Friday, 26 December 2014

0 வெரோனிக்காவின் முக்காடு- முடிவுக்கு வராத மர்மங்கள் பாகம் - 2



    சிலுவையில் அறையப்பட்ட யேசுநாதரின் உயிர் பிரிந்துவிட்டதை அறிந்த அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப் என்பவர், அவரது உடலைப் பெற்றுக் கொண்டு கல்லறையில் வைக்க ஆயத்தம் செய்தார். இஸ்ரேலர்களின் வழக்கப்படி, யேசுவின் உடல் பின்புறமிருந்து முன்புறம்வரை, காலிலிருந்து தலைவரை நீளத்துணியொன்றினால் போர்த்தப்பட்டுச் சுற்றிக் கட்டப்பட்டது. அதுமட்டுமில்லாமல், தலைப் பகுதி வேறொரு சிறிய தனித் துணியொன்றினாலும் சுற்றிக் கட்டப்பட்டது. அதன் பின்னர் யேசுவின் உடல் கல்லறையில் வைத்து மூடப்பட்டது.




மூன்று நாட்களின் பின்னர் சீடர்கள் வந்து பார்த்தபோது, கல்லறையில் யேசுநாதர் காணப்படவில்லை. ஆனால், தலையில் கட்டப்பட்டிருந்த சிறிய துணி மடிக்கப்பட்ட நிலையில் அங்கு வைக்கப்பட்டிருந்தது. உடலை மூடிக்கட்டியிருந்த நீளமான துணி, அப்படியே போடப்பட்ட நிலையில் காணப்பட்டது. இந்த இரண்டு துணிகளைப் பற்றிய பதிவுகள் புதிய ஏற்பாட்டில் காணப்படுகின்றன. தலையில் கட்டப்பட்ட துணி, 'யேசுவின் முகத்துணி' (Face Cloth of Jesus) என்றும் 'சுடாரியம் கிருஸ்து' (Sudarium Christi)   என்ற விசேசப் பெயருடனும் அழைக்கப்படுகிறது. இங்கு ஒன்றைக் கவனத்தில் எடுக்க வேண்டும். கடந்த பகுதியில் சொல்லப்பட்ட வெரோனிக்காவின் முக்காடும், 'சுடாரியம்' என்றே அழைக்கப்பட்டது. 

அதையும் இதையும் பலர் குழப்பிக் கொள்வதுண்டு. இந்தச் சுடாரியம் துணியில் எந்த உருவமும் பதிந்திருக்கவில்லை என்பது குறிபிடத் தக்கது. ஆனால், இறந்தவரின் முகத்திலும், தலையிலுமிருந்து வழிந்த இரத்தம், திட்டுத் திட்டாக இந்தத் துணியிலும் படிந்திருந்தது. இந்தச் 'சுடாரியம் கிருஸ்து' என்றழைக்கப்படும் துணி, இரண்டு அடி நீளமும், மூன்று அடி அகலமும் கொண்ட மெல்லிய 'லினன்' துணியாகும். இது தற்சமயம் வடக்கு ஸ்பெய்னில் உள்ள 'சான் சல்வடோர் தேவாலயத்தில்' (San Salvador Cathedral) பாதுகாக்கப்பட்டு வருகிறது. 




     யேசுநாதரின் இறப்பில் மொத்தமாக மூன்று துணிகள் சம்மந்தப்பட்டிருக்கின்றன. வெரோனிக்காவின் முக்காடு, சுடாரியம் கிருஸ்து, டூரின் துணி என்பவைதான் அவை. இன்று பலரையும் குழப்பத்தில் வைத்துக் கொண்டிருப்பது டூரின் துணியாகும். இந்தத் துணியில் காணப்பட்ட உருவம் விஞ்ஞானிகளையே மிரள வைத்திருக்கிறது. கிருஸ்துவுக்குப் பின் 1357ம் ஆண்டுவரை இந்தத் துணிபற்றி யாருக்கும் எதுவும் தெரிந்திருக்கவில்லை. அதன் பின்னர் மெல்ல வரலாற்றில் காலடியெடுத்து வைத்திருக்கிறது.

 இந்தத் துணி, அறிவியல் ரீதியான அடையாளத்தை எடுத்தது 1898ம் ஆண்டில்தான். 'செகண்டோ பியா' என்னும் படப்பிடிப்பாளர் எடுத்த படம்தான் முதல் முதலாக அறிவியல் உலகத்துக்கு இந்தத் துணியைக் கொண்டுவந்து நிறுத்தியது. இதுபற்றி விவரமாகக் கடந்த பகுதியில் சொல்லியிருக்கிறேன். அதன்பின்னர் 1970ம் ஆண்டில் விஞ்ஞானிகளின் குழுவொன்று, இந்தத் துணியை ஆராய்வதற்கான அனுமதியை வத்திக்கானிடம் கேட்டிருந்தது. வத்திக்கானும் அதற்கு அனுமதியளித்தது. இதுவே இந்தத் துணியின் மர்மத்தை வெளியுலகுக்குக் கொண்டுவரத் திறக்கப்பட்ட இரண்டாவது கதவாக இருந்தது. பல நாடுகளிலிருந்து ஒன்றுகூடிய ஆராய்ச்சியாளர்களும், விஞ்ஞானிகளும் கிட்டத்தட்ட 40 பேர் கொண்ட குழுவொன்றை அமைத்தார்கள்.

 அந்தக் குழு 'STURP' (Shroud of Turin Research Project) என்று அழைக்கப்பட்டது. இந்தக் குழுவில் இருந்தவர்களில் பெரும்பாண்மையானவர்களுக்கும் கத்தோலிக்க மதத்திற்கும் எந்தவிதச் சம்மந்தமுமில்லாமலிருந்தது. அதில் பலர் இறை மறுப்புக் கொள்கையுடையவர்களாகவும் இருந்தனர். பலரால் நம்பிக்கையான குழுவென்றே ஏற்றுக் கொள்ளப்பட்டனர். இரண்டு மில்லியன் டாலர்கள் செலவிலான கருவிகளைக் கொண்டு, இக்குழுவினால் செய்யப்பட்ட ஆராய்ச்சியின் முடிவுகள் பல அதிர்ச்சி வகையானவை. நம்பமுடியாதவை. அவை என்ன என்னவென்று படிபடியாகப் பார்க்கலாம். 


     டூரின் துணியில், மூன்று வகையான அடையாளங்கள் காணப்படுவதை ஆராய்ச்சியாளர்கள் அவதானித்தனர். 1. துணியில் காணப்படும் உருவம். 2. ஆங்காங்கே திட்டுத் திட்டாகவும், துளித்துளியாகவும் காணப்படும் இரத்தம். 3. ஏதோ ஒரு சமயத்தில் எரியும் சூழ்நிலையிலிருந்து துணி தப்பியதற்கான அடையாளம். துணியில் காணப்பட்ட உருவம், முன்பின்னாக இரண்டு உடற்பகுதியாக முழுமையாகப் பதிந்திருந்தது. ஒரு கால் நீட்டப்பட்டும் மற்றுமொருகால் மேல்நோக்கி மடங்கிய நிலையிலும், கைகளில் வலக்கைக்கு மேலாக இடக்கை வைத்திருப்பது போல உருவம் பதிந்திருந்தது. ஒருவரைச் சிலுவையில் எப்படி வைத்து அறைந்திருப்பார்களோ, அந்த நிலையில் அந்த உருவம் காணப்பட்டது.

 கைகளில் ஆணி அறைந்ததற்கான அடையாளமும் காணப்பட்டன. ஆனால் அதில் ஒரு சிறிய மாற்றமொன்று இருந்தது. யேசுநாதரைச் சிலுவையில் வைத்து அறைந்த ஓவியங்களையும், படங்களையும், சிலைகளையும் நாம் பார்த்திருக்கிறோம். அவரது உள்ளங்கைகளிலேயே ஆணியடித்தது போல அவற்றில் இருப்பதை அவதானிக்கலாம். ஆனால், இந்த டூரின் துணியில் காணப்படும் உருவத்தில் மணிக்கட்டில் ஆணியடித்திருப்பது தெரிகிறது. உள்ளங்கையில் ஆணியடிப்பது என்பது முன்னரே சந்தேகமான விவாதங்களுக்கு இட்டுச் சென்றிருக்கிறது. அதாவது உள்ளங்கையில் ஆணியடித்த நிலையில், ஒருவரைச் சிலுவையில் அறைந்து நெடுநேரம் வைத்திருக்கவே முடியாது. உள்ளங்கை ஒரு மனிதனின் எடையைத் தாங்க முடியாமல் பிய்ந்துவிடும். அதனால் யேசுநாதரின் உள்ளங்கைகளிலும் ஆணியடிக்கப்படவில்லை என்ற சந்தேகம் முன்னரே எழுப்பப்பட்டிருந்தது.

 அந்தச் சந்தேகங்களுக்கு விடை தருவது போல, மணிக்கட்டில் ஆணியடித்த நிலையில் துணியில் உள்ள உருவம் காணப்பட்டது. மணிக்கட்டில் ஆணியடித்து ஒரு மனிதனைத் தொங்கவிடும் பட்சத்தில், அவனது எடையை அந்த எலும்புகள் தாங்கிக் கொள்ளும். இது ஆச்ச்சரியமானதொரு விசயமாக இருந்தது. அத்துடன் அந்தத் துணியில் காணப்படும் உருவத்தின் இடப்பக்க மார்புப் பகுதியில் ஈட்டியொன்றினால் குத்தியது போலப் பெரும் காயம் ஒன்றும் காணப்பட்டது. மார்புப் பகுதியில் காணப்படும் ஐந்தாவது இடப்பக்க விலா எலும்பில் அந்தக் காயம் இருந்தது. இது ஆராய்ச்சியாளர்களுக்கு பெரும் ஆச்சரியத்தைக் கொடுத்தது.   




     யேசுநாதரின் சரித்திரத்தைச் சொல்லும் புதிய ஏற்பாட்டில், அவரைச் சிலுவையில் அறைந்ததற்குச் சற்று நேரத்துக்குப் பின்னர் ஈட்டியேந்திய காவலனொருவன் இடப்பக்க மார்புப் பகுதியில் குத்தியதாக எழுதப்பட்டிருக்கிறது. இது மிகச்சரியாக அந்த உருவத்துடன் பொருந்திப் போகிறது. அத்துடன் யேசுநாதருக்கு இரத்தம் வருமளவுக்கு எங்கெல்லாம் காயங்கள் ஏற்பட்டதாகப் புதிய ஏற்பாட்டில் சொல்லப்பட்டிருக்கிறதோ, அந்த இடங்களிலெல்லாம் காயத்தின் அடையாளமும், இரத்தத் திட்டுகளும் காணப்பட்டது. தொடர்ந்து துணியில் இரத்தத் திட்டுகள் இருக்கும் இடங்களும் முழுமையாக ஆராயப்பட்டன. தலை, மார்புப் பகுதி, மணிக்கட்டு, கால்ப்பகுதி என்பவறில் அதிகளவு இரத்தமும், உடல் முழுவதும் சிதறிய நிலையில் இரத்தத் துளிகளும் காணப்பட்டன. 

இதனால், அந்தத் துணியில் இருக்கும் உருவத்திற்குச் சொந்தக்காரன், இறக்குமுன் சித்திரவதை செய்யப்பட்டும், தலையில் முள்கிரீடம் அணியப்பட்டும், சவுக்கால் அடிக்கப்பட்டும் சிலுவையில் அறையப்பட்டுக் கொல்லப்பட்டுமிருக்க வேண்டும் என்ற முடிவுக்கே ஆராய்ந்தவர்கள் வரவேண்டியிருந்தது. ஆனாலும், 'துணியில் உருவம் எப்படித் தோன்றியது?' என்ற கேள்வி மட்டும் எஞ்சி நின்றது. 'யேசுநாதரின் உருவம் அப்படியே துணியில் பதிந்துவிட்டது' என்று அங்கு சென்ற எந்த ஆராய்ச்சியாளரும் நம்பும் நிலையில் இருக்கவில்லை. காரணம் அறிவியல் ரீதியாக அதற்குச் சாத்தியமேயில்லை. 'அந்தத் துணி வேண்டுமானால் யேசுநாதரை மூடிய துணியாக உண்மையாகவே இருக்கலாம். ஆனால், பிற்காலங்களில் யாரோ அவரது ஓவியத்தை அதில் வரைந்திருக்க வேண்டும்' என்றே அவர்கள் முடிவுக்கு வந்திருந்தனர். ஆனால், இந்த முடிவு தவறு என்பதற்கான ஆதாரங்கள் அவர்களுக்கு வேறு வடிவத்தில் கிடைத்தது.


     ஆராய்ச்சியின் அடுத்த கட்டமாகத் துணியின் பின்பக்கம் ஆராயப்பட்டது.. அப்போதுதான் பிரமிக்கத்தக்க ஒரு ஆச்சரியம் தெரிய வந்தது. துணியின் பின்பக்கத்திலிருந்து பார்த்த போது, இரத்தத் திட்டுகளின் அடையாளங்களும், எரிந்த அடையாளங்களும் தெளிவாகத் தெரிந்தனவேயொழிய, உருவம் எதுவும் தெரியவில்லை. "முன்பக்கம் பார்க்கும் போது தெளிவாகத் தெரியும் உருவம், ஏன் பின்பக்கம் பார்க்கும் போது தெரியவில்லை?" என்று சிந்தித்த போதுதான், 'அந்த உருவம் வரையப்படவேயில்லை' என்ற சந்தேகம் தோன்றியது.  உடனடியாகத் துணியைப் பலவிதமான நுண்காட்டிக் கருவிகளினால் சோதனையிட்டனர். துணியின் நூல் பலமடங்கு பெரிதாக்கப்பட்டு ஆராயப்பட்டது. 

அதன்மூலம், நூலில் ஓவியத்துக்கான மை எதுவுமே காணப்படவில்லை என்று திடமாகத் தெரிந்தது. இரத்தம் துணியிலுள்ள நூலில் நன்கு படிந்திருந்தது. ஆனால், உருவம் துணியின் மேல் பகுதியில் மட்டும் காணப்பட்டது. அந்தத் துணியில் உள்ள நூற்களில், உருவம் பதிந்திருந்த இடங்களில் எந்தவித இரசாயன மாற்றங்களும் நிகழ்ந்திருக்கவில்லை. அப்படியென்றால் அந்த உருவம் எதனால் உருவாக்கப்பட்டிருக்கிறது? என்னும் கேள்விக்கான விடை தெரியவேயில்லை. அதிசயம் அல்லது அற்புதம் என்பதை நம்பாதவர்களும் அதை நம்பும் நிலைக்கு வந்துவிடுவார்களோவென்று தோன்றியது. எப்படிப் பார்த்தாலும் அதை யேசுநாதருடைய துணியல்ல என்று மறுப்பதற்கு எந்த சான்றும் கிடைக்கவில்லை. 'புறஊதாக்கதிர்' (Ultra Violet Light) ஒளியைத் துணியின் மேல்புறம் செலுத்தியும் பார்த்தார்கள். 

அப்போது இன்னுமொரு ஆச்ச்சரியமும் காத்திருந்தது. புறஊதாக்கதிர்களின் ஒளியில், இரத்தமும், எரிந்த கோடுகளும் மட்டுமே தெரிந்தன. உருவம் தெரியவேயில்லை. தலையே சுற்றியது அவர்களுக்கு. அந்த உருவம் என்ன வகையாக அந்தத் துணியில் பதிந்தது என்று எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை. இறுதியாகச் செய்து பார்த்துவிட வேண்டிய பரிசோதனையாக எஞ்சியிருந்தது ஒன்றேயொன்றுதான். அந்தப் பரிசோதனைதான் 'கார்பன் தேதிப் பரிசோதனை' (Carbon Dating).  




     கார்பன் தேதிப் பரிசோதனைக்காக டுரின் துணியில் சிறுபகுதியை வெட்டியெடுக்க வேண்டியிருந்தது. அதில் பலருக்கு ஆரம்பத்தில் சம்மதமிருக்கவில்லை. பின்னர் ஒருவாறு 'இந்த உண்மையைக் கண்டுபிடித்தே தீர வேண்டும்' என்பதற்காக, அந்தத் துணியின் மேல்ப்பக்க மூலையில் ஒரு சிறிய துண்டை வெட்டியெடுக்கச் சம்மதித்தார்கள். கார்பன் தேதிப் பரிசோதனையின் முடிவு மட்டும், 'இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் உள்ள துணிதான்' என்று வந்துவிட்டால், பொருந்தாமலிருந்த அனைத்துக் கட்டங்களும் மிகச்சரியாக அந்த அந்த இடங்களில் பொருந்திவிடும். 

இந்தத் துணி யேசுநாதரினுடையதுதான் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லாமல் போய்விடும். அதனால் இந்தக் கார்பன் தேதிப் பரிசோதனையின் முடிவைப் பலர் ஆவலுடன் காத்திருந்தனர். இறுதியில் முடிவும் வந்தது. ஆனால் வந்த முடிவு பலரை ஏமாற்றத்துக்குக் கொண்டு சென்றது. கார்பன் தேதிப் பரிசோதனையின் முடிவு மிகத் தெளிவாகச் சொன்னது, "அந்த டூரின் துணி கி.பி.1260ம் ஆண்டிலிருந்து கி.பி.1390 ஆண்டு வரையிலான காலகட்டங்களில் உருவாக்கப்பட்டது". அதாவது பிரான்ஸ் நாட்டின் 'லிரே' நகரில் இந்தத் துணி இருந்த காலகட்டம் இந்தக் கார்பன் தேதிப் பரிசோதனையுடன் நூறுசதவீதம் ஒத்துப்போனது. பிரான்ஸ் நாட்டைக் காத்த மாவீரன் ஒருவனின் உடலைப் போர்த்திய துணிதான் இதுவென முன்னரே பலருக்குச் சந்தேகம் இருந்து வந்தது. அந்தச் சந்தேகத்தை கார்பன் தேதிப் பரிசோதனை தீர்த்து வைத்தது.  




     அதுவரை டூரின் துணி, யேசுநாதருடையதுதான் என்பதற்கான சான்றுகள் அனைத்தும் சரியாக அமைந்திருந்தன. அதனால், முழுமையான நம்பிக்கையுடன் இருந்த கத்தோலிக்க மக்கள் மிகவும் ஏமாற்றத்துக்குள்ளானார்கள். இதற்கு எதிரானவர்கள், 'போலியை வைத்து இதுவரை மக்களை ஏமாற்றியிருக்கிறார்கள்' என்று உலகமெங்கும் பேச ஆரம்பித்தனர். 'டூரின் துணி போலியானது' என்று முடிவு செய்யப்பட்டு அதைப் பற்றிப் பேசிவந்தவர்களெல்லாம், சிலகாலங்களின் பின்னர் மெல்ல மெல்ல அதை மறக்கவும் ஆரம்பித்தனர்.  'இனியென்ன விசயம் அத்துடன் முடிந்து போனது' என்றுதான் அனைவரும் நினைத்தனர். 

ஆனால் பல ஆண்டுகளின் பின்னர், வைத்தியசாலையில் தாதியாகப் பணிபுரிந்த 'சூ பென்ஃபோர்ட்' (Sue Benford) என்னும் பெண்மணி மூலம் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டது. 'சூ பென்ஃபோர்ட்டுக்கு டூரின் துணி சம்மந்தமாக ஒரு சந்தேகம் தோன்றியது. டூரின் துணியில் படங்களைப் பலவிதமாக வைத்து ஆராய்ந்து பார்த்த அவருக்குத் திடீரென மூளையில் ஒரு மின்னல் தோன்றி மறைந்தது. "அட! விசயம் இதுதான்" என்று முடிவுக்கு வந்த அவர், உடனடியாகக் கார்பன்தேதிப் பரிசோதனை செய்த ஆராய்ச்சியாளர்களுக்கு எதிரான அறிக்கையொன்றைச் சமர்ப்பித்தார். 

அந்த அறிக்கையில், அவர் சொல்லியிருந்தது இதுதான். "டூரின் துணியானது பல ஆண்டுகாலம் பலரின் கைகளுக்கு மாறி, இறுதியாக லிரே நகரை வந்தடைந்திருக்கிறது. இந்தக் காலகட்டங்களில் அந்தத் துணியானது ஒரு தீவிபத்தொன்றிலும் அகப்பட்டிருக்கிறது. அதனால், அந்தத் துணியைப் பாதுகாக்க விரும்பியவர்கள், அதன் கரையோரப் பகுதிகளுக்கு வேறு ஒரு துணியை நீளமாக வைத்துத் தைத்திருக்கின்றனர். அப்படி அவர்கள் தைத்திருந்த துணியையே கார்பன் தேதிப் பரிசோதனைக்கு வெட்டியெடுத்திருக்கிறார்கள். உண்மையான துணி வெட்டப்படவேயில்லை". சூ பென்ஃபோர்ட் அவர்களின் இந்தப் புரட்சிகரமான கருத்து, சோர்ந்து போயிருந்தவர்களுக்கு ஊக்க மருந்தாகத் தொழிற்பட்டது. உடனடியாக அவர் சொன்னதை ஆராய்ந்து பார்த்தார்கள். 

அவர் சொன்னது நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மையென்று உறுதியானது. டூரின் துணியின் பாதுகாப்புக் கருதி, சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் அதன் கரையோரப் பகுதிகளுக்கு வேறு துணி சேர்த்துவைத்துத் தைக்கப்பட்டது உறுதியானது. மிகவும் நவீன அறிவியல் கருவிகளின் மூலம் பலவிதங்களில் ஆராய்ந்து இந்த முடிவை எடுத்தார்கள். கார்பன் தேதிப் பரிசோதனை செய்தவர்கள் கூடத் தங்கள் தவறை ஒத்துக் கொண்டனர். தவறு கார்பன்தேதிப் பரிசோதனையில் இருக்கவில்லை. அந்தச் சோதனைக்குக் கொடுக்கப்பட்ட துண்டில் இருந்தது.




     டூரின் துணி மீண்டும் அனைவரின் பேசுபொருளானது. முன்னரை விட, அதில் அதிக நம்பிக்கையும் பலருக்குத் துளிர்விடத் தொடங்கியது. ஆராய்ச்சியாளர்களால் முன்னர் செய்த பரிசோதனைகளின் முடிவுகள் மீண்டும் ஆராயப்பட்டன. குறிப்பாக அதில் செய்யப்பட்ட ஒரு ஆராய்ச்சியின் முடிவு, மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. நாஸா பயன்படுத்தும் 'VP8 Image Analyzer' என்னும் கருவியினால், டூரின் துணியில் எடுக்கப்பட்ட உருவத்தைப் படமெடுத்திருந்தனர். VP8 Image Analyzer என்பது, விண்வெளியில் இருந்து கொண்டு பூமியின் மேற்பரப்பை ஆராய்ச்சி செய்யும் ஒருவகைப் படப்பிடிப்புக் கருவி. நிலப்பரப்பின் முப்பரிமாணத்தைச் (3D) சரியாகக் கணித்துச் சொல்லும் கருவி அது. அந்தக் கருவியில் டூரின் உருவப் படத்தை வைத்துப் பார்த்த போது, அதிர்ந்து போனார்கள். அதில் தெரிந்ததைக் கண்ட நாஸாவினருக்கே தலைசுற்றத் தொடங்கியது. 

அதில் அப்படித் தெரிந்தது என்ன தெரியுமா? யேசுநாதர் என்று நம்ப்பப்பட்ட அந்த முகம், முப்பரிமாணத் தோற்றத்துடன் அங்கு காணப்பட்டது. ஹோலோகிராமில் முப்பரிமாணத்தில் தெரிவது போல, அந்த முகம் மேல் நோக்கியபடி எழுந்து முப்பரிமாணத்தில் காணப்பட்டது. என்ன நடக்கிறது என்று யாருக்கும் புரியவில்லை. நம்பவே முடியாத ஆச்சரியம் அது. ஆச்சரியம் அல்ல, அற்புதம். இந்த உருவம் நிச்சயமாக யேசுநாதரினுடையதுதான் என்ற முடிவுக்குச் சுலபமாக வரக்கூடியதாக இருந்தது. வியப்பின் மேல் வியப்புக் கூடிக் கொண்டே சென்றது. அறிவியலின் அனைத்து கோணங்களும் அடைக்கப்பட்டு, விஞ்ஞானிகளைத் திக்குமுக்காட வைத்தது.  


     உண்மையில் அது யேசுநாதரின் உருவம்தானா? அல்லது விஞ்ஞானிகளே ஏமாந்து போகும் அளவுக்கு அந்தத் துணியில் ஏதும் நடந்ததா? முப்பரிமாண உருவத்தை யாரும் வரைய முடியுமா? இந்த உருவம் எப்படி அந்தத் துணியில் தோன்றியது? என்ற கேள்விகளுக்கான விடைகளை அடுத்த இதழ்களில் பார்க்கலாம்.

                                                                                                                                                   (தொடரும்)














http://dinesh3737.blogspot.in

0 comments:

Post a Comment

இந்த தளத்தில் வெளியாக்கப்படும் கட்டுரைகளின் ஏதேனும் ஒரு பகுதி தேவைப்பட்டால் தயவு செய்து http://waytoheaven2011.blogspot.com/ -லிருந்து எடுக்கப்பட்டது என்று குறிப்பிடவும்.