இந்த தொடரை எழுத எனக்கு கிருபை செய்த எல்லாம் வல்ல இறைவன் இயேசு கிறிஸ்த்துவிற்கு என் நன்றிகள்.
இசையில் பலப்பிரிவுகள் உண்டு. அதில் இந்தியாவில் கர்நாடக இசை, இந்துஸ்த்தானி இசை, என்று இரு பிரிவுகள் மிகவும் புகழ் வாய்ந்தவை. பாரம்பரியம் மிக்கவை. உலகளவில் மிகவும் புகழ் வாய்ந்தது மேற்கத்திய இசை ஆகும். ஆக மனிதன் வாழும் சூழ்நிலை, இடம், கலாசாரம் ஆகியவற்றை பொறுத்து இசையும் மாறுபடுகிறது.
கர்நாடாக இசை:-
கர்நாடாக இசை என்பது தென்னிந்தியாவில் பழக்கத்தில் உள்ள இசை ஆகும். வட இந்தியாவில் இந்துஸ்த்தானி இசை பழக்கத்தில் உள்ளது. இவை இரண்டும் இந்திய இசையின் இரு பெரும் பிரிவுகள் ஆகும்.
கர்நாடாக இசை பிரதான விதிமுறைகள் என்னவென்றால்,
ஒரு ஸ்வரம் ஒலிக்கும் போது ஸ்ருதியை தவிர வேறு எந்த ஸ்வரமும் ஒலிக்ககூடாது. அதோடு ஒரு ராகம் பாடப்படும்போது அது வேறு எந்த ராகத்தின் சாயலையும் வெளிப்படுத்தக்கூடாது. மேலும் இந்த ஸ்வரத்தில்தான் துவங்கவேண்டும் இந்த ஸ்வரத்தில்தான் நின்று பாடவேண்டும் என்ற கட்டுப்பாடுகள் மிகுந்தது கர்நாடாக இசை ஆகும்.
மேற்கத்திய இசை:-
மேற்கத்திய இசை என்பது பரவலாக உலகம் முழுவது பயன் படுத்தப்படுகின்ற இசை ஆகும். இதில் ஒரு ஸ்வரம் ஒலிக்கும்போது கூடவே அதற்கு ஈடாக வேறு ஸ்வரங்களும் சேர்ப்பது அவர்கள் வழக்கம். இதை “ ஹார்மனி “ என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள்.
மெல்லிசை:-
மெல்லிசை என்பது சாதாரணமாக ஒரு மனிதன் இரசிக்கக்கூடிய வகையில் இருக்கும் இசையாகும். பெரும்பாலும் சினிமா பாடல்கள் மற்றும் நம்முடைய கிறிஸ்த்தவ பாடல்கள் இந்த மெல்லிசை வகையை சார்ந்தவையாகும். மெல்லிசை என்பது பாடுவதற்கு அதிக சிரமமில்லாத எல்லாராலும் பாடக்கூடிய வகையில் இருக்கும். கேற்பதற்கு எந்த ஞானமும் தேவை இல்லை. எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லாத இசை மெல்லிசையாகும்.
நோக்கம்:-
ஒருவர் இசைக்கருவியை கற்கவேண்டும் என்றால், அவர் கர்நாடாக இசையிலோ அல்லது மேற்கத்திய இசையிலோதான் கற்க வேண்டும் என்ற நிலை இல்லாமல் அதிக சிரமம் இல்லாமல் மெல்லிசையில் கற்கலாம் என்பதுதான் இத்தொடரின் நோக்கம் ஆகும். மேலும் இசைக்கருவியை வாசிப்பவர்கள் இசைக்குறியீடுகளை பார்த்து வாசிக்க வேண்டும் என்பதும் இத்தொடரின் நோக்கம் ஆகும். இது தொழில்முறை கலைஞர்களுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும்.
இசைக்குறியீடுகள்:-
தமிழில் ஸ, ரி, க, ம, ப, த நி என்று ஏழு ஸ்வரங்கள் உள்ளன. மேற்கத்திய இசையில் இதை C, D, E, F, G, A, B என்று குறிப்பிடுவார்கள். நாம் தமிழில் ஸ்வரங்கள் என்று சொல்வதை அவர்கள் ஆங்கிலத்தில் “Notes” என்று குறிப்பிடுகிறார்கள்.
ஏழு ஸ்வரங்களில் ஐந்து ஸ்வரங்களை இரண்டாகப் பிரித்துள்ளனர்.
ஸ - பிரிவு இல்லை ஸ -
ரி - பிரிவு உண்டு ரி1 - ரி2
க - பிரிவு உண்டு க1 - க2
ம - பிரிவு உண்டு ம1 - ம2
ப - பிரிவு இல்லை ப
த - பிரிவு உண்டு த1 - த2
நி - பிரிவு உண்டு நி1 - நி2