Thursday, 22 August 2013

கிறிஸ்தவன் யார்? – அல்பர்ட் என். மார்டின்


jesus
கிறிஸ்தவன் யார்? என்ற கேள்விக்கு அனேகர் விதவிதமான பதில்களை அள்ளித் தெளித்துக் கொண்டிருக்கும் இக்காலத்தில் அக்கேள்விக்கான வேதபூர்வமான பதிலைத்
துல்லியமாகத் தருகிறார் அல்பர்ட் என். மார்டின்.
நமது அறிவீனத்தின் காரணமாகவும், அக்கறையற்ற தன்மையின் காரணமாகவும் நமக்கு எந்தவிதமான பாதிப்பையோ அல்லது ஆபத்தையோ விளைவிக்கக் கூடாத பல காரியங்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஒரு மண்ணிறத்து மாடு பச்சைப் புல்லைத்தின்று வெள்ளை நிறத்தில் எப்படிப் பாலைத் தருகிறது? என்பதற்கான விளக்கத்தைக் கொடுக்கக் கூடியவர்களும் நிச்சயமாக நம்மத்தியில் இருக்கவே செய்கின்றனர். நம்மில் அனேகருக்கு ஐன்ஸ்டைனின் கோட்பாட்டைப்பற்றி அடியோடு ஒன்றுமே தெரியாது. ஆனால், அதை விளக்கும்படி யாராவது நம்மை வற்புறுத்தினால் நம்பாடு கஷ்டம்தான். ஐன்ஸ்டைனின் கோட்பாட்டைப்பற்றி நமக்கு ஒன்றும் தெரியாதது மட்டுமல்ல, அதைப்பற்றி நாம் அக்கறை கொள்வதுமில்லை. இருப்பினும், அதைப் பற்றிய நமது அறிவீனமோ, அக்கறைக்குறைவோ அத்தனை பாரதூரமானதோ, ஆபத்தானதோ அல்ல.


ஆனால், அதேவேளை, நமது அறிவீனத்தாலும், அக்கறையின்மையினாலும் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தி, நமக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய ஒரு சில காரியங்களும் இருக்கின்றன. அத்தகைய ஒரு காரியமேகிறிஸ்தவன் யார்?” என்ற வினாவிற்கான விடையாகும். இன்னுமொருவிதத்தில் கூறப்போனால், ஒரு ஆணோ, பெண்ணோ, சிறுவனோ, சிறுமியோ வேதத்தின் அடிப்படையில் தம்மைக் கிறிஸ்தவன் என அழைத்துக் கொள்ளும் தகுதியை எப்போது அடைகிறார்கள்? என்பதே இவ்வினாவாகும்.

ஒரு ஆணோ, பெண்ணோ மெய்க்கிறிஸ்தவரா? என்பதை நாம் மிகச் சாதாரணமானதாக எண்ணித் தீர்மானித்து விடக்கூடாது. இதைப்பற்றி நாமெடுக்கும் தவறான முடிவு பாரதூரமானதும், ஆபத்தை விளைவிக்கக் கூடியதுமாகும். ஆகவே, கிறிஸ்தவன் யார்? என்ற வினாவிற்கான வேதபூர்வமான நான்கு விளக்கங்களை நான் உங்கள் முன் வைக்க விரும்புகிறேன்.

1. ஒரு கிறிஸ்தவன் என்பவன், வேதத்தின் அடிப்படையில் தனது பாவத்தை உண்மையாக உணர்ந்து புரிந்து கொண்டவன்.

உலகிலுள்ள ஏனைய மதங்களையும், கிறிஸ்தவத்தையும் வேறுபடுத்திக் காட்டும் அநேக காரியங்களில் ஒன்று, கிறிஸ்தவம், அடிப்படையிலேயே பாவிகளின் மதம் என்பதே. இயேசு கிறிஸ்துவின் பிறப்பைப்பற்றி யோசேப்புக்கு அறிவித்த கர்த்தருடைய தூதன், “அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பெயரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்என்றான் (மத்தேயு 1:21). பவுல் அப்போஸ்தலன் 1 தீமோத்தேயு 1:15இல்; “பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கீகரிப்புக்கும் பாத்திரமுமானது; அவர்களில் பிரதான பாவி நான்என்று கூறுவதைப் பார்க்கிறோம். லூக்கா 5:31-32இல், இயேசு கிறிஸ்துவே, “பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை. நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன் என்றார்என்று கூறியுள்ளார். தனது பாவங்களை உணர்ந்து அதிலிருந்து விடுபடத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பவனே மெய்க்கிறிஸ்தவன்.

வேதத்தைப் படித்துப் பார்க்கும்போது, பாவத்தைக்குறித்து இருவிதமான பிரச்சனைகளை நாம் ஒவ்வொருவரும் சுமந்து கொண்டிருப்பதை அது சுட்டிக்காட்டுகின்றது. அதாவது நம்மைக் குற்றவாளிகளாகக் காட்டும் ஒரு அறிக்கையையும், கெட்டுப்போன ஒரு இருதயத்தையும் நாம் சுமந்து கொண்டிருப்பதாக அது தெரிவிக்கின்றது. ஆதியாகமம் மூன்றாம் அதிகாரத்தில் ஆரம்பித்து, வேதத்தின் இறுதி நூலான வெளிப்படுத்தல் ஆகமம் வரை, கடவுளுக்கு முன் மனிதன் செய்த பாவத்தையும், அவனது வீழ்ச்சியையும், அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் பற்றி வாசித்துப் பார்ப்போமானால், பாவத்தைப் பற்றி வேதம் போதிக்கும் அனைத்தையும் இவ்விரண்டு அடிப்படைப் பிரிவுகளுக்குள் அடக்கிவிடலாம்.

நம்மைக் குற்றவாளிகளாகக்காட்டும் அறிக்கை என்றால் என்ன? வேதம் போதிக்கின்ற, பாவத்தின் காரணமாக நம்மைப் பிடித்துள்ள குற்றவுணர்வையே இவ்வார்த்தைப் பிரயோகத்தின் மூலம் நான் சுட்டிக்காட்ட முயல்கிறேன். நாம் இவ்வுலகில் பிறக்கு முன்பே குற்றவாளிகள் என்ற அறிக்கையை சுமக்கத் தொடங்கிவிட்டோம் என்று வேதம் போதிக்கின்றது. இப்படியாக, “ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்தது போலவும், எல்லா மனுஷரும் பாவஞ் செய்தபடியால், மரணம் எல்லோருக்கும் வந்தது போலவும் இதுவுமாயிற்றுஎன்று ரோமர் 5:12இல் வாசிக்கிறோம்.

எல்லோரும் எப்போது பாவம் செய்தார்கள்? நாமெல்லோரும் ஆதாமுக்குள் பாவம் செய்தோம், மனித குலமனைத்தையும் பிரநிதித்துவப்படுத்தும்படியாக கடவுள் ஆதாமை நியமித்தார். ஆதாம் பாவம் செய்தபோது நாமும் அவனோடு இணைந்து பாவம் செய்து, அவனோடு பாவத்தில் வீழ்ந்தோம். இதையே பவுல் அப்போஸ்தலன் 1 கொரி. 15:22இல் பின்வருமாறு கூறுகிறார், “ஆதாமுக்குள் எல்லோரும் மரிக்கிறதுபோல, கிறிஸ்துவுக்குள் எல்லோரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள். ஏதேன் தோட்டத்தில் மனிதன் பாவத்தோடு படைக்கப்படவில்லை. ஆனால், ஆதாம் பாவம் செய்த உடனேயே நாமும் அப்பாவத்திற்குப் பொறுப்பாளிகளாக குற்றம் சுமத்தப்பட்டோம். ஆதாமின் மூல பாவத்தினால் நாமும் வீழ்ச்சியடைந்து சபிக்கப்பட்ட மனுக்குலத்தின் ஓர் அங்கமாக இருந்து வருகிறோம்.

அதுமட்டுமல்லாமல், நாம் பிறந்த பின்பு செய்கின்ற பாவச்செயல்களினால் நமது குற்ற உணர்வு மேலும் அதிகரிக்கின்றது என்று வேதம் போதிக்கின்றது. ஒரு பாவமும் செய்யாமல் நன்மையே செய்யத்தக்க நீதிமான் பூமியில் இல்லை என்று வேதம் கூறுகின்றது (பிரசங்கி 7:20). ஒவ்வொரு சிறு பாவமும் நமது குற்றவுணர்வை மேலும் அதிகப்படுத்துகிறது. பரலோகத்தில் நம்மைப்பற்றி இருக்கும் அறிக்கை ஒரு கறைபடிந்த அறிக்கை. கர்த்தர் நமது மானுட அனுபவங்களையெல்லாம், வளைந்து கொடுக்காத வரையறுக்கப்பட்ட ஒருகோட்பாட்டின் அடிப்படையில் அளந்து பார்க்கிறார். அத்தகுதிக்கோட்பாடு நாம் செய்யும் செயல்களை மட்டுமல்லாமல், நமது உள்ளத்து உணர்வுகளையும், எண்ணங்களையும்கூட அளந்து பார்க்கின்றது. இதைப்பற்றிக்கூறும் இயேசு கிறிஸ்து, நீதியற்ற கோபமே கொலைக்கு மூலகாரணமென்றும், ஒரு பெண்ணை இச்சையோடு பார்ப்பது விபச்சாரமென்றும் போதித்துள்ளார் (மத்தேயு 5:22, 28).

தேவன் நம்மைப்பற்றிய மிகவிளக்கமான ஒரு அறிக்கையை வைத்திருக்கிறார். நியாயத்தீர்ப்பு நாளில் திறக்கப்படப்போகின்ற புத்தகங்களுடன் இவ்வறிக்கையும் இருக்கும் (வெளி. 20:12). அப்புத்தகங்களில், அவற்றின் தகுதிகளுக்கு உட்பட்டு நடக்காத அல்லது அவற்றிற்கு எதிரான நமது ஒவ்வொரு எண்ணங்களும், அனுபவங்களும், செயல்களும் பதிவு செய்யப்பட்டிருக்கும். அதனால்தான், நம்மைப் பற்றி குற்றஞ்சாட்டும் அறிக்கையொன்றிருப்பதாகக் கூறுகிறோம். மெய்யான, ஜீவனுள்ள தேவனுக்கெதிராக நாம் செய்துள்ள பாவங்களினால் கறைபடிந்து குற்றவுணர்வுடன் நிற்கிறோம். இதனாலேயே, வேதமும் முழு மனுக்குலமும் தேவனுக்கு முன்பாக குற்றஞ் சாட்டப்பட்டு நிற்கின்றது என்று கூறுகிறது (ரோமர் 3:19).

உங்களைத் தனிப்பட்டவிதத்தில் குற்றவாளியாகக் காணும் இவ்வறிக்கை பற்றிய எண்ணம் உங்கள் இருதயத்தை எப்போதாவது சுட்டெரித்தது உண்டா? ஆதாம் பாவம் செய்தபோது, தேவன் உங்களையும் குற்றவாளியாகக்கண்டு, அவரது, நீதிக்கும், பரிபூரணமான பரிசுத்தத்திற்கும் எதிராக நீங்கள் பேசியுள்ள ஒவ்வொரு வார்த்தைக்கும் பொறுப்பாளியாக உங்களைக் குற்றம் காண்கிறார் என்ற உண்மையைப் பற்றி சிந்தித்துப் பார்த்திருக்கிறீர்களா? அவரது நியாயப்பிரமாணத்திற்கு எதிராக நீங்கள் தொட்டு, சொந்தமாக்கிக் கொண்ட அனைத்துப் பொருட்களையும் அவர் அறிவார். அவருடைய சத்தியத்திற்கு எதிராக நீங்கள் பேசியுள்ள ஒவ்வொரு வார்த்தையையும் அவர் அறிவார். அவரது நியாயப்பிரமாணத்திற்கு எதிராக நீங்கள் செய்துள்ள ஒவ்வொரு செயலுக்கும் பதிலளிக்கும்படியாக உங்களை தன் முன் வரும்படி அழைக்கும் அதிகாரம் அவருக்கிருக்கிறது என்ற உண்மை உங்களுக்கு எப்போதாவது புலப்பட்டிருக்கின்றதா?

தேவனுக்கு முன் நம் அனைவரையும் குற்றவாளியாகக் காணும் இக்குற்றப் பத்திரிகை மட்டுமல்ல நமது பிரச்சனை, அத்தோடு, நாம் கேடான ஒரிருதயத்தையும் கொண்டிருக்கிறோம். பாவம், நாம் செய்துள்ள செயல்களினால் மட்டும் ஏற்படாமல், நமது தன்மையிலிருந்தும் தோன்றியது என்று வேதம் தெரிவிக்கிறது. ஆதாம் பாவம் செய்தபோது, தேவனுக்கு முன் குற்றவாளியாக மட்டும் நிற்காமல், தன்னில் முழுதாக கறைபடிந்து நின்றான்.

இதைப்பற்றி எரேமியா 17:9, “எல்லாவற்றைப் பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும், மகாகேடுள்ளதுமாயிருக்கிறது, அதை அறியத்தக்கவன் யார்?” என்று கேட்டு விளக்குகின்றது. இயேசு கிறிஸ்து இதைக்குறித்து மாற்கு 7:21இல், மனுஷருடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாத சிந்தனைகள் புறப்பட்டு வருவதாகக்கூறி, கொலை, விபச்சாரம், பெருமை போன்ற நாம் அன்றாடம் பத்திரிகையில் வாசிக்கும் எல்லா பாவகரமான செயல்களையும் அட்டவணையிட்டுத் தருகிறார். இயேசு இவையனைத்துமே, நமது இருதயமாகிய கேடான கிணற்றிலிருந்து புறப்பட்டு வருவதாகக் கூறுகிறார். கொலை, விபச்சாரம், பெருமை, களவுகள் ஆகியவை சீரழிந்த நமது சமுதாயத்தின் உந்துதலாலேயே ஏற்படுகின்றன என்று அவர் கூறவிவ்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும். இவ்வாறே நமது சமூகவியல் வல்லுனர்கள் தொடர்ந்து கூறி வருகிறார்கள். சமுதாயத்தின் தன்மையே எதிர்ப்பு மனப்பான்மையையும், கேட்டையும் தோற்றுவிப்பதாக அவர்கள் கூறிவருகிறார்கள். ஆனால், இயேசு மனிதனின் கேடான இருதயத்தில் இருந்து இவை புறப்படுவதாகக் கூறுகிறார்.

வேதம் கூறுவதுபோல் நாம் ஒவ்வொருவரும் மகா கேடுள்ள ஒரு இருதயத்தைக் கொண்டிருக்கிறோம். ரோமர் 8:7, “மாம்சசிந்தை தேவனுக்கு விரோதமான பகை; அது தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்படியாமலும், கீழ்ப்படியக்கூடாமலும் இருக்கிறதுஎன்று கூறுகிறது. இங்கே, மாம்ச சிந்தை, அதாவது தேவனால் புதுப்பிக்கப்படாத சிந்தை, தேவனுக்கெதிரான ஒருவகையான விரோதத்தைக் கொண்டிருக்கிறது என்று பவுல் கூறவில்லை என்பதை எண்ணிப்பாக்க வேண்டும். மாறாக, மனிதனுடைய மாம்ச சிந்தையே விரோதமான பகை என்று அவர் கூறுகிறார். ஒவ்வொரு மனிதனுடைய இருதயமும், இயற்கையிலேயே தேவனுக்கு எதிராக உயர்த்தப்பட்டுள்ள முஷ்டியாகவே இருக்கின்றது. கேடான இருதயம் பாவத்தின் மேல் அன்பு செலுத்துகிறது; பாவத்தின் ஊற்றாக இருக்கின்றது; தேவனை விரோதிக்கின்றதுஇதுவே கேடான இருதயத்தின் இயற்கைத்தன்மை.

உங்களுடைய இருதயத்தின் கேடான தன்மையைக் குறித்து தனிப்பட்டவிதத்தில் நீங்கள் எப்போதாவது கவலையடைந்ததுண்டா? இவ்வாறு கேட்பதன் மூலம், மனிதன் பாவி என்ற கோட்பாடை நீங்கள் நம்புகின்றீர்களா? என்று நான் கேட்கவில்லை. மாம்சத்தன்மையும், கேடான இருதயமும் நிச்சயம் உண்டு என்று கூட நீங்கள் ஒருவேளை நம்பக்கூடும். நான் கேட்பதென்னவென்றால், உங்களைப்பற்றிய குற்றப்பத்திரிகையும், உங்களுடைய இருதயம் கேடானது என்ற உண்மையும், தனிப்பட்டவிதத்தில் உள்ளார்ந்த, ஆழமான கவலையை உங்களுள்ளத்தில் ஏற்படுத்தியதுண்டா? என்பதுதான். பரிசுத்தமான தேவனுக்கு முன்பாக, உங்களுடைய மோசமான குற்றமுள்ள இருதயத்தின் நிலைமையை நீங்கள் தனிப்பட்டவிதத்தில் உணர்ந்ததுண்டா? எல்லாவற்றைப் பார்க்கிலும் மகா கேடுள்ளதும், திருக்குற்றதுமாக உங்கள் இருதயம் இருக்கின்றது என்ற உண்மையை சந்தித்திருக்கிறீர்களா?

தன்னுடைய பாவத்தைப்பற்றி ஆழமாக அறிந்து உணர்ந்தவனே வேதபூர்வமான கிறிஸ்தவன். தமது பாவத்தின் கோரத்தின் சுமையை எல்லோரும் ஒரேவிதத்தில் உணர்வதில்லை. அது ஆளுக்கு ஆள் வித்தியாசமானதாக இருக்கும். அதை ஒருவர் அனுபவபூர்வமாக உணர்ந்து கவலை கொள்ளும் கால அளவும் ஆளுக்கு ஆள் வேறுபடும். இவ்வனுபவங்கள் ஆளுக்கு ஆள் வேறுபட்டபோதும் மாபெரும் வைத்தியரான இயேசு கிறிஸ்து தன்னைப் பாவியாகக் கண்டுணராத எந்த ஒரு மனிதனையும் இரட்சிப்பதில்லை. “நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன் (மத்தேயு 9:13) என்று இயேசு கூறியுள்ளார். நீங்கள் தனிப்பட்டவிதத்தில் உங்களைப் பாவி என்று வாழ்க்கையில் ஆழமாக உணர்ந்த வேதபூர்வமான கிறிஸ்தவரா?

2. வேதபூர்வமான கிறிஸ்தவன் என்பவன், பாவத்திலிருந்து விடுபடுவதற்கான ஒரே தெய்வீக வழி முறையை ஆழமாக அறிந்துணர்ந்தவன்.

பாவியாகிய மனிதனின் விடுதலைக்காக தேவனே நேரடியாக ஒரு காரியத்தைச் செய்திருக்கிறார் என்று வேதம் அடிக்கடி சொல்கிறது. சிறுவயதிலிருந்தே நம்மில் சிலர் மனப்பாடம் செய்துள்ள பின்வரும் வசனங்கள் தேவன் எடுத்துள்ள அத்தகைய நடவடிக்கையைப்பற்றி விளக்குகின்றன. “தேவன் இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்து தனது ஒரே பேறான குமாரனைத் தந்தருளினார் (யோவான் 3:16); “நாம் தேவனிடத்தில் அன்பு கூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்பு கூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவர்த்தி செய்கிற கிருபாதாரப்பலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது (1 யோவான் 3:10); “தேவனே இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் நம்மில் அன்பு கூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே . . .” போன்ற வசனங்கள் தேவன் எடுத்துள்ள நடவடிக்கையைச் சுட்டிக் காட்டுகின்றன.

கிறிஸ்தவ விசுவாசத்தின் தனித்தன்மை என்னவென்றால், அது தேவனுடைய துணையோடு நமது வாழ்க்கையின் ஓட்டை, ஒட்டடைகளை நாமே அடைத்துக்கொள்ள உதவும் ஒருவித சுயசமய வழிமுறையல்ல. கிறிஸ்தவ விசுவாசத்தின் தனித்துவமானது, கிறிஸ்து மட்டுமே பாவிகளின் இரட்சகராக இருப்பதுமட்டுமன்றி, நமது எல்லாத் தேவைகளையும் நிவர்த்தி செய்யும் துணையாக அவர் மேலிருந்து நம்மை நாடிவந்து நாமிருக்கும் இடத்திலேயே நம்மைச் சந்திக்கிறார் என்பதிலேயே தங்கியிருக்கிறது. எம்மை நாமே எவ்விதத்திலும் உயர்த்திக் கொள்ள முடியாது. நம்மால் ஒருபோதும் செய்ய முடியாததை தேவனே மனிதனுடைய நிலைமையில் தலையிட்டு செய்திருக்கிறார்.

வேதத்தை வாசித்துப் பார்க்கும்போது தேவனுடைய தெய்வீக வழிமுறை மூன்று தன்மைகளைக் கொண்டமைந்திருப்பதைப் பார்க்கலாம்:

(). முதலாவதாக பாவத்திலிருந்து மனிதனை விடுவிப்பதற்கான தெய்வீக வழிமுறை ஒரு நபரில் தொகுத்துக் காணப்படுகின்றது. அந்நபரே நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, மனித உருவெடுத்து, மானிட தன்மையைத் தனது தெய்வீகத்தன்மையுடன் ஒருங்கிணைத்துக் கொண்ட நித்திய வார்த்தை. தேவனுக்குமுன் குற்றஞ்சாட்டப்பட்டு குற்றப் பத்திரிகையையும், கேடான இருதயத்தையும் சுமந்து கொண்டிருக்கும் மனிதனின் விடுதலைக்காக தேவன் தந்திருக்கும் வழிமுறை இதுதான்- தேவனும் மனிதனுமாக, அவ்விரு தன்மைகளையும் தன்னில் எப்போதைக்கும் உள்ளடக்கிக் கொண்டுள்ள இரட்சகரே அவ்வழிமுறை. வேதபூர்வமாக உங்களுடைய பாவத்திற்கு முடிவு ஏற்பட வேண்டுமானால், தனிப்பட்ட முறையில் நீங்கள் இயேசு கிறிஸ்துவை நாடி வர வேண்டும். இதுவே கிறிஸ்தவ விசுவாசத்தின் தனித்தன்மை. பாவியாகிய மனிதன் தனது தேவைகள் அனைத்துடனும் கிறிஸ்துவின் கிருபையின் பூரணத்துவத்தால் அவரோடு இணைக்கப்படுதல்பாவி தனது தேவைகளுடனும், கிறிஸ்து தனது வல்லமையுடனும் நற்செய்தியால் ஒருங்கிணைக்கப்படுதல், இதுவே பாவிகளுக்கான தேவனின் மகிமையுள்ள நற்செய்தியாகும்.

(). இரண்டாவதாக, பாவ நிவாரணத்திற்கான தெய்வீக வழிமுறை, இயேசு கிறிஸ்து மரித்த சிலுவையை மையமாகக் கொண்டது. வேதத்தை வாசித்துப் பார்க்கின்றபோது பாவநிவாரணத்திற்கான தெய்வீக வழிமுறை சிறப்பானவகையில் சிலுவையை மையமாகக் கொண்டமைந்துள்ளதைப் பார்க்கிறோம். யோவான் ஸ்நானன் இயேசுவைப் பார்த்தபோது, பழைய ஏற்பாட்டுப் பலியாட்டை சுமந்து தீர்க்கின்ற தேவ ஆட்டுக்குட்டி என்று அழைப்பதைப் பார்க்கின்றோம். இயேசு கிறிஸ்துவும் கூட, மனுஷகுமாரன் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியம் செய்யவும், அனேகரை மீட்கும் பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் என்றார்.

மெய்யான நற்செய்திப் பிரசங்கம் சிலுவையை மையமாகக் கொண்டிருப்பதால் பவுல் அப்போஸ்தலனும் கூட அதனை சிலுவையைப் பற்றிய பிரசங்கம் என்று கூறியுள்ளார். “சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது. இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவ பலனாயிருக்கிறது (1 கொரி. 1:18). பவுல், கிரேக்கப் போதனைகளுக்கும், வெறும் அறிவு ஜீவிகளுக்கும் பெயர்போன கொரிந்து நகருக்கு வந்தபோது, அவர்களுடைய பேச்சுத்திறனைப் பின்பற்றாது, “இயேசு கிறிஸ்துவை, சிலுவையில் அறையப்பட்ட அரையேயன்றி, வேறொன்றையும் உங்களுக்குள்ளே அறியாதிருக்கத் தீர்மானித்திருந்தேன் (1 கொரி. 2:2) என்று கூறியதைப் பார்க்கிறோம்.

சிலுவையை நாம் ஒரு வெறும் போதனையாகவோ அல்லது சமயஅடையாளமாகவோ கருதிவிடக்கூடாது. தேவன் அதைக்குறித்துச் சொல்லியிருப்பவற்றையே சிலுவையின் மெய்ப்பொருளாகக் கருத வேண்டும். சிலுவையிலேயே தேவன் தனது மக்களின் பாவங்கள் அனைத்தையும், தனது குமாரனின் மேல் சுமத்தினார். அச்சிலுவையில் இயேசு கிறிஸ்து நமது சாபங்களைத் தன்மேல் சுமந்தார். “கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக் கொண்டார்என்று பவுல் கூறுகிறார் (கலா. 3:13). “அத்தோடு, நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார் (2 கொரி. 5:21) என்றும் பவுல் கூறுவதைப் பார்க்கிறோம்.

சிலுவையானது, சுயநலமற்று தன்னையே ஒப்புக் கொடுக்கும் தூய அன்பினை விளக்க முடியாத ஒரு அடையாளமல்ல; மாறாக தேவன், நீதியுள்ளவராக இருந்தும் குற்றமுள்ள பாவிகளை எப்படி மன்னிக்க முடியும் என்பதை விளக்கிக்காட்டும் ஒரு நினைவுச்சின்னம். தேவன் சிலுவையில், தனது மக்களின் பாவங்களை கிறிஸ்துவின் மேல் சுமத்தியபின், தனது மக்களின் பிரதிநிதியாகிய கிறிவை நியாயம்தீர்த்தார். அச்சிலுவையிலே தனது குமாரன், என் தேவனே, என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர் என்று கதறுமளவுக்கு எந்தவித பரிவும் காட்டாமல் தனது கோபத்தை அவர் மேல் கொட்டினார் (சங்கீதம் 22:1; மத்தேயு 27:46).

கல்வாரியிலே தேவன், நம் கண்களுக்குத் தெரியாத, ஆன்மீக உலகில் என்ன நிகழ்கிறது என்பதை இவ்வுலகில் நடத்திக் காட்டினார். முழு உலகத்தையும் இருட்டினால் நிரப்பி, என் பாவங்களுக்காகவும், உங்களுடைய பாவங்களுக்காகவும் தனது குமாரன் எத்தகைய இருளான நரகத்திற்குள் தள்ளப்பட்டார் என்று தேவன் காட்டுகிறார். சிலுவையிலே ஒரு குற்றவாளியைப்போல கிறிஸ்து தொங்கினார். அன்றைய சமுதாயம், அவரைப் பார்த்து, தொலைத்துக் கட்டுங்கள் கொல்லுங்கள் என்று அலறியபோது தேவன் அதைக் குறித்து ஒன்றுமே செய்யவில்லை. இதன் மூலம் நமது ஊனக் கண்களால் பார்க்க முடியாத இடத்தில் என்ன நடக்கின்றது என்பதை, நம்முன்னால் தேவன் நடத்திக் காட்டுகிறார். அவர் தனது குமாரனை ஒரு குற்றவாளியைப்போல நடத்தினார். நம்மேல் காட்ட வேண்டிய தனது ஆக்ரோசமான கோபாக்கினையை இயேசுவின் மேல் கொட்டி, தனது ஆவியில் அவர் அதனை அனுபவித்துணருமாறு செய்தார்.

(). மூன்றாவதாக, தேவனின் பாவமீட்புக்கான வழி அனைத்து மனிதர்களையும் மீட்கப் போதுமானதாக இருப்பதோடு, எந்தவிதமான ஏற்றத்தாழ்வுமின்றி எல்லா மனிதர்களுக்கும் கொடுக்கப்பட்டிருக்கின்றது. பாவத்தைப்பற்றிய எந்தவிதமான உணர்வுமின்றி, தேவன் பாவிகளை மன்னித்துவிடுவார் என்று நாம் சுலபமாக எண்ணிவிடலாம். ஆனால், பாவம் என்றால் என்ன என்று நாம் சிந்தித்துப் பார்த்துப் புரிந்து கொள்ளும்போது நமது எண்ணங்கள் மாற்றமடைகின்றன. அப்போது, நாம் நம்மை வெறும் சாதாரண மண்புழுக்களாகப் பார்க்கிறோம்; அவருக்குள் நாம் பிழைக்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம் (அப்போஸ். 17:28) என்று எழுதியிருக்கிறபடி தேவனின் கரத்திலேயே நமது வாழ்வும் ஜீவனும் இருக்கிறதென்ற உண்மையைப் புரிந்து கொள்கிறோம்.

தேவ தூதர்கள் தமக்கெதிராக நடந்தபோது அவர்களை நித்திய இருட்டுக்கு ஒப்படைத்த தேவனுக்கு எதிராக நடக்கத் துணிந்த நமது நிலைமையைப்பற்றி நாம் ஆழ்ந்து சிந்தித்துப் பார்க்கத் தொடங்குகிறோம். பரிசுத்தமான தேவன் நமது கொந்தளிக்கும் ஆவியையும், இருதயத்தின் கேட்டையும் பார்க்கிறார் என்று அறிக்கையிடுகிறோம். ஆகவே, ஆண்டவரே! நீர் நீதியுள்ளவராக மட்டுமே இருக்க முடியும், எனது பாவத்திற்காக நீர் என்னைத் தண்டிப்பதானால் தேவகோபத்தையும், நியாயத்தீர்ப்பையும் மட்டுமே நான் சந்திக்க வேண்டும், என்னை மன்னித்துவிட்டு தொடர்ந்து நீர் எப்படி நீதியுள்ளவராக இருக்க முடியும்? நீதியுள்ள தேவனாக இருக்கும் நீர், உமக்கு எதிராக நடந்த பொல்லாத தேவதூதர்களுடன் என்னையும் நித்திய தண்டனைக்கு ஒப்படைப்பதைத் தவிர எவ்வாறு வேறெதையும் செய்ய முடியும்? என்று கதறுகிறோம்.

எமது பாவத்தின் தன்மையை நாம் சரியாகப் புரிந்து கொள்ளும்போது, அப்பாவத்திற்காக தேவனின் மன்னிப்பை நாடுவதென்பது இதுவரை நமது மனம் சந்தித்திராத பிடிவாதமான ஒரு போராட்டமாக அமைகின்றது. அப்போதே, நாம் ஒரு நபரில், அதாவது சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவாகிய அந்நபரில், எல்லா மனிதர்களின் பாவநிவராணத்திற்கும் போதுமானதைத் தேவன் அளித்திருப்பதோடு, அதை எல்லா மனிதர்களுக்கும் எந்தவிதமான ஏற்றத்தாழ்வுமின்றி அளிக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

தேவன், நாம் கிறிஸ்துவைப் பெற்றுக் கொள்வதற்காக எந்த நிபந்தனையையும் விதித்திருந்தால், “அந்நிபந்தனைகளை என்னால் நிறைவேற்ற முடியாது; அவற்றை நிறைவேற்றும் தகுதி எனக்கில்லை, என்று நாம் கூறியிருப்போம். ஆனால், தேவன் அளிக்கும் உன்னதமான விடுதலை, ஏசாயாவின் மொழியில், “, தாகமாயிருக்கிறவர்களே, நீங்கள் எல்லோரும் தண்ணீர்களண்டைக்கு வாருங்கள்; பணமில்லாதவர்களே நீங்கள் வந்து வாங்கிச் சாப்பிடுங்கள், நீங்கள் வந்து பணமுமின்றி, விலையுமின்றித் திராட்சை இரசமும் பாலும் கொள்ளுங்கள் (ஏசாயா 55:1) என்று அறைகூவலிடுகிறது. அத்தோடு இயேசுவும், “என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை (யோவான் 6:37) என்று வலியுறுத்திக் கூறுகிறார்.

இயேசு கிறிஸ்துவுக்குள் கொடுக்கப்பட்டுள்ள இலவசமான கிருபையின் அழகைக் கவனித்துப் பாருங்கள்! இனித் தேவன் வானத்தில் இருந்து வெளிவந்து, நமது பெயரைக் கூறி, நாம் அவரிடத்தில் வர வேண்டும் என்ற கட்டளையிருக்கிறது என்று நம்மிடம் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அக்கிருபையின் அழைப்பை. “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்என்று கூறி அவரது ஒரே குமாரன் நமக்குக் கொடுக்கிறார்.

3. தேவனளிக்கும் பாவநிவாரணத்தைப் பெற்றுக் கொள்வதற்கான அவரது நிபந்தனைகளை முழுமனத்தோடு ஏற்று, அவற்றிற்கு இசைந்து நடப்பவனே வேதபூர்வமான கிறிஸ்தவன்.

அத்தகைய தேவ நிபந்தனைகள் இரண்டாகும்: முதலாவது மனந்திரும்புதல், இரண்டாவது விசுவாசம். இயேசு கிறிஸ்துவின் ஊழிய ஆரம்பத்தைக் குறித்து வேதம் பின்வருமாறு கூறுகிறது: “யோவான் காவலில் வைக்கப்பட்டபின்பு, இயேசு கலிலேயாவிலே வந்து, தேவனுடைய இராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, காலம் நிறைவேறிற்று, தேவனுடைய இராஜ்யம் சமீபமாயிற்று; மனந்திரும்பி சுவிசேஷத்தை விசுவாசியுங்கள் (மாற்கு 1:14-15) என்றார். தான் உயிர்த்தெழுந்தபின் இயேசு தனது சீடர்களைப் பார்த்துஅன்றியும் மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் எருசலேம் தொடங்கிச் சகல தேசத்தாருக்கும் அவருடைய நாமத்தினாலே பிரசங்கிக்கப்படவும் வேண்டியது (லூக்கா 24:47) என்று கூறினார். பவுல்தேவனிடத்திற்கு மனந்திரும்புவதைக் குறித்தும், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதைக் குறித்தும் நான் யூதருக்கும், கிரேக்கருக்கும் சாட்சியாக அறிவித்தேன் (அப்போஸ். 20:21) என்று கூறியிருப்பதையும் பார்க்கிறோம்.

தெய்வீக வழிமுறையைப் பெற்றுக் கொள்ள விதிக்கப்பட்டிருக்கும் தெய்வீக நிபந்தனைகள் யாவை? நாம் மனந்திரும்ப வேண்டும்; அடுத்ததாக நாம் விசுவாசிக்க வேண்டும். இவ்விரண்டையும் இவ்வாறாகப் பிரித்து ஆராய்வது அவசியமாக இருந்தபோதும், மனந்திரும்புதல் விசுவாசத்தோடு தொடர்பற்றதாகவோ, அல்லது விசுவாசம் மனந்திரும்புதலோடு தொடர்பற்றதாகவோ இருக்கிறது என்று நாம் கருதிவிடக்கூடாது. மெய்யான மனந்திரும்புதல் விசுவாசத்துடன் ஒன்றறக் கலந்ததாகவும், மெய்யான விசுவாசம் மனந்திரும்புதலோடு ஒன்றறக் கலந்ததாகவும் உள்ளது. இது எப்படியெனில், தேவனுடைய தெய்வீக வழிமுறை ஏற்றுக் கொள்ளப்படும்போது அங்கே, விசுவாசித்து மனந்திரும்பும் மனிதனையும், மனந்திரும்பி விசுவாசிக்கும் மனிதனையும் பார்க்கலாம்.

மனந்திரும்புதல் என்றால் என்ன? நமது பெரியோர்கள் அருளித் தந்த வினாவிடைப் பயிற்சிக் கோட்பாடு இதற்கு அருமையான பதிலை அளிக்கிறது. மனந்திரும்புதல் என்றால் ஒரு பாவி தனது பாவத்தை மெய்யாகவே உணர்ந்து அப்பாவத்திற்காக வருந்தி, அதனை வெறுத்து, விலக்கி, கிறிஸ்துவுக்குள்ளான தேவனின் கிருபையை ஏற்று, முழு மனதோடும், வைராக்கியத்தோடும் ஒரு புதிய கீழ்ப்படிதலுக்காக அவரை நாடி ஓடச் செய்யும் இரட்சிக்கும் கிருபையே மனந்திரும்புதலாகும்.

கெட்ட குமாரன் தூர தேசத்தில் தனது நிலையை உணர்தலே மனந்திரும்புதலாகும், தனது தகப்பனோடு வீட்டில் இருப்பதை விட்டு, ஆஸ்தியில் தனது பங்கைப்பெற்றுக் கொண்டு, தூர தேசத்திற்குப் போய், தவறான வழியில் அதை இல்லாமலாக்கினான் கெட்ட குமாரன். தனது தவறான பாவச் செயல்களால் கெட்டுப்போய் புத்தி தெளிந்தபோது, அவன், என் தகப்பனுடைய கூலிக்காரர் எத்தனையோ பேருக்கு பூர்த்தியான சாப்பாடு இருக்கிறது நானோ பசியினால் வாடுகிறேன், நான் எழுந்து என் தகப்பனிடத்திற்குப் போய், “தகப்பனே பரத்துக்கு விரோதமாகவும், உமக்கு முன்பாகவும் பாவஞ் செய்தேன். இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரனல்ல, உம்முடைய கூலிக்காரரில் ஒருவனாக என்னை வைத்துக் கொள்ளும் என்று சொல்வேன்என்று சொல்லி எழுந்து போனான்.

கெட்ட குமாரன் தனது பாவத்தை உணர்ந்தபோது அவன் அங்கேயே அமர்ந்து அதைப்பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கவில்லை. அதைப்பற்றி எண்ணிப் பாட்டுப்பாடவில்லை. தனது தகப்பனுக்கு அதைப்பற்றி கடிதம் எழுதவில்லை. வேதம் சொல்கிறது அவன் எழுந்து புறப்பட்டு தனது தகப்பனிடத்தில் வந்தான் என்று. பாவத்தில் உழன்று கொண்டிருக்கும் தனது நண்பர்களை அவன் கைகழுவிவிட்டு வந்தான். தனது பழைய வாழ்க்கையாடு தொடர்புடைய அனைத்தையும் அவன் உதறித்தள்ளிவிட்டு வந்தான். வீட்டிற்குப் போக வேண்டும் என்று அவனை உந்தித்தள்ளியது எது? பரந்த இருதயத்தைக் கொண்டு, கருணையே உருவாக, நீதியோடு தனது வீட்டை ஆண்டு கொண்டு இருக்கும் ஒரு தந்தை அங்கே இருக்கிறார் என்ற நம்பிக்கைதான். அவன் தன் தந்தைக்கு கடிதம் எழுதி, தந்தையே இங்கே நிலைமை சரியாக இல்லை, எனது மனச்சாட்சி இரவெல்லாம் என்னைக் கொல்கிறது. எனக்குப் பணமனுப்பி உதவி செய்யக்கூடாதா? ஒரு முறை இங்கே வந்து என்னைப் பார்த்து ஆறுதல் சொல்லி என்னை ஆனந்தப்படுத்தக்கூடாதா? என்று கேட்கவில்லை. அவனுக்கு தேவைப்பட்டது வெறும் மனச்சமாதானம் அல்ல; நீதிமானாக வேண்டியதுதான். அதனால்தான் அவன் தூர தேசத்தை விட்டு விலகி வந்தான்.

கெட்ட குமாரன் திரும்பி வந்தபோது தன் தகப்பனை நாடித் தான் எடுத்த தீர்மானத்தைப் பற்றி பெருமையடித்துக் கொள்ளவில்லை. அவனது வருகையைப்பற்றி இயேசு மிக அழகாக வர்ணித்திருப்பதைப் பாருங்கள். “அவன் தூரத்தில் வரும்பொழுதே, அவனுடைய தகப்பன் அவனைக்கண்டு, மனதுருகி, ஓடி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான் (லூக்கா 16:20).

இன்று, சுவிசேஷக்கூட்டங்களில் கொடுக்கப்படும் அழைப்பை ஏற்று முன்னால் போய், ஒரு சிறிய ஜெபத்தைச் செய்து, தேவனுக்காக தீர்மானத்தை எடுப்பதன் மூலம் அவருக்குப் பெரும் சேவை செய்துவிட்டதாகப் பலர் எண்ணிக் கொண்டிருக்கின்றனர். இதற்கும் மெய்யான மனந்திரும்புதலுக்கும் எந்தத் தொடர்புமில்லை. பரலோகத்திலிருக்கும் பெரியவரும், கிருபையுடையவரும், பரிசுத்தமானவரும் அன்புடையவருமான தேவனுக்கு எதிராகப் பாவம் செய்துவிட்டேன்; அவரது பிள்ளை என்று என்னை அழைத்துக் கொள்ள எந்தத் தகுதியும் எனக்கு இல்லை என்று தேவனிடம் கதறுவதே மெய்யான மனந்திரும்புதலுக்கு அடையாளம். அதேநேரம், நான் எனது பாவத்தைவிட்டு விலகி, அதற்குப் புறமுதுகு காட்டித் தாழ்மையுடன், தேவன் எனக்குக் கருணை காட்டுவாரோ? என்று சிந்தனையோடு திரும்பிவரும்போதுஅதிசயங்களுக்கெல்லாம் அதிசயமாகஎன் தந்தை என்னை வழியில் சந்தித்து அன்போடு, தனது கருணையின் கரங்களால் என்னைக் கட்டித் தழுவுகிறார். நான் உணர்ச்சிவசப்படாமல், மெய்யாகவே சொல்கிறேன்அவர் மனந்திரும்பிவரும் பாவியை தனது மன்னிப்பாலும், மீட்பின் அன்பாலும் மூச்சுத் திணற வைக்கிறார்.

ஆனால், கெட்ட குமாரன் தனது பாவத்தில் திளைத்து, வேசித்தனத்தில் புரண்டு கொண்டிருக்கும் வேளையில் தந்தை அவனை அரவணைக்கவில்லை. உலக ஆசைகளுக்கும், இச்சைகளுக்கும் தம்மைப் பறிகொடுத்திருப்பவர்களுக்கு நான் சொல்வது புரிகிறதா? பெற்றோர்களுடனும், சமுதாயத்தில் மற்றவர்களுடனும் நடந்து கொள்ளும் முறையிலும், சொந்த வாழ்க்கையில் எப்படி நடந்து கொள்கிறீர்கள் என்பதன் மூலமுமே உங்களுடைய சுயரூபத்தை நீங்கள் வெளிப்படுத்துகிறீர்கள்.

உங்களில் சிலர், வேசித்தனத்தில் ஈடுபட்டிருக்கலாம், அல்லது பெண்களுடன் தவறான உறவு வைத்திருக்கலாம், அல்லது தொலைக்காட்சியில் பார்க்கக்கூடாத படங்களை பார்த்துச் சுவைத்துக் கொண்டிருக்கலாம், இதையெல்லாம் செய்து கொண்டு உங்களைத் தேவனின் பிள்ளை என்று அழைத்துக் கொள்கிறீர்கள். பாவத்தோடு உறவாடிக்கொண்டு, ஞாயிற்றுக்கிழமை தேவனின் ஆலயத்திற்குப் போய்வருகிறீர்கள். இது உங்களுக்கே வெட்கமாக இல்லையா? பாவத்தை விட்டு விலகியோடுங்கள். மாம்ச இச்சைகளுக்கு இடம் கொடுத்து நடக்கும் வழிமுறைகளை இன்றே உங்கள் வாழ்க்கையில் அழித்துப் போடுங்கள். பாவத்தை விட்டு விலகியோடுவதே மெய்யான மனந்திரும்புதல், பாவத்தோடு உறவாடிக் கொண்டிருக்கும்வரை தேவனின் மன்னிக்கும் கிருபையை நீங்கள் அனுபவிக்க மாட்டீர்கள்.

பாவத்திற்கு இருதயத்தில் இடம் கொடுக்காமலிருப்பதே மனந்திரும்புதலாகும்; ஆனால் அது எப்போதுமே விசுவாசத்துடன் இணைந்து காணப்படும். அப்படியானால் விசுவாசம் என்றால் என்ன? நற்செய்தியின் மூலம் நமக்கு வழங்கப்படும் கிறிஸ்துவுக்கு நமது ஆவியை சமர்ப்பிப்பதே விசுவாசமாகும். “அவருடைய நாமத்தின் மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார் (யோவான் 1:12). விசுவாசம் என்பது கிறிஸ்துவை அருந்துவது போலாகும். ஏனெனில், எனது ஆவியின் தாகத்தைக் கிறிஸ்துவைக் குடிப்பதன் மூலம் தீர்த்துக் கொள்கிறேன். அதுமட்டுமல்லாது, கிறிஸ்துவை நோக்குவதற்கும், பின்பற்றுவதற்கும், அவரை நாடி ஓடுவதற்கும் விசுவாசம் ஒப்பிடப்படுகிறது. வேதம், விசுவாசத்தைப்பற்றி விளக்குவதற்கு அநேக அடையாளங்களைப் பயன்படுத்துகிறது. அவை அனைத்தையும் ஒன்று சேர்த்துப் பார்த்தால், விசுவாசத்தைக் குறித்துப் பின்வருமாறு விபரிக்கலாம்: பாவிகளுக்கு தான் வாக்குத்தத்தம் செய்துள்ளபடி கிறிஸ்து எனக்கும் இருப்பாரென்ற நம்பிக்கையோடு, எனது தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட அவரிடம் என்னை ஒப்படைக்கிறேன்.

தனது வெறுங் கரங்களால் கிறிஸ்துவையும், அவர் அளிக்கும் அனைத்தையும் எடுத்துக் கொள்வதைத் தவிர வேறெதையும் விசுவாசம் கிறிஸ்துவிடம் கொண்டுவருவதில்லை. கிறிஸ்துவிடம் அப்படி என்ன இருக்கிறது? என்னுடைய பாவங்கள் அனைத்திற்குமான முழு மன்னிப்பும் அவரிடமே இருக்கின்றது. அவருடைய பூரணமான கீழ்ப்படிதல் என்னுடைய கணக்கில் வைக்கப்படுகிறது. அவருடைய மரணம் என்னுடைய மரணமாகக் கருதப்படுகிறது. அவருக்குள்ளாக நான் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்கிறேன். அத்தோடு, மகவேட்பு, பரிசுத்தம், இறுதியில் மகிமை இவையனைத்தையும் விசுவாசம் கிறிஸ்துவுக்குள்ளாக நமக்கு அளிக்கிறது. “நீங்கள் அவராலே கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டிருக்கிறீர்கள். எழுதியிருக்கிறபடி மேன்மை பாராட்டுகிறவன் கர்த்தரைக்குறித்தே மேன்மை பாராட்டத்தக்கதாக, அவரே தேவனால் நமக்கு ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமானார் (1 கொரி. 1:30) என்று பவுல் கூறுகிறார்.

கிறிஸ்தவன் யார்? என்று கேட்கிறீர்களா? பாவநிவாரணத்திற்கான தெய்வீக வழிவகையை அடைவதற்காக விதிக்கப்பட்டுள்ள தெய்வீக நிபந்தனைகளுக்குத் தன்னை முழுமனதோடு ஒப்புக் கொடுத்தவனே கிறிஸ்தவன். அந்நிபந்தனைகளே, மனந்திரும்புதலும், விசுவாசமுமாகும். அவற்றை நான் இரட்சிப்பாகிய கதவைத் திறக்கும் இரும்புப்பலகைக்கு ஒப்பிட விரும்புகிறேன். அவ்விரும்புப்பலகையின் ஒருபுறம் வீட்டுச்சுவற்றில் பொருத்தப்பட்டிருக்கிறது, மறுபுறம் கதவில் பொருத்தப்பட்டிருக்கிறது. இரும்புப்பலகையில் நடுவில் இருக்கும் ஆணி கதவை வீட்டுச்சுவற்றோடு இணைத்து அதைத்திறக்க உதவுகிறது. கிறிஸ்துவே அக்கதவாக இருக்கிறார். ஆனால், கிறிஸ்துவுக்குள் மனந்திரும்பி, விசுவாசிக்காமல் எவருமே உள்ளே நுழைய முடியாது.

எந்த இரும்புப்பலகையும் ஒரு பக்கத்தோடு மட்டும் செய்யப்படுவதில்லை. ஆகவே, மனந்திரும்புதல் மட்டும் போதாது, விசுவாசத்தைக் கொண்டிராத மனந்திரும்புதல் வேதபூர்வமான மனந்திரும்புதல் இல்லை. அது உங்களையும், உங்களுடைய பாவத்தையும் சார்ந்ததாக உள்ளது. அதேபோல், விசுவாசத்தை மட்டும் கொண்டுள்ள இரும்புப்பலகையையும் பார்க்க முடியாது. மனந்திரும்புதலோடு இணைந்து காணப்படாத எந்த விசுவாசமும் மெய்யான விசுவாசம் அல்ல. ஏனெனில், மெய்யான விசுவாசம், பாவத்திலிருந்து விடுபட கிறிஸ்துவுக்குள் எம்மை இரட்சிக்கும் விசுவாசமேயல்லாது, பாவத்தோடு எம்மை இரட்சிக்கும் விசுவாசமல்ல. மனந்திரும்புதலும், விசுவாசமும் பிரிக்முடியாதபடி ஒன்றறக்கலந்தவை, எனவேதான் வேதமும், “நீங்கள் மனந்திரும்பாமற்போனால் எல்லோரும் அப்படியே கெட்டுப்போவீர்கள் (லூக்கா 13:3) என்று சொல்கிறது. இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைபவர்களின் பட்டியலில் (வெளி. 21:8) அவிசுவாசிகளும் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.

4. வேதபூர்வமான கிறிஸ்தவன், தான் மெய்யாகவே மனந்திரும்பி விசுவாசத்தைப் பெற்றுக் கொண்டிருக்கிறேன் என்பதை நடைமுறையில் தன் வாழ்க்கையில் வெளிப்படுத்துவான்.

மனிதர்கள் மனந்திரும்பி தேவனை நாடி, தமது மனந்திரும்புதலுக்கு ஏற்ற கிரியைகளைத் தங்கள் வாழ்க்கையில் செய்ய வேண்டும் என்று பவுல் பிரசங்கம் செய்தார் (அப்போஸ். 26:20). அத்தகைய கிரியைகள் விசுவாசிகளின் வாழ்க்கையில் இருக்க வேண்டும் என்று தேவனும் எதிர்பார்க்கிறார். கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு; ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல; ஏனெனில், நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம் பண்ணியிருக்கிறார் (எபேசியர் 2:8-10).

பவுல் கலாத்தியர் 5 இல், விசுவாசம் அன்பினால் கிரியை செய்கிறது என்று சொல்கிறார். கிறிஸ்துவுக்குள்ளான மெய்யான விசுவாசம் எங்கிருக்கிறதோ, அங்கே கிறிஸ்துவின் மேலுள்ள மெய்யான அன்பு விதைக்கப்பட்டிருக்கும். எங்கே கிறிஸ்துவின் மேல் அன்பு செலுத்தப்படுகிறதோ, அங்கே கிறிஸ்துவுக்குள்ளான கீழ்ப்படிவும் இருக்கும். “என் கற்பனைகளைப் பெற்றுக் கொண்டு அவைகளைக் கைக்கொள்ளுகிறவனே என்னிடத்தில் அன்பாயிருக்கிறான், . . . என்னில் அன்பாயிராதவன் என் வசனங்களைக் கைக்கொள்ளமாட்டான் (யோவான் 14:21-24) என்று இயேசு சொல்கிறார். நாம் கிறிஸ்துவை விசுவாசிப்பதனாலேயே இரட்சிக்கப்படுகிறோமே தவிர, அவருக்குக் கீழ்ப்படிவதனால் அல்ல. ஆனால் கிறிஸ்துவுக்குள் அன்பையும், கீழ்ப்படிவையும் ஏற்படுத்தாத விசுவாசம் மெய்யான இரட்சிக்கும் விசுவாசமாக இருக்க முடியாது.

மெய்யான விசுவாசம் அன்பை உள்ளடக்கியதாக இருக்கும். அத்தகைய அன்போடு கூடிய விசுவாசத்தைக் கொண்டவன், வெளியில் அமர்ந்து அழகான நட்சத்திரங்களோடு சுடர்விட்டுக் கொண்டிருக்கும் விண்ணைப் பார்த்து, தான் கிறிஸ்தவனாக இருப்பது எத்தனை பெருமைதரும் காரியம் என்று பாட்டெழுதிக் கொண்டிருக்க மாட்டான். மெய்யான விசுவாசி தன் வீட்டுக்குத் திரும்பிப்போய், தனது பெற்றோருக்குக் கீழ்ப்படிவான்; அல்லது தன் மனைவி மீது அன்பு செலுத்துவான்; தனது பிள்ளைகளின் மேல் பாசத்தைக் கொட்டுவான்; தனது வேலைத்தளத்தில் எத்தனை எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் நீதிக்கும், நியாயத்திற்குமாக வாதாடுவான்; மொத்தமாகக் கூறப்போனால் வேதம் எதைச் சொல்கிறதோ அதைச் செய்வதையே வாழ்க்கை இலட்சியமாகக் கொண்டிருப்பான்.

நித்தியமான, மாறாத, ஒழுக்கக் கட்டுப்பாடுகள் இருக்கின்றன என்று விசுவாசிப்பதால், ஒரு விசுவாசி மற்றவர்கள் தன்னை முட்டாள், மூளை இல்லாதவன், காலத்துக்கு உதவாத பத்தாம் பசலி என்று கருதுவதைப் பொருட்படுத்த மாட்டான். வேதம் போதிக்கும் மனித வாழ்க்கையின் முக்கியத்துவத்திற்கு அவன் மதிப்புக் கொடுப்பதால், மனமடிக்குமுன் எந்தப் பெண்ணோடும் தவறான உடலுறவு கொள்ளுவதற்கு எதிராகவும், கருத்தடை செய்வதற்கு எதிராகவும் துணிந்து பேசுவான். இயேசுவிபச்சாரமும், பாவமும் உள்ள இந்தச் சந்ததியில் என்னைக் குறித்தும் என் வார்த்தைகளைக் குறித்தும் எவன் வெட்கப்படுவானோ, அவனைக் குறித்து மனுஷ குமாரனும் தமது பிதாவின் மகிமை பொருந்தினவராய்ப் பரிசுத்த தூதர்களோடுங்கூட வரும்போது வெட்கப்படுவார் (மாற்கு 8:38) என்று சொல்கிறார்.

வேதபூர்வமான கிறிஸ்தவன் யார்? என்ற கேள்விக்கு பதில் வேண்டுமானால், வெறுமனே, “ஆம், நான் ஒரு பாவிஎன்று எனக்குப் புரிகிறது என்றோ அல்லது, “என்னைப் பற்றி ஒரு குற்றப்பத்திரிகையும், எனக்குள் கேடான இருதயமும் இருப்பது எனக்குத் தெரியும், சிலுவையில் மரித்த இயேசுவில் மட்டுமே பாவிகளின் பாவநிவாரணத்திற்கு வழி இருக்கிறது என்பதும் எனக்குத் தெரியும், அதனைத் தேவன் மனந்திரும்பி விசுவாசிக்கிறவர்களுக்கு மட்டுமே தருகிறார்என்றோ கூறுவது மட்டும் போதாது.

நீங்கள் மனந்திரும்பி கிறிஸ்துவை விசுவாசிக்கிறீர்களா? அப்படி, மனந்திரும்பி கிறிஸ்துவை நீங்கள் விசுவாசிப்பீர்களேயானால், அவ்விசுவாசம் நிலைத்திருக்கும்படி உறுதியோடு, இயேசு கிறிஸ்துவுக்கு கீழ்ப்படிந்து வாழ்கிறீர்களா?

பரலோகத்திலிருக்கிற என் பரம பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோக இராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி, கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்கிறவன் பிரவேசிப்பதில்லை (மத்தேயு 7:21) என்று இயேசு சொல்லியிருக்கிறார். எபிரேயர் நிருபத்தை எழுதியவர் இயேசுவைக்குறித்து, “தமக்குக் கீழ்ப்படிகிற யாவரும் நித்திய இரட்சிப்பை அடைவதற்குக் காரணர்என்று கூறுகிறார் (எபிரேயர் 5:9). யோவானும்அவரை அறிந்திருக்கிறேனென்று சொல்லியும், அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளாதவன் பொய்யனாயிருக்கிறான் அவனுக்குள் சத்தியமில்லைஎன்று கூறுகிறார் (1 யோவான் 2:4).

நீங்கள் கிறிஸ்தவன் என்று உங்களை அழைத்துக் கொண்டால் அதை வேதத்திலிருந்து உங்களால் நிரூபிக்க முடியுமா? விசுவாசத்திற்கும், மனந்திரும்புதலுக்குமான கனிகளை உங்கள் வாழ்க்கையில் காண முடிகின்றதா? கிறிஸ்துவை அறிக்கையிட்டு, அவரோடு இணைந்து, அவருக்குக்கீழ்ப்படிந்து வாழும் வாழ்க்கையைக் கொண்டிருக்கிறீர்களா? உங்களுடைய வாழ்க்கை கிறிஸ்துவின் வழிகளுடன் ஒத்துப்போகின்றதா? இப்படியெல்லாம் கேட்பதனால், பரிபூரணமான வாழ்க்கை வாழ்கின்றீர்களா என்று நான் கேட்பதாக நீங்கள் நினைத்துவிடக்கூடாது. இயேசுவே கூறியிருப்பதுபோல், ஒவ்வொரு நாளும், எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும் என்று நீங்கள் ஜெபம் செய்ய வேண்டும். அதேவேளை நான் கிறிஸ்துவுக்காகவே வாழ்வேன் என்றோ, அல்லது,

இயேசு, நான் என் சிலுவையை சுமந்தேன் அனைத்தையும் துறந்து உம் பின்னால் போவதற்கே என்ற மேல்வரும் கீர்த்தனை கூறுவதுபோலவும் கூற வேண்டும்.

மெய்க்கிறிஸ்தவன் கிறிஸ்துவை பின்பற்றுவான். உங்களில் எத்தனைபேர் வேதபூர்வமான மெய்க்கிறிஸ்தவர்கள்? உங்களுடைய ஆழமான மனதுக்குள்ளேயே நீங்கள் இக்கேள்விக்கு விடை கொடுக்கும்படி விட்டு விடுகிறேன்.

ஆனால், ஒன்றை மட்டும் மறந்துவிடாதீர்கள். இதற்கு நீங்கள் பதிலளிக்கும்போது உங்களோடு நித்தியத்திற்கும் நிலைத்து நிற்கும்படியான பதிலைக் கொடுக்கப் பாருங்கள். மரணத்தைச் சந்திக்கும்போது ஆறுதலைத் தரக்கூடியதும், நியாயத்தீர்ப்பு நாளில் பாதுகாப்பைத் தரக்கூடியதும், நியாயத்தீர்ப்பு நாளில் பாதுகாப்பைத் தரக்கூடியதுமான பதிலைத்தவிர வேறு எதற்கும் உங்களை ஒப்புக்கொடுத்துவிடாதீர்கள்.


(அல்பர்ட் என். மார்டின் கடந்த இருபத்தி ஐந்து வருடங்களாக நியூ ஜேர்சியில், திரித்துவ பாப்திஸ்து சபையின் போதகராக இருந்து வருவதோடு, பல நாடுகளிலும் கர்த்தரால் பெரிதும் பயன்படுத்தப்படும் ஒரு பிரசங்கியாகவும் இருந்து வருகிறார்.)

Thanks : biblelamp.me

No comments:

Post a Comment