Friday 6 April 2012

0 கொல்கொதா


        பண்டைய எருசலேம் நகருக்கு வெளியே இயேசு சிலுவையில் அறையப்பட்டதாகக் கருதப்படும் "கொல்கொதா" இன்று "திருக்கல்லறைக் கோவிலுக்கு" உள்ளே இருக்கிறது.
கொல்கொதா (Golgotha) என்பது பழங்கால எருசலேம் நகரின் மதில்சுவர்களுக்கு வெளியே இயேசு கிறித்து சிலுவையில் அறையப்பட்ட இடத்துக்குக் கொடுக்கப்பட்ட பெயர் ஆகும். இது கல்வாரி (Calvary) அல்லது கபாலஸ்தலம் என்றும் புதிய ஏற்பாட்டில் அழைக்கப்படுகிறது.
கொல்கொதா என்பது "குல்கல்தா" (Gûlgaltâ) என்னும் எபிரேயச் சொல்லின் ஒலியாக்கம் ஆகும். இச்சொல்லின் விளக்கமாக புதிய ஏற்பாட்டில் மண்டை ஓட்டு இடம் என்னும் தொடர் தரப்படுகிறது. இதே பொருள் தரும் கிரேக்கத் தொடர் Kraniou Topos (Κρανίου Τόπος) என்றும் இலத்தீன் தொடர் Calvariae Locus என்றும் அமையும். இலத்தீன் தொடரிலிருந்து Calvary என்னும் ஆங்கிலச் சொல்லும், கல்வாரி என்னும் தமிழ் ஒலிபெயர்ப்பும் பெறப்பட்டன.


விவிலியத்தில் கொல்கொதா (கல்வாரி)
புதிய ஏற்பாடு கொல்கொதா (கல்வாரி = மண்டை ஓட்டு இடம்) என்பதை ஒரு மலை என்றோ, குன்று என்றோ குறிப்பிடவில்லை. மாறாக இடம் என்று பொதுவாகவே குறிப்பிடுகிறது. ஆயினும் கி.மு. 333இலிருந்து அவ்விடம் ஒரு குன்று என்றும், கி.பி. 6ஆம் நூற்றாண்டிலிருந்து ஒரு மலை என்றும் குறிப்பிடப்பட்டு வந்துள்ளது.
இலத்தீன் மொழிபெயர்ப்பிலிருந்து கல்வாரி என்னும் பெயர் தோன்றியது. பல விவிலிய மொழிபெயர்ப்புகளில் அப்பெயரும் ஏற்கப்பட்டது.
மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் என்னும் நான்கு நற்செய்தியாளர்களும் இயேசு கொல்கொதாவில் சிலுவையில் அறையுண்டு இறந்த தகவலைத் தருகின்றனர்.
மத்தேயு 27:32-33
அவர்கள் வெளியே சென்றபோது சிரேன் ஊரைச் சேர்ந்த சீமோன் என்ற பெயருடைய ஒருவரைக் கண்டார்கள்; இயேசுவின் சிலுவையைச் சுமக்கும்படி அவரைக் கட்டாயப்படுத்தினார்கள். "மண்டையோட்டு இடம்" என்று பொருள்படும் "கொல்கொதா"வுக்கு வந்தார்கள்.
 மாற்கு 15:21-22
அப்பொழுது அலக்சாந்தர், ரூபு ஆகியோரின் தந்தையான சிரேன் ஊரைச் சேர்ந்த சீமோன் என்பவர் வயல்வெளியிலிருந்து வந்து கொண்டிருந்தார். படைவீரர்கள் இயேசுவின் சிலுவையைச் சுமக்கும்படி அவரைக் கட்டாயப்படுத்தினார்கள். அவர்கள் "மண்டைஓட்டு இடம்" எனப் பொருள்படும் "கொல்கொதா"வுக்கு இயேசுவைக் கொண்டு சென்றார்கள்.
லூக்கா 23:32-33
வேறு இரண்டு குற்றவாளிகளையும் மரணதண்டனைக்காக அவர்கள் அவரோடு கொண்டு சென்றார்கள். மண்டை ஓடு எனப்படும் இடத்திற்கு வந்ததும் அங்கே அவரையும் வலப்புறம் ஒருவனும் இடப்புறம் ஒருவனுமாக அக்குற்றவாளிகளையும் அவர்கள் சிலுவைகளில் அறைந்தார்கள்.
யோவான் 19:17
இயேசு சிலுவையைத் தாமே சுமந்துகொண்டு "மண்டை ஓட்டு இடம்" என்னுமிடத்திற்குச் சென்றார். அதற்கு எபிரேய மொழியில் கொல்கொதா என்பது பெயர். அங்கே அவர்கள் இயேசுவையும் அவரோடு வேறு இருவரையும் சிலுவைகளில் அறைந்தார்கள்.
பல விளக்கங்கள்
கொல்கொதா என்னும் சொல்லின் மூலம் பற்றியும் அதன் பொருள் பற்றியும் பல கருத்துகள் உள்ளன. அவை:
  • அரமேயச் சொல் கொல்கொஆதா என்றும், அதன் பொருள் கழுவிலேற்றும் இடம் என்று சிலர் கருத்துக் கூறுகின்றனர்.
  • சாவுத் தண்டனை பெற்றவர்களை எல்லார் முன்னும் கொல்கின்ற இடம் அது என்றும், அங்கு இறந்தோரின் மண்டை ஓடுகள் காணப்பட்டதால் இப்பெயர் எழுந்தது என்றொரு விளக்கம் உள்ளது.
  • அந்த இடம் ஒரு கல்லறைத் தோட்டத்துக்கு அருகில் இருந்திருக்கலாம். கொல்கொதா என்னும் பெயர் அங்கு அடக்கம் செய்யப்பட்டவர்களைக் குறிக்கலாம். ஒருசில யூத மற்றும் கிறித்தவ மரபுகளின்படி, அவ்விடத்தில் முதல் மனிதராகிய ஆதாமின் மண்டை ஓடு இருந்ததாம்.
  • இன்னொரு விளக்கப்படி, கொல்கொதா என்னும் இடம் புவி அமைப்பில் ஒரு மண்டை ஓட்டினை ஒத்து இருந்ததால் இப்பெயர் எழுந்திருக்கலாம்.
கொல்கொதா (கல்வாரி) எங்கே உள்ளது?
கொல்கொதா எங்கே உள்ளது என்பது பற்றியும் பல கருத்துகள் உண்டு. மிகப் பாரம்பரியக் கருத்து கி.பி. 325ஆம் ஆண்டில் எழுந்தது. அந்த ஆண்டில் புனித ஹெலேனா என்பவர் இயேசு சிலுவையில் இறந்த இடத்தை அடையாளம் கண்டார். ஹெலேனா உரோமைப் பேரரசன் முதலாம் காண்ஸ்டண்டைன் என்பவரின் தாய் ஆவார். இயேசு சிலுவையில் அறையப்பட்ட இடத்திலிருந்து சில மீட்டர் தொலையில் இயேசுவின் கல்லறையையும் ஹெலேனா அடையாளம் கண்டார். அதோடு இயேசு அறையுண்டு இறந்த சிலுவையும் கண்டெடுக்கப்பட்டது.
ஹெலெனாவின் மகன் மன்னர் முதலாம் காண்ஸ்டண்டைன் இயேசுவின் கல்லறை இருந்த இடத்தில் ஓர் அழகிய கோவிலைக் கட்டியெழுப்பினார். அது திருக்கல்லறைக் கோவில் (Church of the Holy Sepulchre) என்று அழைக்கப்படுகிறது.
கி.பி. 333இல் அந்த இடத்தைச் சந்திக்கச் சென்ற "போர்தோ நகர் திருப்பயணி" என்பவர் கீழ்வருமாறு குறிப்பிட்டார்:
இடது பக்கத்தில் ஆண்டவர் சிலுவையில் அறையப்பட்ட கொல்கொதா குன்று உள்ளது. அங்கிருந்து கல்லெறி தூரத்தில் ஒரு மாடம் (கீழ்த்தளம்) உள்ளது. அங்குதான் அவருடைய உடல் வைக்கப்பட்டு, மூன்றாம் நாள் அவர் உயிர்பெற்றெழுந்தார். அந்த இடத்தில் பேரரசர் காண்ஸ்டன்டைன் ஆணையின்படி அதிசயமான, அழகுபொருந்திய ஒரு பேராலயம் இப்போது கட்டி எழுப்பப்பட்டுள்ளது.
வரலாற்றுப் பார்வையில் கொல்கதா
இயேசு சிலுவையில் அறையுண்ட இடமாகிய கொல்கொதா கிறித்தவர்களுக்குப் புனித இடமாக மாறிற்று. கி.பி. 117-138 ஆண்டுகளில் உரோமைப் பேரரசனாக இருந்த ஹேட்ரியன் எருசலேமில் கிறித்தவ புனித இடங்களை அழித்துவிட்டு, உரோமை தெய்வங்களின் கோவில்களை அங்கு எழுப்பினார். காண்ஸ்டண்டைன் மன்னன் (ஆட்சிக்காலம்: கி.பி. 301-337) கிறித்தவர்கள் தம் சமயக் கோட்பாடுகளுக்கு ஏற்ப வழிபாடுகள் நடத்த முழு உரிமை அளித்தார். கி.பி. 325இல் நிசேயா பொதுச்சங்கத்தின்போது எருசலேம் ஆயர் மக்காரியுசு என்பவர் காண்ஸ்டண்டைன் மன்னனிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தார். எருசலேமில் இயேசுவின் கல்லறைமேல் ஹேட்ரியன் மன்னன் கட்டியிருந்த பிற சமயக் கோவிலை அழித்துவிட்டு, அந்த இடத்தை மீண்டும் கிறித்தவ வணக்கத்திற்கு விடவேண்டும் என்பதே அக்கோரிக்கை. காண்ஸ்டண்டைன் பிற சமயக் கோவிலை அழித்தபின்னர் அவ்விடத்தில் மிகப் பெரிய அளவில், எழில் மிக்க ஒரு பேராலயத்தைக் கட்டி எழுப்பினார். அப்பேராலயத்தில் இயேசுவின் கல்லறை இருந்த இடத்தில் ஒரு குவிமாடம் எழுப்பப்பட்டது; இயேசு இறந்த இடமாகிய கொல்கதாவும் பேராலயத்தின் உள் வருமாறு கட்டடம் வடிவமைக்கப்பட்டது. கி.பி. 614இல் பாரசீகப் படையெடுப்பின் விளைவாக காண்ஸ்டண்டைன் கட்டிய திருக்கல்லறைப் பேராலயம் அழிவுற்றது. சில ஆண்டுகளுக்குப் பின் சீரமைப்பு வேலைகள் நடந்தன.
கி.பி. 638இல் அராபிய படையெடுப்பு நிகழ்ந்தது. பத்தாம் நூற்றாண்டில் திருக்கல்லறைப் பேராலயத்திற்குத் தீ வைத்ததால் அழிவு ஏற்பட்டது. மரக் கட்டு அமைப்புகள் எரிந்து அழிந்தன. 1009இல் அல்-ஹாக்கிம் என்னும் ஆளுநர் கோவிலை அழிக்குமாறு ஆணையிட்டார். அதன் பின் நிகழ்ந்த சீரமைப்பணியின்போது (1042-1048) காண்ஸ்டண்டைன் எழுப்பியிருந்த பேராலயத்தின் ஒருசில பகுதிகள் பழுதுபார்க்க முடியாத அளவுக்கு அழிந்துவிட்டன. சிலுவைப் போர் வீரர்கள் எருசலேமை 1099இல் கைப்பற்றிய பிறகு கோவில் மீண்டும் சீரமைக்கப்பட்டது. இப்புதிய கோவில் 1149இல் நேர்ந்தளிக்கப்பட்டது. 1188இல் சலாதீன் படையெடுப்போடு கொல்கொதா உள்ளடங்கிய கோவில் மீண்டும் பாழானது. இயேசுவின் கல்லறையைச் சந்திக்க கிறித்தவர்கள் தனி வரி செலுத்தும் கட்டாயம் எழுந்தது. 1335இல் எருசலேம் திரு இடங்கள் புனித பிரான்சிஸ் சபைத் துறவியரின் கண்காணிப்பில் விடப்பட்டது. 1517இலிருந்து 1917 வரை திரு இடங்கள் துருக்கியரின் ஆட்சிக்கு உட்பட்டன. 1555இல் துருக்கிய ஆளுநரின் இசைவோடு கட்டட வேலை நிகழ்ந்தது. 1808இல் கோவிலின் ஒரு பகுதி தீக்கிரையாகியது. 1955இலும் 1997இலும் புதுப்பித்தல் பணிகள் தொடர்ந்தன.
இயேசுவின் கல்லறைப் பகுதியில் வழிபாட்டு உரிமை கத்தோலிக்கர்கள், கிரேக்க மரபுவழிச் சபையினர் மற்றும் அர்மீனிய சபையினருக்கு உண்டு. இந்த மூன்று சபையினரும் இணைந்து புதுப்பித்தல் பணிகளைச் செய்தனர். இன்று இயேசு அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு நேர்மேலாக எழுகின்ற குவிமாடத்தின் திறப்பிலிருந்து கதிரவனின் ஒளி பரந்து சிதறி அக்கல்லறையை ஒளிமயமாக்குகிறது.
நன்றி :விக்கிப்பீடியா

0 comments:

Post a Comment

இந்த தளத்தில் வெளியாக்கப்படும் கட்டுரைகளின் ஏதேனும் ஒரு பகுதி தேவைப்பட்டால் தயவு செய்து http://waytoheaven2011.blogspot.com/ -லிருந்து எடுக்கப்பட்டது என்று குறிப்பிடவும்.