Monday, 8 October 2012

1 நீங்கள் மரித்தப்பின் பரலோகம் செல்வீர்கள் என்பதை உறுதியாக அறிந்துகொள்ள ?


   உங்களுக்கு நித்தியவாழ்க்கை உண்டென்பதையும், நீங்கள் மரிக்கும்போது பரலோகம் செல்வீர்கள் என்பதையும் உறுதியாக அறிந்துகொள்ள விரும்புகிறீர்களா?
"உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டென்று நீங்கள் அறியவும் இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன்" என்று வேதாகமம் கூறுகிறது (1யோவான் 5:13). ஒருவேளை இப்பொழுது நீங்கள் தேவனுக்கு முன்பாக நிற்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். தேவன் உங்களை பார்த்து "நான் ஏன் உன்னை பரலோகத்தில் அனுமதிக்க வேண்டும்? என்று கேட்கிறார். நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள்?" என்ன சொல்வதென்று உங்களுக்கு தெரியாமலிருக்கலாம். நீங்கள் அறிய வேண்டியது என்னவெனில், தேவன் நம்மை நேசிக்கிறார், மேலும் நாம் நித்தியத்தை எங்கு கழிப்போம் என்பதை உறுதியாக அறிந்து கொள்ளக் கூடிய ஒரு வழியையும் தந்திருக்கிறார். வேதாகமம் பின்வருமாறு கூறுகிறது, "தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்"(யோவான் 3:16)

நாம் பரலோகம் செல்லமுடியாதபடி நம்மை தடைசெய்யும் பிரச்சனை என்ன என்பதை நாம் முதலில் அறிந்துகொள்ளவேண்டும். நமது பாவசுபாவமானது நாம் தேவனுடன் ஒரு உறவு வைத்துக் கொள்வதை தடுக்கிறது என்பதுதான் அந்த பிரச்சனை. நாம் சுபாவத்தின் படியும், நம் விருப்பத்தின் படியும் பாவிகளாக இருக்கிறோம். "எல்லோரும் பாவம் செய்து தேவமகிமையற்றவர்களானார்கள் "(ரோமர் 3:23). நம்மை நாமே இரட்சித்துக் கொள்ள முடியாது. "கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள், இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு. ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல" (எபேசியர் 2:8,9). நாம் மரணத்துக்கும் நரகத்துக்கும் பாத்திரர். "பாவத்தின் சம்பளம் மரணம்" (ரோமர் 4:25).

தேவன் பரிசுத்தர். நீதிபரர் மற்றும் பாவத்தை நிச்சயமாகவே கண்டிக்கிறவர். ஆனாலும் அவர் நம்மை நேசிக்கிறார், மேலும் நம் பாவங்களுக்கான மன்னிப்பை அளித்தார். " நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்" என்று இயேசு சொன்னார் (யோவான் 14:6). இயேசு சிலுவையில் நமக்காக மரித்தார்: "ஏனெனில், கிறிஸ்துவும் நம்மைத் தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார்" (1பேதுரு 3:18). இயேசு மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார்: "அவர் நம்முடைய பாவங்களுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்டும், நாம் நீதிமான்களாக்கப்படுவதற்காக எழுப்பப்பட்டும் இருக்கிறார்" (ரோமர் 4:25)

"நான் மரிக்கும்போது உறுதியாக பரலோகத்திற்குச் செல்வேன் என்பதை அறிந்து கொள்வது எப்படி?" என்ற கேள்விக்கு திரும்ப வருவோம். பதில் என்னவெனில், " கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி அப்பொழுது இரட்சிக்கப்படுவீர்கள்" (அப்போஸ்தலர் 16:31). "அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்" (யோவான் 1:12). நீங்கள் நித்திய வாழ்வை இலவச பரிசாக பெற்றுக்கொள்ள முடியும், "தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்" (ரோமர் 6:23).இப்போதே நீங்கள் ஒரு முழுமையான அர்த்தம் நிறைந்த வாழ்க்கையை வாழ முடியும். "நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்" என்று இயேசு சொன்னார் (யோவான் 10:10). நீங்கள் நித்தியத்தை இயேசுவோடு பரலோகத்தில் கழிக்கலாம். ஏனெனில் "நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்" என்று அவர் வாக்களித்திருக்கிறார் (யோவான் 14:3).

நீங்கள் இயேசு கிறிஸ்துவை உங்கள் இரட்சகராக ஏற்றுக்கொண்டு, தேவனிடமிருந்து மன்னிப்பைப் பெற விரும்பினால், நீங்கள் ஜெபிக்கும்படி உங்களுக்காக ஒரு மாதிரி ஜெபம் இங்கு தரப்பட்டிருக்கிறது. இந்த ஜெபத்தையோ அல்லது வேறு ஏதேனும் ஜெபத்தையோ சொல்வது உங்களை இரட்சிக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள். கிறிஸ்துவில் உள்ள நம்பிக்கை மாத்திரமே, பாவங்களுக்கான மன்னிப்பை தர முடியும். இந்த ஜெபமானது அவரில் உள்ள உங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்தி, உங்கள் இரட்சிப்புக்காக அவர் அருளினவற்றிற்காக அவருக்கு நன்றி சொல்வதற்கான ஒரு வழி மாத்திரமே. "தேவனே நான் உமக்கு விரோதமாய் பாவம் செய்திருக்கிறேன் என்பதையும், தண்டனைக்குரியவன் என்பதையும் நான் அறிந்திருக்கிறேன். ஆனால் இயேசு கிறிஸ்துவில் உள்ள விசுவாசத்தின் மூலமாக நான் மன்னிக்கப்படும்படிக்கு எனக்குரிய தண்டனையை அவர் சுமந்தார். இரட்சிப்புக்காக நான் எனது நம்பிக்கையை உம்மில் வைக்கிறேன். நித்திய வாழ்வின் பரிசாகிய உம்முடைய அதிசயமான கிருபைக்கும், மன்னிப்புக்கும் உமக்கு நன்றி! ஆமென்!"

1 comments:

இந்த தளத்தில் வெளியாக்கப்படும் கட்டுரைகளின் ஏதேனும் ஒரு பகுதி தேவைப்பட்டால் தயவு செய்து http://waytoheaven2011.blogspot.com/ -லிருந்து எடுக்கப்பட்டது என்று குறிப்பிடவும்.