Monday, 18 May 2015

தனித்து விளங்கும் பரிசுத்த வேதாகமம்!


உலகின் வேறெந்த வேதங்களைக் காட்டிலும், தன் எழுத்திலும் சரித்திரச் செரிவிலும் தனித்து விளங்குவது பரிசுத்த வேதாகமமே...

பரிசுத்த வேதாகமத்தின் வரலாறு
1500 ஆண்டுகளாக 40 ஆசிரியர்களால் எழுதப்பட்ட வேதம் பைபிள். 66 நூல்களை தன்னுள் கொண்டுள்ளது. பைபிளைப் படிக்கும் போதே, பிற பழங்கால நூல்களில் இருந்து அதன் எழுத்துநடை வேறுப்பட்டு விளங்குவதை அறிய இயலும். தன் செய்திகளையும், கதாப்பாத்திரங்களையும், காலங்களையும் சரித்திர பிண்ணனிக் கொண்டு விளக்குவதாக தன் எழுத்து நடையை பெற்றள்ளது. இன்று வரை அச்சம்பவங்களை சரித்திரவான்களும், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களும் தொடர்ந்து உறுதிப்படுத்தி வருகின்றனர்.

ஆசிரியர்களின் தனிப்பட்ட எழுத்து ந‌டையினாலும் அவர்கள்தம் கதாப்பாத்திரங்களாலும், தான் யார் என்பதையும், தன்னை அறிவது எப்படி என்பது குறித்தும் கர்த்தர் தெளிவாக விளக்கியுள்ளார். நாற்பது நபர்களால் 1500 ஆண்டு கால இடைவெளியில் இயற்றப்பட்ட நூலாயினும், ஒரே கருப்பொருளையே பைபிள் அழுத்திச் சொல்கிறது. நம்மை சிருஷ்டித்தவர் நம்மோடு உறவு பாராட்ட விரும்புகிறார், நாம் அவரை அறிந்துகொண்டு விசுவாசிக்க அழைக்கிறார். இதுவே அதன் 66 நூல்களின் மையச்செய்தி.

பைபிள் நம்மை ஈர்ப்பதாக மட்டும் அல்ல, அது கடவுளையும் அவர் நமக்காக வைத்துள்ள நித்திய ஜீவனையும் நம்மிடம் விளக்கிக் கூறும் நூலாகும். அன்பும் அர்த்தமும் மிகுந்த நல்ல வாழ்வுக்கு ஒரு வழிகாட்டி. கடவுளின் வழியிலும் பெலத்திலும் வாழ, அவரது அன்பை அன்றாடம் ருசிக்க பைபிள் நம்மை உற்சாகப்படுத்துகின்றது. கடவுளின் கரம் பதிந்த நூல் தான் பைபிள். அதன் சரித்திரச் செரிவையும், சத்திய வார்த்தைகளையும் தலைப்பு வாரியாக இப்போது காணலாம்.

1. தொல்பொருள் ஆராய்ச்சிக்கு உதவுகின்ற பைபிள்
இந்த நாள் வரை, தொல்பொருள் ஆராய்ச்சிக்கு பைபிள் உதவிக்கரம் கொடுத்து வருகிறது. அகழ்வாராய்ச்சி மூலம் கண்டு கொள்ளப்பட்ட அரசர்கள், சாம்ராஜ்ஜியங்கள், பட்டணங்கள், பண்டிகைகள் போன்ற பல சரித்திர தடயங்களை பைபிள் உறுதி செய்கிறது. ஆம், இக்கண்டுபிடிப்புகள் நிகழ்கின்ற வரை, அந்த‌ நபர்களையும், இடங்களையும் சரித்திரம் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால், இக்கண்டுபிடிப்புகளுக்கு முன்பிருந்தே அந்நபர்களுக்கும் இடங்களுக்கும் பைபிள் சரித்திர அடையாளம் கொடுத்து வந்தது.உதாரணத்திற்கு, பெதஸ்தா குளத்தை எடுத்துக் கொள்ளலாம். எருசலேமின் ஆட்டுவாசல் அருகே எபிரேய பாஷையில் பெதஸ்தா என சொல்லப்பட்ட குளம் ஒன்று இருந்ததாகவும், அதற்கு ஐந்து மண்டபங்கள் இருந்தன என்றும் பைபிள் கூறுகிறது (யோவான் 5:2). அத்தகைய குளம் எதுவும் எருசலேமில் இருந்ததில்லை என சரித்திரவான்கள் கூறி வந்தனர். ஆனால், அகழ்வராய்ச்சியர்களால் நாற்பது அடிகளுக்கு கீழ் புதைந்து கிடந்த குளம் ஒன்றும், அதனை சுற்றி ஐந்து மண்டபங்களும் பிற்காலத்தில் க‌ண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் கண்டுபிடித்த குளம் பெதஸ்தா என்பதை பைபிளைக் கொண்டு உறுதி செய்தனர்.

பெதஸ்தா குளம்

இதுபோன்று பல சரித்திரச் செய்திகளை பைபிள் கொண்டிருக்கிறது. அவற்றில் ஒவ்வொன்றாக அகழ்வராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து வருகின்றனர். இன்றுவரை, அகழ்வாய்வால் கண்டுபிடிக்கப்பட்ட எந்த தொல்பொருள் தடயமும் பைபிளுக்கு வேறுப்பட்டு இல்லை. குறிப்பாக, புதிய ஏற்பாட்டில் லூக்கா எழுதின சுவிசேஷமும், அப்போஸ்தலர் நடபடிகள் புஸ்தகமும் முதல் நூற்றாண்டின் சரித்திரச் செய்திகள் பலவற்றை துல்லியமாக எடுத்துரைக்கிறது. லூக்கா 32 தேசங்களையும், 54 நகரங்களையும், 9 தீவுகளையும் துல்லியமாக கூறியுள்ளார். லூக்காவின் சரித்திர வளமையை இன்று வரை சரித்திரவான்கள் மெச்சி வருகின்றனர். முதல் நூற்றாண்டின் தலைசிறந்த வரலாற்று ஆசிரியராக அவரைப் புகழ்வோரும் உண்டு.

அது மட்டமல்ல, தவறான சரித்திரச் செய்திகள் பலவற்றோடு போரிட்ட நூலாகவும் பைபிளை எடுத்துக் கொள்ளலாம். மோசேயின் காலத்தில் பைபிளின் முதல் ஐந்து ஆகமங்கள் எழுதப்பட்டிருக்க வாய்ப்பே இல்லை எனவும், அக்கால மத்திய கிழக்குப் பகுதிகளில் எழுத்துமுறை நடைமுறையில் இல்லை எனவும் சரித்திரவான்கள் பல காலமாக கூறி வந்தனர். ஆனால், அகழ்வாராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட கருங்கல் ஒன்று இந்த தவறான கூற்றை முற்றிலுமாக அழித்துவிட்டது. ஹமுராபி என்ற பாபிலோனிய அரசர் விதித்த சில சட்டங்கள் இக்கல்லில் காணப்படுகின்றன‌. இது மோசே வாழ்ந்த‌ காலத்தை விட 300 ஆண்டுகள் பழமையானது! எனவே மோசே வாழ்ந்த காலத்தில் எழுத்துமுறை நடைமுறையில் இருந்ததை சரித்திரவான்கள் அறிந்து கொண்டனர். இவ்வாறு பல சரித்திர கண்டுபிடிப்புகளை உறுதி செய்ய பைபிள் இந்த நாள் வரை அகழ்வாராய்ச்சிகளுக்கு உதவி வருகிறது. இவைகளைக் குறித்து புதிய பதிவுகளில் ஒவ்வொன்றாக காணலாம்.

2. மூவாயிரம் ஆண்டுகளாய் நிலைத்து நிற்கும் பைபிள்
பைபிள் இயற்றப்பட தொடங்கியது முதல் இந்நாள்வரை 3500 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. அக்காலத்தில் அச்சு இயந்திரங்கள் இருந்ததில்லை. கைகளால் தோல்ச்சுருள்களிலும், பாப்பிரஸ் ஓலைகளிலும், துணி, தகடு போன்ற பொருட்களிலும் அதன் செய்திகளை பாதுகாத்து வந்தனர். பழைய பிரதிகள் இத்துப் போய்விட காலங்காலமாக புதிய பிரதிகள் எடுப்ப‌து அவசியமாய் இருந்தது. அச்சு இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்படும் வரை இவ்வாறே பைபிள் பாதுகாக்கப்பட்டு வந்தது. இது தவிர, இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு முந்திய காலங்களில் இருந்தே பைபிளின் பழைய ஏற்பாட்டு நூல்களை கிரேக்கம், அரமாயிக் போன்ற பிற மொழிகளில் மொழி பெயர்க்க முயற்சிகள் மேற்கொண்டனர். இவ்வாறு ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக பல்வேறு பிரதிகளையும், மொழிப்பெயர்ப்புகளையும் மேற்கொண்டு வந்ததால் பைபிள் காலப்போக்கில் கறைப்பட்டிருக்கும் என கருதுவோர் சிலர் உண்டு. ஆனால், பைபிள் இன்றும் நம்மிடம் இருந்த வண்ணமாகவே வந்துள்ளது.


பழைய ஏற்பாட்டின் மிகப்பழமையான பிரதிகள் சவக்கடல் அருகே உள்ள கும்ரான் குகைகளில் இருந்து 1950களில் கண்டுபிடிக்கப்பட்டன. இது சரித்திரத்தையே அதிர வைத்த ஒரு கண்டுபிடிப்பு என்று சொல்லலாம். இப்பிரதிகள் இயேசு கிறிஸ்துவிற்கும் முந்நாறு ஆண்டுகள் பழமையானவை! சவக்கடல் சுருள்களை கணக்கில் விட்டால், பழைய ஏற்பாட்டுக்கான பிரதிகள் ஆயிரம் ஆண்டுகால இடைவெளிக்கு பின்பே கிடைக்கின்றன. சவக்கடல் சுருள்களையும், ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்பு எழுதப்பட்ட பிரதிகளையும் ஒப்பிட்ட போது அவைகள் 99.5% செய்திகள் சிதையாது இருந்தன! மீதமுள்ள 0.5% வேறுபாடுகள் ஒரே சில எழுத்துப் பிழைகளே. கருப்பொருளில் எவ்வித மாற்றமும் இல்லை. இது பழைய ஏற்பாடு அற்புதமாக பாதுகாக்கப்பட்டு நம் கரங்களுக்கு வந்ததை உறுதி செய்தது.

புதிய ஏற்பாட்டை கணக்கில் கொண்டால், அது இன்னும் நிலைத்து நிற்கிறது. புதிய ஏற்பாட்டை விட சரித்திரத்தில் பாதுகாக்கப்பட்ட நூல் அக்காலத்தில் எதுவுமே இல்லை. புதிய ஏற்பாடுக்கென அக்காலத்தைச் சார்ந்த ஆயிரமாயிரம் பிரதிகளே இன்றுவரை நம்மிடம் உள்ளன. பிளேட்டொ, அரிஸ்டாட்டில், ஹோமர் ஆகியோரது நூல்களைவிட புதிய ஏற்பாடு எழுதப்பட்ட வண்ணமே நம்மிடம் வந்துள்ளது.

3. இயேசுவின் வாழ்வை எடுத்துரைக்கும் பைபிள்
இயேசு கிறிஸ்து பரமேறிச் சென்று 20 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய ஏற்பாட்டின் நூல்கள் எழுதப்பட்டன. ஏனெனில் அக்காலங்களில் அதற்கான தேவை இருந்தது இல்லை. எருசலேமிலும் இஸ்ரவேலின் பிற பகுதிகளிலும் தான் சீஷர்கள் முதலவதாக போதித்து வந்தனர். இஸ்ரவேல் மக்கள் இயேசுவைக் குறித்து நன்கு அறிந்திருந்ததால், அவரது வாழ்க்கை வரலாறு அடங்கிய ஒரு நூல் தேவைப்படவில்லை. பின்பு, சீஷர்கள் இஸ்ரவேலரை விட்டு பிற இனத்தவர்களிடம் போதிக்க வந்த‌வுடன், அதற்கான தேவைகள் எழுந்தன. எல்லா இடங்களுக்கும் நினைத்து நேரங்களில் சென்று நற்செய்தியை அறிவிக்க சீஷர்களால் கூடாமற் போயிற்று. எனவே, இயேசு கிறிஸ்துவின் வாழ்வை விளக்கும் சுவிசேஷ புத்தகங்களையும், கிறிஸ்தவ விசுவாசத்தை தெளிவுப்படுத்தும் மடல்களையும் இயற்றி புழக்கத்தில் விட்டனர். அதில் நால்வர் இயேசு கிறிஸ்துவின் தூய வாழ்வை சரித்திர நூல்களாக‌ எழுதிக் கொடுத்தனர். இவைகளை சுவிசேஷங்கள் என்கிறோம், புதிய ஏற்பாட்டின் முதல் நான்கு நூல்களாக அவை அமைந்தன. இந்த நூல்களின் உண்மையை எவ்வாறு அறியலாம்?

உதாரணத்திற்கு, ஒரு மனிதரின் வாழ்க்கை வரலாறு பற்றிய உண்மையை அறிய சரித்திரவான்கள் சில‌ முயற்சிகளை மேற்கொள்ளுவார்கள். அதாவது, அந்த மனிதரைப் பற்றி எந்தெந்த நூல்கள் செய்திகள் கொண்டுள்ளன? அவைகளுள் எச்செய்திகள் எல்லாம் பொதுவாக அமைந்துள்ளன? என ஆராய்ந்து பார்ப்பார்கள். எடுத்துகாட்டாக அசோகரது வாழ்வை கணக்கில் எடுத்துக் கொள்ளலாம். அசோகரது வாழ்வைப் பற்றி 6 நூல்கள் நம்மிடம் உள்ளன என வைத்துக் கொள்வோம். ஐந்து நூல்கள் அவர் பாரதத்தை அரசாண்ட ஒரு மன்னராக எடுத்துரைக்கின்றன. மற்றொரு நூல் அவரை ரோம தேசத்தில் வாழ்ந்த ஒரு ஓவியராக எடுத்துக் கூறுகிறது. இவ்வேளையில் சரித்திரத்தை ஆராய்பவர் அசோகரை மன்னராகவே ஏற்றுக்கொள்வார். அவ்வாறே இயேசு கிறிஸ்துவைப் பற்றி பொதுவானச் செய்திகளைக் கூறும் நான்கு நூல்கள் நம்மிடம் உள்ளன. சுவிசேஷங்கள் கூறும் பொதுவான செய்திகளில் சிலவற்றைக் காணலாம்.

படத்தைப் பெரிதாக்க கிளிக் செய்க‌

நான்கு சுவிசேஷங்களுள் இரண்டு அப்போஸ்தலர்களான மத்தேயுவினாலும், யோவானாலும் எழுதப்பட்டவை. இருவரும் இயேசு கிறிஸ்துவோடு மூன்று ஆண்டுகளாக பயணித்த சீஷர்களாவர். மற்ற இரண்டு நூல்களை எழுதின மாற்கும் லூக்காவும் அப்போஸ்தர்களோடு நெருங்கிய நட்பு கொண்டிருந்தனர். நற்சாட்சி பெற்றவர்களால் எழுதப்பட்ட இந்த நான்கு நூல்களையும் ஆதிதிருச்சபை போதித்து வந்தது. இச்சுவிசேஷங்கள் ஒற்றுமையில் மிகுந்திருப்பது மட்டுமின்றி சரித்திரத்தையும் உறுதிப்படுத்தி வருகின்றன.

4. சரித்திரவான்களால் சாட்சி பெற்ற பைபிள்
அற்புதம் பல செய்திட்ட நசரேயனாகிய இயேசு ரோமர்களால் சிலுவையில் அறையப்பட்டார் எனவும், உயிர்தெழுந்தார் எனவும் பைபிள் சொல்கிறது. இச்செய்தியை அக்கால சரித்திரவான்கள் பலர் தங்கள் நூல்களில் மேற்கோளிட்டுள்ளனர். அவற்றில் சிலவற்றைக் காணலாம். முதல் நூற்றாண்டைச் சார்ந்த கொர்நலியஸ் தாத்திசு அக்கால சரித்திரவான்களில் பெயர் பெற்ற ஒருவர். வரலாற்று ஆசிரியர்களால் மிகவும் நம்பதக்கவராக கருதப்படுகிறார். "வரலாற்றுக் குறிப்புகள்" என்ற நூலில் அவர் குறிப்பிட்டுள்ள சில வரிகளைக் காணலாம். "தானே உரோமைக்குத் தீ வைத்ததாக உலவிய செய்தியை மறைப்பதற்காக நீரோ இழிந்தவர்களாக மக்களால் கருதப்பட்ட ஒரு குழுவினர்மீது பழியைப் போட்டார். அவர்களை மிகக் கொடுமையான வதைகளுக்கு ஆளாக்கினார். அவர்கள் தாம் கிறெஸ்தவர்கள் என்று பொதுமக்களால் அழைக்கப்பட்டவர்கள். கிறிஸ்து என்பவரின் பெயரிலிருந்து அவர்களுக்கு இப்பெயர் வந்தது. அந்தக் கிறிஸ்து திபேரியு ஆட்சிக் காலத்தில் நம் ஆளுநர்களில் ஒருவராகிய பொந்தியு பிலாத்து என்பவரின் ஆளுகையின் கீழ் மிகக் கொடிய விதத்தில் தண்டிக்கப்பட்டார். அப்போது எழுந்த கேடுநிறைந்த மூடநம்பிக்கை சிறிது காலம் அடக்கிவைக்கப்பட்டது; ஆனால் மீண்டும் யூதேயாவில் பரவ ஆரம்பித்தது. அத்தீங்குக்குத் தோற்றிடமான அங்கிருந்து உரோமையிலும் பரவியது. உலகத்தின் எந்த மூலையிலிருந்தும் பிறக்கின்ற வெறுக்கத்தக்க, வெட்கக்கேடான எல்லாமே உரோமையில் குடிகொண்டு பரவுவது வழக்கம்தானே". தாத்திசு சிலை வணக்கம் செய்தவர், அக்காலத்தில் கிறிஸ்தவம் மிக வேகமாக மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு வந்தது. அதனால், ஒரு வித வெறுப்பைத் தாத்திசு கொண்டிருந்தார். அவர் தன் வசைமொழிகளால் கிறிஸ்தவ நம்பிக்கைகளை இகழ்ந்து எழுதிய இந்த வரிகளே பைபிளிற்கு புறம்பே இருந்து இயேசுவிற்கு கிட்டும் முக்கிய ஆதாரங்களில் தலைசிறந்ததாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

ஜோசபஸ்

யூத சரித்திர ஆசிரியரான பிளாவியஸ் ஜோசபஸ் இயேசுவைப் பற்றி யூதமரபு வரலாறு என்ற தனது நூலில் தெரிவித்துள்ளார். "அச்சமயம் இயேசு என்னும் பெயருடைய ஞானி ஒருவர் இருந்தார். அவர் நன்னடத்தையும் நற்பண்பும் கொண்ட மனிதர். யூதர்களும் பிற நாடுகளைச் சார்ந்தவர்களுமான பல மக்கள் அவருடைய சீடர்களாக மாறினர். சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்படும்படி பிலாத்து அவருக்குத் தீர்ப்பு வழங்கினான். அவருடைய சீடர்களாக மாறியிருந்தவர்கள் அவரைப் பின்பற்றுவதைக் கைவிட்டுவிடவில்லை. சிலுவையில் அறையுண்டு இறந்தபின் அவர் மீண்டும் உயிர்பெற்றவராக அவர்களுக்குக் காட்சியளித்ததாக அவர்கள் கூறினார்கள். எனவே, அவரே ஒருவேளை இறைவாக்கினர்களால் முன்னறிவிக்கப்பட்ட அதிசயம் வாய்ந்த மெசியாவாக இருக்கலாம்."

இவைகளோடு சுடோனியஸ், பிலைனி, தாலஸ் போன்ற பிற முதல் நூற்றாண்டு சரித்திரவான்களும் இயேசுவைக் குறித்தும் கிறிஸ்தவ வழிபாட்டை குறித்தும் தங்கள் நூல்களில் குறிப்பெழுதி இருக்கின்றனர். யூத சடங்காச்சாரங்கள் அடங்கிய‌ தால்மத்திலும் இயேசு கிறிஸ்துவை இகழ்ந்து சில வாக்கியங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. இவை எல்லாம் சுவிசேஷங்களுக்கு மேன் மேலும் சாட்சிக் கொடுக்கின்றன. அக்காலங்களில், சரித்திரவான்கள் மன்னர்களையும், அரசு அதிகாரிகளையுமே தங்கள் நூல்களில் எழுதி வந்தனர். ஏதோ ஒரு தூர தேசத்தில் கொல்லப்பட்ட ஒரு ஏழை தட்சரைக் குறித்து எழுத வேண்டிய அவசியம் உண்டானதென்ன? ரோமர்கள், கிரேக்கர்கள், யூதர்கள் என பல தேசங்களில் சிதறிக் கிடந்த மக்கள் இயேசுவைப் பற்றி எழுத வேண்டியதேன்? தன் போதனைகளாலும், அற்புத செயல்களினாலும், நற்பெயராலும் மக்கள் மனதில் அவர் இடம் பெற்றிருந்ததே அதன் காரணம். மூன்றே ஆண்டுகளில் இத்தனைப் பெரிய காரியத்தைச் செய்த இயேசு அற்புதமானவரே...

5. சிந்திக்கத் தூண்டும் பைபிள்
பைபிள் நம்பிக்கை வைக்க ஏற்ற நூல். அதினிடையே உள்ள முரண்பாடுகளாக சில வசனங்கள் எடுத்துக் கூறுப்படுகிறது. உண்மையில் முரண்பாடுகளாக எடுத்துக் கூறப்படும் அந்த வசனங்கள் தான் நம்மை மேன் மேலும் நம்பிக்கைக் கொள்ளச் செய்கின்றன. எனவே, இத்தகைய எழுத்து நடைக்காக நாம் கடவுளுக்கு நன்றி தான் செலுத்த வேண்டும். ஒரு சில உதாரணங்களைக் காணலாம். இயேசுவை சிலுவையில் அறைந்த போது, அவரது சிலுவையின் மேல் சில வசை மொழிகளை எழுதி வைத்தனர். இதை மூன்று சுவிசேஷங்கள் கூறுகின்றன.
மத்தேயு 27:37 இவன் யூதருடைய ராஜாவாகிய இயேசு என்று எழுதி, அவர் சிரசுக்கு மேலாக வைத்தார்கள்.

மாற்கு 15:26 யூதருடைய ராஜா என்று எழுதி, சிலுவையின் மேல் கட்டினார்கள்.

யோவான் 19:19 அதில் நசரேயனாகிய இயேசு யூதருடைய ராஜா என்று எழுதியிருந்தது.
இதனை முரண்பாடாக ஏற்றுக் கொள்ளலாமா? அப்படியல்ல. இவை பைபிளின் நம்பகத்தன்மைக்கு இன்னும் சிறப்பு சேர்க்கின்றன. இந்த மூன்று சுவிசேஷங்களை எழுதின ஆசிரியர்கள் வெவ்வேறு நபர்களாக இருப்பதால் அவர்களது எழுத்து நடையில் வேறுபாடு தெரிகிறதே அன்றி வேறல்ல. இருந்தாலும் கருப்பொருளில் எவ்வித வேறுபாடும் இல்லை. இதிலிருந்து இயேசு கிறிஸ்துவின் வாழ்வின் சம்பவங்கள் மக்கள் மனதில் அழியாது நிலைபெற்றிருந்ததை அறியலாம். அவரது சிரசின் மேல் வசை மொழிகள் எழுதி வைக்கப்பட்டதை அனைவரும் அக்காலத்தில் அறிந்திருந்தனர் என்பது இதனால் உறுதியாகிறது. ஒரு நூலைப் பிரதி எடுப்பது போல அவர்கள் எழுதவில்லை. தாங்கள் அறிந்த உண்மைகளை, தங்கள் மனமறிந்த படி எளிமையாக எழுதி கொடுத்துள்ளனர்.

இயேசு வெள்ளி ம‌தியம் இறந்து, ஞாயிறு அதிகாலையில் உயிர்தெழுந்தார். இதனை மூன்றாம் நாளில் உயிர்தெழுந்தார் என்று சுவிசேஷங்கள் கூறுகின்றன. இயேசு வெள்ளி மதியம் இறந்து ஞாயிறன்று உயிர்ப்பெற்றதால், இடைப்பட்ட காலத்தைச் சரியாக மூன்று நாட்களாக கருதமுடியாது. எனவே இதுவும் ஒரு முரண்பாடாக சுட்டிக்காட்டப்படுகிறது. ஆனால், இதில் எவ்வித தவறும் இல்லை. யூதர் முறைப்படி, வெள்ளி, சனி, ஞாயிறு என்பது மூன்று நாட்களாகவே கருதப்பட்டது. அவர் இக்கிழமைகளைக் கடந்து உயிர்பெற்றதைக் குறிக்கவே மூன்றாம் நாளில் உயிர்தெழுந்தார் என சுவிசேசங்கள் கூறுகின்றன. சிறிது சிந்தித்தாலே முரண்களாகத் தோன்றும் இவ்வேறுபாடுகள் எல்லாம் நமக்கு விளங்கும்.

6. பரிசுத்த ஆவி அருளின அற்புத வேதம்!
பரிசுத்த ஆவியின் வரம்பெற்ற 66 நூல்கள் இன்று நம் கைகளில் பைபிளாக வந்துள்ளது. ஆதியாகமம் முதல் மல்கியா வரை உள்ள 39 புத்தகங்களை யூதர்கள் தங்கள் வேதமாக கொண்டிருந்தனர். அவ‌ர்கள் கைவசமிருந்த நூல்களுக்கு இயேசு கிறிஸ்துவே சாட்சிக் கொடுத்தார் (லூக்கா 24:44). இவை பழைய உடன்படிக்கையாக அமைந்தன. பின்பு, அப்போஸ்தலராலும், அவர்கள்தம் கண்காணிப்பிலும் எழுதப்பட்ட நூல்கள் புதிய ஏற்பாடானது. மத்தேயு, யோவான், யூதா, யாக்கோபு, பேதுரு ஆகியோர் இயேசுவின் சீஷர்கள். மாற்கு பேதுருவின் சீஷராகவும், லூக்கா பவுலடியாருடனும் ஊழியஞ் செய்தவர்கள். பவுல் சீஷர்களின் நட்புறைவும், நற்சாட்சியையும் பெற்றவர். இவர்கள் எழுதிய நூல்கள் எல்லாம் ஆதி திருச்சபையின் பயன்பாட்டிற்கு உடனடியாக வந்தன.இவ்வாறு சீஷர்களாலும் அவர்களது சாட்சி பெற்ற மனிதர்களாலும் எழுதப்பட்ட 27 நூல்கள் திருச்சபையால் பாதுகாக்கப்பட்டு புதிய ஏற்பாடாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதனைக் குறித்து தனிக்கட்டுரை ஒன்றில் விரிவாகக் காணலாம்.

பரிசுத்த ஆவியானவரின் கரங்களை பைபிளில் உள்ள தீர்க்கதரிசனங்களும் அறிவியல் உண்மைகளும் காட்டி கொடுக்கின்றன. இயேசு கிறிஸ்துவின் வாழ்வை தீர்க்கதரிசிகள் அற்புதமாக முன் கூறினர். அவரது கன்னிப்பிறப்பு முதல் உயிர்தெழுதல் வரை பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசனங்களைக் கொண்டே வரையறுக்க முடியும்! அதுமட்டுமன்றி அதில் கூறப்பட்டுள்ள தீர்க்கதரிசனங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக இந்நாள் வரை நிறைவேறி வருகின்றன. உதாரணத்திற்கு, இஸ்ரவேலரின் பாஷையை புதிதாக்குவேன் என்று கர்த்தர் வாக்களித்திருக்கிறார் (செப்பனியா 3:9). இது நமது நாட்களில் நிறைவேறியது மிக மிக ஆச்சரியமான ஒன்று. இயேசு கிறிஸ்துவின் காலத்திற்கு பிறகு, எபிரேயம் அந்நிய மொழி ஆதிக்கத்தால் இஸ்ரவேல் தேசத்தில் மறைந்து போனது. புழக்கத்தில் இருந்து தவறின ஒரு மொழியாக கருதப்பட்ட எபிரேயம் இன்றைய இஸ்ரவேலின் தேசிய மொழி! ஆயிரமாயிரம் ஜனங்களால் பேசப்படுகின்ற, ஆர்வமோடு கற்றுக் கொள்ளப்படுகின்ற மொழியாக அதிசய உருவமடைந்துள்ளது! எலைசர் யஹுதா என்ற தனி மனிதரின் முயற்சி இறந்து போன ஒரு மொழியை ஆயிரமாண்டுகளுக்கு பிறகு புழக்கத்தில் கொண்டு வந்ததிருக்கிறது. இது போன்ற அதிசய தீர்க்கதரிசனங்கள் நிறைந்த நூல் தான் பரிசுத்த வேதாகமம்.

இத்தனை மகத்துவங்கள் நிறைந்த வேதம் பைபிள். பரிசுத்த ஆவியானவரின் கரம்பதிந்த நூல், தன் தீர்க்கதரிசனங்களாலும், சரித்திரச் செரிவினாலும், சரித்திரவான்களின் சாட்சியாலும், தொல்பொருள் தடயங்களாலும் அனுதினமும் நம்மை ஈர்க்கும் அற்புத நூல். எல்லாவற்றிற்கும் மேலாக, இயேசு கிறிஸ்து வாக்களித்த நித்திய வாழ்வின் சத்தியங்களை எடுத்துரைக்கும் வேதம் இது. அதன் காரணமாகவே நூற்றாண்டுகள் கடந்தும் நம் கையில் நிலைபெற்று இருக்கிறது, பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உலகம் முழுவதும் வளம் வருகிறது, அதிக அளவில் அச்சடிக்கப்பட்டு வாசிக்கப்படுகிற வேதமாக இருக்கிறது. இந்த பரிசுத்த வேதத்தை படிக்கவும் பயன்படுத்தவும் தவறாதீர்கள்.







நன்றி : jeevathanneer

No comments:

Post a Comment