Thursday 18 July 2013

0 எதை நம்பி வாழுகிறீர்கள்?

பொருளாதார வீழ்ச்சிஎன்ற பேச்சு இன்றைக்கு பத்திரிகைகள் முழுவதும் ஒவ்வொரு நாளும்
நாம் காணும் வார்த்தைகளாக இருக்கின்றன. பொருளாதாரப் பின்வாங்குதலால் ஐரோப்பா நிலை குலைந்து நிற்கிறது. கிறீஸ் நாட்டில் ஆரம்பித்து, அயர்லாந்து நாட்டை அசைத்து, இத்தாலியை அடிபணிய வைத்து, பிரான்ஸின் பொருளாதாரத்தைத் தேக்க நிலைக்குள்ளாக்கி, யூரோ கரன்சியைப் பாதித்து, ஐரோப்பிய யூனியனையும் அது வீழ்ந்து விடுமோ என்ற நிலைக்குத் தள்ளியிருக்கிறது இந்தப் பொருளாதார வீழ்ச்சி. நம் இந்தியா இதிலெல்லாம் இருந்து தப்பி நின்றாலும் உலகப் பொருளாதாரப் பாதிப்பு நம்மையும் தொடாமல் இல்லை. அடிக்கடி விலை உயர்வை நாம் பார்க்க வில்லையா
பெட்ரோலிலிருந்து, அரிசி, பருப்பு, பால் என்று விலைகள் ஜுரம் போல உயர்ந்து கொண்டே போவது இந்த உலகப் பொருளாதாரப் பின்வாங்குதலின் காரணமாகத்தான். அமெரிக்காவை இது இன்றைக்கு எந்தளவுக்கு அடிபணிய வைத்திருக்கிறது என்பதையும் நாம் ஒவ்வொரு நாளுந்தான் பத்திரிக்கையில் வாசிக்கிறோமே. பொருளாதாரப் பின்வாங்குதல் வேலையில்லாமையை உயர்த்தி விடும், பண வீக்கத்தை ஏற்படுத்தும், ரூபாயின் மதிப்பைக் குறைத்துவிடும், வங்கிகளை செயலிழக்கச் செய்யும்
தொழிலகங்களை மூடவும் செய்துவிடும். கேட்பதற்கே பயங்கரமாக இருக்கிறதில்லையா? இதைத் தான் இன்றைக்கு உலக நாடுகளில் பல அனுபவித்துக் கொண்டிருக்கின்றன. இது இப்படியே தொடர்ந்தால் பேராபத்துத்தான் காத்திருக்கிறது. சுனாமியை இந்த நூற்றாண்டில் பார்த்துவிட்டோம், இனிப் பார்க்கப் போவது பொருளாதார சுனாமியாக இருக்குமோ, யாருக்குத் தெரியும்?
எப்படி, யாரால் இது நடந்தது என்ற கேள்விகளை விமர்சகர்கள் அன்றாடம் கேட்டு ஆராய்ந்து அரசாங்கங்கள் மீதும், அரசியல்வாதிகள் மீதும், தொழிலதிபர்கள் மேலும் பழியைப் போட்டு வருகிறார்கள். எல்லோரும் சுலபமாக மறந்துவிடுகிற ஒன்று என்ன தெரியுமா? இதற்குப் பின்னால் இருந்து தொடர்ந்து எச்சரிக்கை விடுத்துக்கொண்டிருக்கும் நம்மைப் படைத்த கடவுளுக்கும் இதற்கும் தொடர்பு இருக்கின்றதென்பதுதான்.
நம்மைப் படைத்த கடவுள் ஒரு நோக்கத் தோடுதான் நம்மைப் படைத்திருக்கிறார். அதாவது, அவரை நாம் மதித்து நடந்து மகிமைப்படுத்த வேண்டும் என்பதே அந்த நோக்கம். நம்மை அவர் படைத்தபோது ஆடு, மாடுகளைப் போலப் படைக்காமல் அவரோடு நாம் தொடர்பு வைத்திருக்கும்படியாக என்றைக்கும் அழியாத ஆவியோடு படைத்தார். அதை நாம் மிருகங்களிலும், பறவைகளிலும் பார்க்க முடியாது. நம் ஆவிக்கு என்றும் அழிவில்லை
அது தெரியுமா உங்களுக்கு? நாம் இறந்த பிறகு, நாம் வாழ்ந்த நிலையைப் பொருத்து அது கடவுள் இருக்குமிடத்தைப் போய்ச் சேரும் இல்லாவிட்டால் என்றைக்கும் அழியாத நரகத்தில் இருந்து வதைபடும். கடவுள் ஏற்படுத்தி வைத்திருக்கும் இந்த நியதியை எவரும் மாற்ற முடியாது. உயிரோடு இருக்கிறபோது நாம் எப்படி வாழ்கிறோம் என்பதுதான் நம்முடைய ஆவியின் எதிர்கால நிலையை நிர்ணயிக்கப்போகிறது
ஆனால், மனிதன் அதைப் பொருட்படுத்துவதில்லை. பணக்காரனாக இருந்த ஒரு மனிதன் தான் வாழ்ந்த காலத்தில் பெரிய அநியாயங்களைச் செய்து கடவுளைப்பற்றிய எந்த அக்கறையும் இல்லாமல் வாழ்ந்து இறந்தபின் நரகத்துக்குப் போனான். அங்கேயிருந்து தாங்க முடியாத அக்கினியில் வாடுகிறபோது அவனுக்கு பரலோகத்தில் தனக்குத் தெரிந்த கடவுளை நம்பிய லாசரு என்ற பிச்சைக்காரன் சந்தோஷமாக வாழ்வது தெரிந்தது. உடனே அவன் கடவுளோடு பேச ஆரம்பித்தான்
கடவுளே! யாரையாவது நீங்கள் உலகத்துக்கு அனுப்பி நாம் செய்யும் பாவம் நம்மை நரகத்தில் வாட வைத்துவிடும் என்ற செய்தியை என் குடும்பத்துக்கு சொல்லச் செய்யுங்கள் என்று மன்றாடினான். அதற்கு பதிலளித்த கடவுள், ஒருமுறை இங்கு வந்தபிறகு எவரும் உலகத்துக்கு திரும்பிப் போகமுடியாது. அங்கிருக்கிறவர்களுக்கு நான் ஏற்கனவே கொடுத்திருக்கிற வேத வார்த்தைகளைப் படித்து அவர்கள் திருந்தி வாழ வேண்டும். அது மட்டுமே அவர்களுடைய ஆவியின் விடுதலைக்கு வழி காட்டுகிறது என்று சொன்னார். இதுவரை நான் விளக்கிய இந்தக் கதையை கிறிஸ்தவ வேதத்தில் வாசிக்கிறோம் (லூக்கா 16:19-31).
பார்த்தீர்களா, நாம் இந்த உலகத்தில் வாழ்கிறபோது எப்படி வாழ்கிறோம் என்பதில் கடவுள் அக்கறை காட்டுகிறார். நாம் கடவுளை மதிக்காமல் வாழ்கிறபோது அதற்கான பலனை அடைந்தே தீருவோம். நாம் பார்த்த கதையில் வந்த பணக்காரனுக்கு பணம் மட்டுமே பெரிதாக இருந்தது. அவனுக்கு ஆத்மீக அக்கறையே இருக்கவில்லை. கடவுளைமதித்து வாழவேண்டும் என்ற எண்ணமும் இருக்கவில்லை. கடவுளை அறிந்துகொள்ள உதவும் கடவுளுடைய வேதம் அவனிடம் இருந்தபோதும் அதை வாசிக்க அவனுக்கு அக்கறையிருக்கவில்லை

பணத்துக்காகவும், ஆடம்பர வாழ்க்கைக்காகவும் மட்டுமே வாழ்ந்த அவன் இறுதியில் நரகத்தை அனுபவிக்க நேர்ந்தது. கடவுள் பேச்சை நாம் கேட்டு நடக்க வேண்டும் என்று அவனுடைய வாழ்க்கை நமக்கு எச்சரிக்கை விடுக்கிறது. கடவுளின் வார்த்தையை நாம் வாசித்து அவரை அறிந்துகொள்ள வேண்டும் என்று வற்புறுத்துகிறது அவனுடைய வாழ்க்கையின் முடிவு. அதேபோலத்தான் உலகப் பொருளாதாரப் பின்வாங்குதலும் நமக்கு ஒரு பெரிய எச்சரிக்கை விடுக்கிறது. பொருளாதார வளர்ச்சியிலும், பணத்தைக்குவிப்பதிலும் நாடுகள் நாட்டம் காட்டி அவற்றில் மட்டும் நம்பிக்கை வைக்கும்போது மனிதர்களின் நம்பிக்கைகளைத் தவிடுபொடியாக்கி விடுகிறார் நம்மைப் படைத்த கடவுள்

உலகப் பொருளாதாரத்தை ஆட்டம் காண வைத்து நான் இருக்கிறேன், என்னை நோக்கிப் பார்! என்று அறைகூவலிடுகிறார் கடவுள். உங்கள் நம்பிக்கை பணத்திலும், இந்த உலக வாழ்க்கை தரும் சுகத்திலும் இருக்கக் கூடாது. கடவுளின் ஒரே குமாரனாகிய, நமக்கு பாவ விடுதலை அளிக்கக்கூடிய இயேசு கிறிஸ்துவில் மட்டுமே இருக்க வேண்டும். உலக சுகத்தில் நம்பிக்கை வைத்து நரகத்துக்குப் போக வழி ஏற்படுத்திக்கொள்ளாதீர்கள். வேதத்தை வாசித்து இயேசு கிறிஸ்துவில் நம்பிக்கை வையுங்கள். உங்கள் பாவங்களுக்காக இயேசு கிறிஸ்துவிடம் மன்னிப்புக் கேட்டு அவர் இலவசமாக தரும் நித்திய வாழ்க்கையை காலந்தாழ்த்தாமல் பெற்றுக்கொள்ளுங்கள்.
 நன்றி:biblelamp.me

0 comments:

Post a Comment

இந்த தளத்தில் வெளியாக்கப்படும் கட்டுரைகளின் ஏதேனும் ஒரு பகுதி தேவைப்பட்டால் தயவு செய்து http://waytoheaven2011.blogspot.com/ -லிருந்து எடுக்கப்பட்டது என்று குறிப்பிடவும்.