்பியாவில் பல நூற்றாண்டுகளாக இருந்துள்ளது என்றும் அதனை இப்பொழுது நானும் என்னோடு கூட வேறு சில் மதிப்பிற்குரிய்வர்களும் எங்கள் சொந்த கண்ணாலே கண்டுள்ளோம், அதனுள்ளே கர்த்தர் மோசேயிடம் கொடுத்த உடையாத பத்து கற்பனைகளடங்கிய கற்பலகைகளையும் கண்டோம் என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில் வெகுவிரைவில் எத்தியோப்பியாவில் ஆக்ஸிம்(Axim) என்னுமிடத்தில் கண்காட்சித்திடல் கட்டப்பட்டு அதிலே கர்த்தருடைய உடன்படிக்கை பெட்டியை ஜனங்களின் பார்வைக்காக வைக்க திட்டமிட்டுள்ளோம் என்று கூறியுள்ளார்.
தற்போது எத்தியோப்பியாவில் கண்டெடுக்கப்பட்டுள்ள உடன்படிக்கை பெட்டியானது எல்லா ஆய்வுகளிலும் உட்படுத்தப்பட்டு போதுமான ஆதரத்தோடு விளங்குகிறது. இது கிறிஸ்துவுக்கு முன் சில நூற்றாண்டுகளுக்கு முன்னதாக எகிப்தின் எலிபாண்டைன் தீவிற்கு நகர்ந்துள்ளது, அதன் பின்னர் தானா கிர்கோஸ் என்ற எத்தியோப்பிய தீவிற்கு இடம் பெயர்ந்து, இறுதியாக தற்போதுள்ள புனித சீயோன் மேரி ஆலயத்திற்கு புலம் பெயர்ந்திருப்பதாக ஆராய்ச்சிகளின் மூலம் நிருபிக்கப்பட்டுள்ளதாக அச்செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
மேலும்,எருசலேமின் மேசியா இயேசு ராஜன் சீயோன் மலைகளில் அரசாட்சி செய்கிறபோது அவரிடம் இந்த உடன்படிக்கை ஒப்படைக்கப்படுவதற்காகவே இந்த காலக்கட்டத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக எத்தியோப்பியர்கள் கருதுகிறார்கள்,இஸ்லாமியர்கள் கூட இறுதிகாலத்தில் உடன்படிக்கை பெட்டி கண்டெடுக்கப்படும் என்று கூறியுள்ளதாக அந்த இணைய தள செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
இவையெல்லாம் எதை பறை சாற்றுகிறதென்றால் நம் மேசியா இயேசு ராஜா விரைவில், இல்லை இல்லை வெகுவிரைவில் நம்மை சந்திக்க மீண்டும் வருகிறார். அல்லேலூயா! கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக.




Thanks : http://www.wnd.com/2009/06/102532/

0 comments:

Post a Comment

இந்த தளத்தில் வெளியாக்கப்படும் கட்டுரைகளின் ஏதேனும் ஒரு பகுதி தேவைப்பட்டால் தயவு செய்து http://waytoheaven2011.blogspot.com/ -லிருந்து எடுக்கப்பட்டது என்று குறிப்பிடவும்.