Saturday, 2 May 2015

இஸ்ரவேலை காக்கிறவர் உறங்குவதுமில்லை, தூங்குகிறதுமில்லை

israel war

இஸ்ரேல் நாட்டின் வரலாற்றில் 1967-ம் ஆண்டு ஜூன் மாதம் 5-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை நடைபெற்ற ஆறு நாள் யுத்தம் மிகவும் முக்கியமான சம்பவம் ஆகும். ஆறு நாட்களில் முடிந்து போன இந்தப் போரில் இஸ்ரேலை எதிர்த்து அரபு நாடுகளான எகிப்து, ஜோர்டான் மற்றும் சிரியா ஆகிய நாடுகள் சண்டையிட்டன. மேலும் ஈராக், சவுதி அரேபியா, சூடான், துனீசியா, மொனாக்கோ மற்றும் அல்ஜீரியா ஆகிய நாடுகள் இஸ்ரேலுக்கு எதிராக படைகளையும் ஆயுதங்களையும் அனுப்பின. இந்தப் போரில் சோவியத் யூனியன் அரபு நாடுகளுக்கும்
பிரிட்டன் மற்றும் அமெரிக்கா இஸ்ரேலுக்கும் ஆதரவளித்தன. உலக நாடுகள் அனைத்தும் வியக்கும் வண்ணம் சின்னஞ்சிறு நாடான இஸ்ரேல் மகத்தான வெற்றி பெற்றது.
இஸ்ரவேல் வீரர்கள் கூறின சாட்சி: ஆறு நாள் யுத்தத்தில் நாங்கள் விரைவாய் முன்னேறும்போது ஒரு பலத்த காற்று அடித்தது. பாலைவனத்தில் தாங்கள் ஒரு அடிக்கூட நகர முடியாமல் நிறுத்தப்பட்டனரென்றும், சில நிமிடங்கள் சென்று புயல் நின்றவுடன் தங்கள் முன்னே நிலக்கண்ணிகள் நிறைய வைக்கப்பட்டிருந்ததை புயற்காற்று மணலை முழுவதும் அடித்துச் சென்று தங்களுக்கு காட்டி விட்டதையும் அறிந்து, ஆண்டவர் எவ்வளவு ஆச்சரியமான பிரகாரமாக தங்களுக்கு வர இருந்த ஆபத்தைக் காட்டி கொடுத்து தங்களை காப்பாற்றினார் என்று ஆண்டவரை துதித்தோம் என்றார்.
யுத்தத்தின் முதல் நாளான ஜூன் 5ம் தேதி இஸ்ரேல் விமானங்கள் எகிப்தை நோக்கிப் பறப்பதை ரேடார் மூலம் அறிந்து ஜோர்டான் எகிப்துக்கு ரகசிய தகவல் அனுப்பியது. ஆனால் எகிப்தினால் அந்தச் செய்தியை டிகோட் செய்ய முடியவில்லை. அதற்கு முந்திய நாள் எகிப்தின் ரகசிய செய்திகளை என்கோட் செய்யும் அமைப்பின் அலை வரிசை மாறி விட்டதே இதற்குக் காரணம்.
இரண்டு வீரர் ஏலாத் துறைமுகத்துக்குப் பக்கத்தில் பாராசூட் மூலமாய் ஆகாயத்திலிருந்து இறக்கி விடப்பட்டனர். அவர்கள் இறங்கிய இடத்துக்குப் பக்கத்தில் ஒரு பெரிய எகிப்திய டாங்க் நின்று கொண்டிருந்தது, அதற்குள்ளிருந்து இரண்டு எகிப்திய வீரர் எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தனர். இரு இஸ்ரேலிய வீரரும் கவனமாக டாங்கினிடம் முன்னேறிப்போன போது டாங்கிலிருந்து 18 வீரர்கள் கைகளை தலைக்கு மேலே தூக்கி சரணடைந்தனராம். ஏன் இவர்கள் சரணடைந்தனர் என்று விசாரித்தபோது அவர்கள் தங்களால் ஒரு விரலை கூட அசைத்து டாங்கை ஓட்டவோ அல்லது பீரங்கியை இயக்கவோ முடியாமற் போனது என்றும் விவரிக்க முடியாத ஒரு பயம் தங்களை பிடித்தது என்றும், அதனால்தான் தாங்கள் சரணடைந்ததாகவும் கூறினர்.
ஜெருசலேம் நகரில் போருக்கு கொண்டு செல்வதற்காக ஒரு வாகனத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்த ஆயுதக் குவியலின் மேல் எதிரி நாட்டிலிருந்து வீசப்பட்ட குண்டு ஒன்று விழுந்தது. அந்தப் பகுதி முழுவதும் வெடித்துச் சிதறப் போகிறதென்று எல்லாரும் பயந்து கொண்டிருந்த வேளையில் வீசப்பட்ட குண்டு வெடிக்காமல் அற்புதமாக தேவன் கிரியைச் செய்தார்.
இஸ்ரவேலின் டாங்கி படை ஒன்றை சீனாய் பாலைவனத்தில் ஒரு எகிப்திய டாங்க் படை தாக்கியது. அச்சமயம் இஸ்ரேலிய வீரர் கண்ட காட்சியை அவர்கள் பிற்பாடு கூறியது: ஆகாயத்தில் ஒரு வெண் வஸ்திரம் தரித்த உருவம் தன் கைகளை விரித்துப் பறந்ததாகவும், அவ்வுருவம் தன் வலது கையை தாழ்த்தினபோது, அப்பக்கத்திலிருந்த எகிப்திய டாங்குகள் தீப்பற்றி எரிந்ததாகவும், இடது கையை தாழ்த்தினபோது இடது பக்கத்திலிருந்த எகிப்திய டாங்குகள் தீப்பற்றி எரிந்தததாகவும் கூறினர்.
யுத்தத்தில் தப்பி வந்த எகிப்திய படைவீரன் சொன்னது: தேனீக்கள் போன்ற வண்டுகள் எங்களை துரத்திக் கொண்டே வந்தன. ஆகையால் நாங்கள் முன்னேற முடியாமல் பின்வாங்கி ஓடி வர வேண்டதாயிற்று.யாத்திராகமம் 23:28: 'உன் முகத்திற்கு முன்னின்று ஏவியரையும் கானானியரையும் ஏத்தியரையம் துரத்திவிட, குளவிகளை உனக்கு முன்னே அனுப்புவேன்' என்ற வார்த்தையின்படி குளவிகளை அனுப்பி, தேவன் தம் ஜனத்தை காத்துக் கொண்டார்.
'இதோ, இஸ்ரவேலை காக்கிறவர் உறங்குவதுமில்லை, தூங்குகிறதுமில்லை' என்ற வார்த்தையின்படி தேவனே அந்த நாட்டை காக்கின்றபடியால், யாராலும் அந்த தேசத்தை அசைக்க முடியாது என்பதே அதிசயமான உண்மை. பிரியமானவர்களே, நாமும் கூட பரலோக கானானை நோக்கி பயணம் செய்து கொண்டிருக்கிறோம். ஆவிக்குரிய இஸ்ரவேலராகிய நாம் அதை சென்று அடைய முடியாதபடி சத்துருவானவன் நமக்கு எதிராக எத்தனை போராட்டங்களை கொண்டு வந்தாலும், நாம் தேவனை உறுதியாக பற்றிக் கொண்டிருந்தோமானால், தேவன் எப்படி இஸ்ரவேல் தேசத்தை பாதுகாக்கிறாரோ அப்படியே நம்மையும் காத்து, நம்மை தம்மோடுக்கூட சேர்த்துக் கொள்வார். அவர் 'நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்' (யோவான் 14:3). என்று வாக்கு பண்ணியிருக்கிறாரே! அவர் அப்படியே நம்மை சேர்த்துக் கொள்வார்.







thanks:https://www.facebook.com/permalink.php?story_fbid=747436838658686&id=247588325310209



No comments:

Post a Comment