Monday 23 April 2012

0 ஒரு சிறந்த மனைவி - தாயின் பண்புகள்

                           ஒரு பெண் எப்படி இருக்க வேண்டும் என்று நீதிமொழிகளில் இவ்வாறு  சொல்லப்பட்டுள்ளது.


                                    நீதி மொழிகள் எழுதப்பட்டு சுமார் 3000 ஆண்டுகளாகிவிட்டன. ஆயினும் அதில் கூறப்பட்டுள்ள சிறந்த மனைவி - தாய்மார்களுக்கு உரிய நற்பண்புகள் இன்றைக்கும் பொருத்தமானதாகவே இருக்கிறது. ஆகவே வாசித்து தியானித்து பயனடைவோமாக. (நீதி 31:10-31)

             பழைய ஏற்பாடு எபிரேய மொழியில் எழுதப்பட்டது என்று நாம் அறிவோம்.    இதில் மொத்தம் 22 எழுத்துக்கள் உள்ளன. அந்த 22 எழுத்துகளில் முதல் எழுத்து ஆலெப் கடைசி எழுத்து "தவ்". நாம் பார்க்கப்போகிற நீதிமொழிகள் 31ம் அதிகாரம் 10ம் வசனம் தொடங்கி அதன் கடைசி வசனம் 31வரைக்கும் ஒவ்வொரு வசனத்துக்கும் அந்த 22    எழுத்துக்களும் வரிசையாக பயன்படுத்தப் பட்டிருக்கின்றன. அதேபோல 119ம் சங்கீதத்தில் காணப்படும் உட்பிரிவுகளின் தலைப்புக்கும் இந்த எரேபிய எழுத்துக்கள் 22ம் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

1. சிறந்தவள் - விலைமதிப்புள்ளவள்
   நீதி 31:10: "குணசாலியான ஸ்தீரியை கண்டுபிடிப்பவன் யார்? அவளுடைய விலை முத்துக்களைப் பார்க்கிலும் உயர்ந்தது".
தேவன் பெண்ணை மனிதனுக்குத் துணையாக இருக்கும்படி படைத்தார்.    (ஆதி 2:18).    பண்புள்ள மனைவியைப் பெற்றுக்கொள்கிறவன் பாக்கியவான். (நீதி 18:22).

2. நம்பிக்கைக்குப் பாத்திரமானவள்:
   வசனம் 11 "அவள் புருஷனுடைய இருதயம் அவளை நம்பும், அவன் சம்பத்துக்குறையாது".
அப்படிப்பட்ட மனைவி நம்பிக்கைக்குப் பாத்திரமுள்ளவளாய் இருக்கின்றபடியால், நியாயமான காரியங்களில் அவள் உண்மையாக இருப்பாள் என்று கணவன் நிம்மதியாக இருப்பான். (சங் 128:3,4).

3. எப்போதும் எந்த சூழ்நிலையிலும் உறுதுணையாக இருப்பாள்:
   வசனம் 12 "அவள் உயிரோடிருக்கிற நாளெல்லாம் அவனுக்குத் தீமையை அல்ல, நன்மையையே செய்கிறாள்".
அதனால் அன்றே, "குணசாலியான ஸ்தீரி கணவனுக்குக் கீரிடமாக இருக்கிறாள்" என்று வேதம் உத்தம மனைவியைப் பாராட்டுகிறது. (நீதி 12:4).

4. ஆர்வமுள்ள உழைப்பாளி
   வசனம் 13. "ஆட்டுமயிரையும், சணலையும் தேடி, தன் கைகளினால் உற்சாகத்தோட வேலை செய்கிறாள்".
ஒரு பொறுப்புள்ள மனைவிக்கு எதையும் சொல்லவேண்டிய அவசியம் இருக்காது எதை எதை எப்போது எப்படிச் செய்யவேண்டும் என்று குறிப்பறிந்து தானே செய்து முடிப்பாள்.

5. திரை கடல் ஓடியும் திரவியம் தேடு என்ற மனப்பாங்கு உள்ளவள்.
   வசனம் 14. "அவள் வியாபாரக் கப்பலைப் போல இருக்கிறாள். தூரத்தில் இருந்து தன் ஆகாரத்தைக் கொண்டு வருகிறாள்".
அவள் கருத்தாய், சிரமத்தைப் பாராமல், குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் என்னென்ன தேவைகள் என்று அறிந்து அதைத் தேடிக்கொண்டு வருகிறாள்.

6. கடைசியில் படுத்து, முதலில் எழுந்திருப்பாள்
   வசனம் 15 "இருட்டோடே எழுந்து, தன் வீட்டாருக்கு ஆகாரம் கொடுத்து தன் வேலைக்காரிகளுக்குப் படியளக்கிறாள்".
எவ்வளவு அலுப்பாக இருந்தாலும்,    தன் கடமைகளைக் காலையில் தொடங்கி படுக்கபோகும்வரை பம்பரமாயச் சுழன்று கவனிப்பாள்.

7. குடும்ப முன்னேற்றமே அவர் மூச்சு
   வசனம் 16. "ஒரு வயலை விசாரித்து அதை வாங்குகிறாள். தன் கைகளின் சாமர்த்தியத்தினால் திராட்சைத் தோட்டத்தை நாட்டுகிறாள".
குடும்ப முன்னேற்றத்தில் கணவனுக்கு உறுதுணையாக இருப்பதுடன் தன்னுடைய சுய முயற்சியினால் சில சேமிப்புகளைச் செய்தும் பண்டங்களைக் கொள்முதல் செய்து விற்றுப் பொருள் சேர்க்கிறாள்.

8. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதை நடைமுறையில் கடைப்பிடிக்கிறாள்.
   வசனம் 17. "தன்னை பெலத்தினால் இடைக்காட்டிக் கொண்டு, தன் கைகளை பலப்படுத்துகிறாள்".
நாளுக்கு ஒரு வியாதியால் பாதிக்கப்பட்டு,      மருத்துவர்களுக்குப் பெருந்தொகையை மாதாமாதம் கொடுத்துக் கொண்டிராமல் நல்லமுறையில் உடல்நலத்தைப் பேணிக் காத்துக் கொள்கிறாள்.

9. முயற்சி திருவினை ஆக்கும் என்று நம்பிக்கையுடன் இருப்பாள்.
   வசனம் 18. "தன் வியாபாரம் பிரயோசமுள்ளது என்று அறிந்திருக்கிறாள். இரவில் அவள் விளக்கு அணையாதிருக்கும்".
தன் முயற்சியின் பலன்,      கஷ்ட நேரங்களில் எவ்வாறு கைக்கொடுக்கிறது என்று அறிந்திருக்கிறபடியால் எந்த சூழ்நிலை வந்தாலும் சமாளிக்க அதிக நேரம் உழைக்கிறாள்.

10. பல்கலை பயின்ற வல்லுநர்.
   வசனம் 19. "தன் கைகளை இராட்டினத்தில் வைக்கிறாள், அவள் விரல்கள் கதிர்களைப் பிடிக்கும்".
இந்த வேலைதான் தெரியும்.    இது தெரியாது என்றே கிடையாது.    பொத்தான் தைப்பதிலிருந்து போரடிக்கிற வேலை வரை அனைத்து வேலைகளையும் செய்து குடும்பத்தின் எந்த தேவைகளுக்கும் மற்றவர்கள் கையை எதிர்ப்பார்க்கமாட்டாள்.

11. நல்ல சமாரியன் கொள்கையுடையவள்.
   வசனம் 20. "சிறுமையுள்ளவர்களுக்கு தன் கையைத் திறந்து, ஏழைகளுக்கு தன் கரங்களை நீட்டுகிறாள்".
தன்னுடைய குடும்ப அலுவல்களைக் கவனிப்பதோடு திருப்திப்பட்டுக் கொள்ளாமல், தேவைப்படுகிறவர்களுக்கு உதவி செய்வதிலும் இன்பம் காண்கிறாள்.

12. அவள் குரங்கு அல்ல- தூக்கணாங்குருவி.
   வசனம் 21. "தன் வீட்டார் அனைவருக்கும் இரட்டைப்புரை உடுப்பு இருப்பதால் தன் வீட்டாரினிமித்தம் குளிருக்குப் பயப்படாள்".
தன்னுடைய கணவன், பிள்ளைகள், வேலைக்காரர்கள் ஆகிய அனைவருக்கும் எல்லா சீதோஷ்ண நிலைக்கும் தேவையான ஆடைகளைச் சேகரித்து வைத்திருப்பதால் எப்படிப்பட்ட அசாதாரண சூழ்நிலையிலும் கலங்காமல் இருப்பாள்.

13. தகுதியான உடையலங்காரம்
   வசனம் 22. இரத்தினக் கம்பளங்களைத் தனக்கு உண்டு பண்ணுகிறாள். மெல்லிய புடவையும், இரத்தாம்பரமும் அவள் உடுப்பு.
அலங்கோலமாகக் உடுத்திக்கொண்டு, அதற்கு நாகரீகம் என்ற போர்வை போர்த்தி, மாயம் பண்ணாமல், சமுதாயம் ஏற்றுக்கொண்டு மதிக்கக்கூடிய உடையலங்காரம் செய்து கொள்வாள்.

14.மதிப்புக்கும், கண்ணியத்துக்கும் உரியவள்.
   வசனம் 23, "அவள் புருஷன் தேசத்து மூப்பர்களோடே நியாய ஸ்தலங்களில் உட்கார்ந்திருக்கையில் பேர் பெற்றவனாயிருக்கிறான்".
அவளுடைய நற்பண்பு, சாமர்த்தியம், ஒழுக்கக்கட்டுப்பாடு ஆகியவைகளின் காரணமாக, சமுதாயத்தில் அவளுடைய கணவனுக்கும் மரியாதையும் செல்வாக்கும் கிடைக்கிறது.

15. சாமர்த்தியமும் வியாபார நோக்கும் உள்ளவள்.
   வசனம் 24. "மெல்லிய புடவைகளை உண்டு பண்ணி விற்கிறாள். கச்சைகளை வர்த்தகரிகித்தில் ஒப்புவிக்கிறாள்".
குடும்பம் நடத்துதில் தான் கெட்டிக்காரி என்றில்லை.      வெளி விவகாரங்களையும் கூடப் புரிந்துக்கொண்டு, அதற்கேற்ற முறையில் செயல்பட்டு பொருள் ஈட்டுவாள்.

16. வாழ்க்கையில் கண்ணியமும், எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையும் அவள் சொத்து:
   வசனம் 25. "அவள் உடை பலமும் அலங்காரமுமாயிருக்கிறது. வருங்காலத்தைப் பற்றியும் மகிழுகிறாள்".
தன்னுடைய வியாபாரம் பெருக்கம்,    தொழில் முயற்சியில் வெற்றி ஆகிய காரியங்கள் அவளுக்கு வாழ்க்கையில் தெம்பையும்,    உற்சாகத்தையும் ஊட்டி எதிர்க்காலத்தைப் பற்றிக் கவலையில்லாமல் இருக்கிறாள்.

17. விவேகமும் அன்பும் நிறைந்தவள்:
   வசனம் 26. "தன் வாயை ஞானம் விளங்கத் திறக்கிறாள். தயையுள்ள போதகம் அவள் நாவில் இருக்கிறது".
அனுபவத்தின் மூலம் அவள் பெற்றுக்கொண்ட ஞானம்,    சகிப்புத்தன்மை,    புத்திசாலித்தனம் ஆகியவைகளைப் பிரயோகித்து பிரச்சனைகளை அணுகுவதில் வெற்றி பெறுகிறாள்.

18. புத்திக் கூர்மையும்,சுறுசுறுப்பும் உள்ளவள்.
   வசனம் 27. "அவள் சோம்பலின் அப்பத்தைப் புசியாமல், தன் வீட்டுக்காரியம் எப்படி நடக்கிறது என்று கண்ணோக்கமாயிருக்கிறாள்".
மனைவியாகவும், தாயாகவும் அவளுடைய புத்திக்கூர்மையானது. அவளுடைய குடும்பத்துக்குப் பெரும் துணையாகவும், வழிகாட்டியாகவும் இருந்து வெற்றி வாழ்க்கை வாழுகிறாள்.

19. பாராட்டுக்குரியவரும், ஒப்புவமையில்லாதவளுமாய் இருக்கிறாள்.
   வசனம் 28,29. "அவள் பிள்ளைகள் எழும்பி அவளைப் பாக்கியவதி என்கிறார்கள். அவள் புருஷனும் அவளைப் பார்த்து,    அநேகம் பெண்கள் குணசாலியாயிருந்ததுண்டு நீயோ அவர்கள் எல்லோருக்கும் மேற்பட்டவள் என்று அவளைப் புகழுகிறாள".
மேற்சொன்ன அனைத்துப் பண்புகளையும் உடைய தாயாகவும்,    மனைவியாகவும் விளங்கும் ஒரு பெண்மணியை பிள்ளைகள் வாழ்த்தாமலும், புருஷன் பாராட்டாமலும் இருப்பது எப்படி?

20. தேவபக்தியும் பயமும் உள்ளவள்.
   வசனம் 30. "சௌந்தர்யம் வஞ்சனையுள்ளது. அழகும் வீண், கர்த்தருக்குப் பயப்படுகிற ஸ்திரீயே புகழப்படுவாள்".
தேவனுக்குப் பயந்து நடக்கிற பெண்மணி புகழப்படுவாள் அவள் தன் தேவனோடு ஒன்று பட்டு வாழ்வதினால் இப்படிப்பட்ட அரும் குணதிசயங்களைப் பெற்றிருக்கிறாள்.

21. பேறுக்கும், புகழ்ச்சிக்கும் பாத்திரமானவள்
   வசனம் 31. "அவள் கைகளின் பலனை அவளுக்குக் கொடுங்கள் அவளுடைய செய்கைகள் வாசல்களில் அவளைப் புகழக்கடவது". அவள் செய்கிற, செய்துள்ள காரியங்களையெல்லாம் கவனித்துப் பார்க்கும் பொழுது, அவள் எல்லாவிதமான பாராட்டுக்கும் தகுதியுள்ளவள். அவள் குடும்பத்தாரும், மற்றவர்களும் அவளைப் புகழுவார்கள்.
                லேமுவேலின் தாயார் அவனுக்கு உபதேசித்துச் சொன்னதைக் கருத்தில்கொண்டு கிறிஸ்துவுக்குள் இருக்கிற ஒவ்வொரு கணவனும்,    தங்கள் மனைவிமார்களின்  -  தாயாரின் நற்பண்புகளைப் பாராட்ட வேண்டும். "புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்பு கூறுங்கள்.

            அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்பு கூர்ந்து... அதற்காக ஒப்புக்கொடுத்தார்" (எபே 5:25). கிறிஸ்தவத் தாய்மார்கள் தீமோத்தேயுவின் தாயார் மற்றும் பாட்டியைப்போன்று,    தங்களுடைய பிள்ளைகளுக்கு தேவனுடைய வார்த்தைகளைச் சிறுவயதிலிருந்தே போதிக்க வேண்டும். (2தீமோ 1:5, 3:15). தங்களுடைய பெண் பிள்ளைகளுக்கு ஒரு சிறந்த மனைவி எப்படி இருக்கவேண்டும் என்கிற விஷயங்களைச் சிறுபிராயத்திலிருந்தே கற்றுத்தரவேண்டும். (தீத்து 2:3-5). அதேபோல ஆண்மக்களுக்கு மற்ற பெண்களை எல்லாக்கற்புடனும், சகோதரிகளாகப் பாவிக்கவும் (1தீமோ 5:2).    தெளிந்த புத்தியுள்ளவர்களாகவும்,    உபதேசத்தில் விசுற்பமில்லாமலும், நல்லொழுக்க முள்ளவனும்,      குற்றம் கண்டுபிடிக்கப்படாத ஆரோக்கியமான வசனத்தைப் பேசுகிறவனாகவும் இருக்க கற்பிக்கவேண்டும். (தீத்து 2:6,7). 

நன்றி :ஜாமக்காரன்.(E.Z.செல்வநாயகம்.)

0 comments:

Post a Comment

இந்த தளத்தில் வெளியாக்கப்படும் கட்டுரைகளின் ஏதேனும் ஒரு பகுதி தேவைப்பட்டால் தயவு செய்து http://waytoheaven2011.blogspot.com/ -லிருந்து எடுக்கப்பட்டது என்று குறிப்பிடவும்.