Friday, 1 November 2013

ஜான் பேட்டன்

missionary
மனிதரைத் தின்ற மக்களின் அருட்பணியாளர்
 நீங்கள் என்னை அம்பு எய்து, சுட்டு கொன்று போடலாம். ஆனால் நானோ உங்களுடைய உண்மையான நண்பன். நான் நேசித்து சேவிக்கிற என் ஆண்டவர் இயேசுவிடம் என்னை அதிசீக்கிரத்தில் அனுப்புகிறீர்கள் என்பதைத் தவிர மரணம் என்னை ஒன்றும்
செய்யாது. உங்கள் மத் தியில் மரிக்க நான் பயப்படவில்லை என முழங்கினார் ஜான் பேட்டன். பயங்கர ஆயுதங்களோடு மிருகத்தனமாகத் தன்னைத் தாக்க வந்த மிலேச்சர்கள் நடுவில் தைரியமாய் நின்றார் ஜான் பேட்டன். அன்பும் இரக்கமும் அவர் முகத்தில் காணப்பட, அமைதியும் தைரியமும் உள்ளவராய் முழங்கால்படியிட்டார். கிறிஸ்துவின் அன்பைக் கூற வந்த இத்தெய்வத் தூதுவரை எந்நேரத்திலும் கொல்ல ஆயத்தமாயிருந்தனர் அம்மிலேச்சர்கள்.

ஆரம்ப வாழ்க்கை
ஜான் பேட்டன் 1824-ம் ஆண்டு ஸ்காட்லாந்தில் தெய்வ பயமிக்க பெற்றோர்களுக்குப் பிறந்தவர். ஜெபவீரரான அவருடைய தகப்பன் வாணிகம் செய்து வந்தார். அவர்களுடைய இல்லத்தில் ஓர் அறை பரிசுத்த ஸ்தலம் என்றழைக்கப்பட்டது. ஒரு நாளில் மூன்று முறை ஜானின் தகப்பனார் அவ்வறைக்குள் சென்று, தன் குடும்பத்திற்காகவும், ஸ்காட்லாந்து நாட்டிற்காகவும் உலகம் முழுமைக்காகவும் ஊன்றி ஜெபிப்பார். தகப்பனின் சிறந்த தெய்வீக ஜெபவாழ்க்கை ஜானுக்கு சவாலாக அமைந்தது. அவனு டைய பிற்கால வாழ்க்கையில் தன் தகப்பனைப் போல கிறிஸ்துவோடு நடக்க தீர்மானிக்க உதவியது.

ஜானின் தாயார் சிறந்த விசுவாசமும், பக்தியுமுள்ள பெண்ணாக விளங்கினார். ஒரு சமயம் ஜானின் தகப்பனார் வெளியூர் சென்றிருந்த போது வீட்டில் உணவுப் பொருள்கள் தீர்ந்து போனது. அதைக் கண்டு தாய் பசியோடு ஆகாரம் வேண்டி நிற்கும் தன் அருமை மக்களோடு ஜெபித்து நாளைக் காலை தேவன் நமக்கு ஏராளமான ஆகாரத்தை அனுப்புவார் என்று உறுதி கூறி தன் பிள்ளைகளைப் படுக்கைக்கு அனுப்பினார். ஜானின் தகப்பனார் உண்மை என்ன என்று அறியாமலேயே ஏராளமான உணவுப் பொருள்களை அடுத்த நாள் காலை அனுப்பியிருந்தார். அதைக் கண்டு அதிசயித்த தன் பிள்ளைகளைப் பார்த்து ஜானின் தாயார், அருமை மக்களே! உங்கள் தேவைகளையெல்லாம் ஜெபத்தில் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். பரமபிதாவை நேசியுங்கள். நன்மையான யாவற்றையும் உங்களுக்குத் தந்து பிதா தம்மை மகிமைப்படுத்துவார் என்றார். இந்த நிகழ்ச்சியை ஜான் ஒரு  போதும்  மறக்கவில்லை.

12-ம்  வயதில் ஜான் தன்  தகப்பனுக்கு வாணிகத்தில் உதவி செய்தும், கிரேக்க லத்தீன் மொழிகளைக் கற்றும்  அறிந்தார். இயந்திரங்களையும், இயந்திர சாதனங்களையும் அவர் பயின்று கொண்டது. பிற்காலத்தில் அவர் மிஷனரியாகப் பணிபுரியும் போது பேருதவியாக இருந்தது. அவைகளுக்கு முன்னதாகவே ஜான், கிறிஸ்துவைத் தன்னுடைய சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டு தன்னை ஒரு நற்செய்திப் பணியாளனாக ஆயத்தம் செய்ய ஆவல் கொண்டார். கிளாஸ்கோ நகரத்தில் இறையியல் கல்லூhயில் சேரும் வாய்ப்பு அவருக்குக் கிட்டியது. தன்னைப் பயிற்றுவிக்க வீட்டை விட்டு வேதாகமக் கல்லூயில் சேர்ந்தார்.

கிளாஸ்கோ நகரத்தில் வாழ்க்கை மிகக் கடினமானது. ஜான் மருத்துவம், இறைநூல் ஆகியவற்றைப் படித்துக் கொண்டு அங்குள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணி செய்தார். தன் வாழ்க்கைச் செலவை ஈடுகட்ட உழைத்தார். நகரின் ஒரு பகுதியில் உள்ள தாழ்த்தப்பட்டோருக்காக சேவை செய்யும் கிளாஸ்கோ நகர மிஷனரி ஸ்தாபனத்தில் சேர்ந்து கிறிஸ்தவ சேவையில் ஈடுபட்டார். அநேக ஆண்டுகள் இந்த ஊழியம் அவருக்கு மனச்சோர்வைக் கொண்டு வந்தது என்றாலும் தொடர்ந்து திருப்பணிகளை செய்து வந்தார். பெரிய அளவில் கர்த்தருடைய திராட்சைத் தோட்டத்தில் பணிபுரியுமுன், ஒரு சிறிய இடத்தில் பணிபுரிந்து தன் உண்மையை நிரூபித்துக் காட்டினார். பத்து ஆண்டுகளுக்குப் பின்னரே, அவருடைய உண்மை ஊழியம் பலன் தர ஆரம்பித்தது.

கிறிஸ்துவுக்கென்று அநேகரை ஆதாயப்படுத்தினார். அவர்களில் அநேகர் குடிகாரர், வேலையற்று சோம்பித் திரிகிறவர்கள், கடவுளைச் சபிக்கிறவர்கள். ஆனாலும் இத்தனை உழைப்பின் மத்தியிலும் தன் கல்லூரிப் படிப்பை ஜான் பேட்டன் தொடர்ந்து கற்று வந்தார்.

பிற நாடுகளில் கிறிஸ்துவை அறியாத அழிந்து கொண்டு pஇருக்கும் சமுதாயத்தைப் பற்றி பல காரியங்களில் ஜானுக்கு மனபாரம் இருந்து வந்தது. வெளி நாடுகளில் தெய்வப் பணி செய்ய, கடவுளின் அழைப்பு தனக்கு உண்டு என்பதை உணர்ந்த அச்சமயம், நியூஹெப்ரிட்ஸ் என்னும் தீவுகளில் மிஷனரி தேவையைப் பற்றிக் கேள்விப்பட்டார். அங்கு ஏற்கனவே பணியாற்றிக் கொண்டிருந்த மிஷனரியுடன் சேர்ந்து உழைக்க அழைப்புப் பெற்றார். வேறு யாரும் போக விரும்பாத நிலையில் தேவ அழைப்பு ஜானுக்குக் கிடைத்தது. இதுவரை வேறு எவரும் ஒப்புக் கொடுக்காததால் நீயே எழுந்து அர்ப்பணி என்ற தெய்வ தூண்டுதலை உடனே ஏற்று ஜான் தன்னை அர்ப்பணித்தார். மிஷனரி சங்கமும் ஏற்றுக் கொண்டது.

ஆனால் கிளாஸ்கோ நகர மிஷன் ஸ்தாபனம் அவரை வெளிநாடு செல்ல அனுமதிக்கவில்லை. அவருக்கு அறிமுகமானவர்களும், நண்பர்களும் அவரைப் புரிந்து கொள்ளமுடியாமல் தவித்தனர். ஏற்கனவே நல்லதொரு திருப்பணியைச் செய்து வருகிறார். ஏன் இவர் மிலேச்சர்களிடம் செல்ல வேண்டும் என்று நினைத்தார்கள். ஒரு வயோதிபர் போகவேண்டாம் இளைஞனே, நரமாமிசப் பட்சிணிகள் உன்னைத் தின்று விடுவார்கள் என்றார்.
அதற்கு ஜான் பேட்டன் சிரித்தபடியே பதிலளித்தார். பெரியவரே நீங்கள் வயது  சென்று சில நாட்களில் மரித்து அடக்கம் செய்யப்படலாம். மண்ணுக்கடியில் புழுக்கள் அரித்து சாப்பிடும். நான் கிறிஸ்து இயேசுவை கனப்படுத்தி கீழ்ப்படிந்து அவரைச் சேவிக்கும் போது மனிதர் சாப்பிட்டால் என்ன? புழுக்கள் அரித்தால் என்ன? என்றார்.

ஜானின் பெற்றோர் அவரைத் தெய்வ நடத்துதலுக்குக் கீழ்ப்படிந்து ஊழியத்தை தெரிந்து கொள்ளும் படி விரும்பினார்கள். ஜான் பேட்டன் தன் மனைவியுடன் நியூஹெப் ரிட்ஸ் செல்ல 1858-ம் ஆண்டு கப்பல் ஏறினார். அப்போது அவருக்கு வயது 34.

நரமாமிசப் பட்சிணியின் தீவுக் கூட்டம்- நியூஹெப்ரிட்ஸ்
தென் பசிபிக் கடலில், ஆஸ்திரேலியாவிலிருந்து 1400 மைல்கள் வடகிழக்காக அமைந்துள்ள தீவுகளின் கூட்டமே இந்த நியூஹெப்ரிட்ஸ் எனப்படும் இடம். இங்கு வாழ்ந்து வந்த மக்கள் மிலேச்சர்களாகவும், பண்பாடு அற்றவர்களாகவும் இருந்தனர். பயங்கர கொடுமைகள் புரிந்து மனித மாமிசத்தைப் புசிக்கிறவர்களாகவும் காணப்பட்டனர். ஒரு ஆளைக் கொல்லுவது அவர்களுக்கு சர்வ சாதாரணம். அதிக கொலைகளைச் செய்ததினால் தைரியசாலிகளாகவும் இல்லை. அசுத்த ஆவிகளைப் பற்றிய பயமே அவர்களைக் கொலை செய்யத் தூண்டியது. அசுத்த ஆவிகளிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள மந்திரவாதிகளை ஏற்படுத்தியிருந்தனர். இந்த மந்திர வாதிகள் அதிக அதிகாரத்தையும் செல்வாக்கையும் பெற்றிருந்தனர்.
இயற்கை மரணம் உண்டு என்பதையே அறியாதிருந்தனர்.

  ஒருவன் மரித்து விட்டால் அது பில்லிசூனியத்தால் ஏற்பட்டது என்று நம்பினர். ஒருவன் மரித்தவுடன் எல்லாரும் கூடி யார் இந்த மரணத்தை வருவித்தது என்று தீர்மானிப்பார்கள். செத்துப் போனவனுக்கு எதிரியாக இருந்த ஒரு வனை கடைசியில் கண்டுபிடித்து அவனைச் சுட்டுத் தள்ள அவர்கள் தலைவன் ஒரு இளைஞனுக்கு கட்டளையிடுவான். (அத்தீவுகளுக்கு வரும் வியாபாரிகளிடமிருந்து pஇந்த மிலேச்சர்கள் துப்பாக்கியைப் பெற்றிருந்தனர்).

எதிரியாக நினைத்தவனை சுட்டுக் கொன்ற வாலிபனை, சுடப்பட்டு இறந்தவனின் நண்பர்கள் சுட முயற்சிப்பார்கள். இப்படியாக இத்தீவின் மிலேச்ச இன மக்கள் அனைவரும் அழியும் வரை ஒருவரையொருவர் சுட்டுக் கொல்வார்கள். ஒருவன் இறந்ததால் ஏற்பட்ட இழப்பு, அவ்வினத்தையே அழிக்கும் நிலைமை ஏற்படுத்தி விடும். கணவன் மரிப்பானேயாகில் மனைவியையும் கழுத்தை நெரித்து கணவனுடைய பிரேதக் குழியிலேயே போட்டு விடுவார்கள். வயதான முதியவர்கள் அவர்களுக்குப் பாரமாக இருப்பதால் அடித்துக் கொன்று விடுவார்கள். பேய்களையும் முன்னோர்களின் ஆவிகளையும் வணங்கினர். கிறிஸ்துவைப் பற்றி ஒரு போதும் கேள்விப்படாதவர்கள்.

கிறிஸ்தவ மிஷனரிகள் இப்படிப்பட்ட மக்களுக்குச் சுவிசேஷத்தை எடுத்துச் சென்றனர். முதல் மிஷனரிகள் அங்கு இறங்கியவுடனே அடித்துக் கொல்லப்பட்டு புசிக்கப்பட்டனர். அவர்களைத் தொடர்ந்து சென்ற மற்ற மிஷனரிகளும் கொல்லப்பட்டனர். அல்லது விரட்டப்பட்டனர். ஆனால் ஜான் பேட்டன் இத்தீவுகளுக்கு வருகை தந்த போது இரண்டு மிஷனரி தம்பதிகள் இத்தீவுகளில் தங்கி பெரிய ஆபத்துகளுக்கு மத்தியிலும் ஊழியம் செய்து வந்தனர். மனந்திரும்பிய சிலரே இருந்தனர்.

டான்னா எனப்படும் ஒரு தீவு நியூஹெப்ரிட்ஸ் தீவுக் கூட்டங்களில் ஒன்றாகும். இங்கு வேத வசனமாகிய விதையை ஊன்றும் படி எடுத்த எல்லா முயற்சிகளையும் முறியடித்தனர் மந்திரவாதிகள். இம்மந்திரவாதிகள் சுவிசேஷம் சொல்லப்பட பெரிய தடையாயிருந்தனர். தீவு மக்கள் நற்செய்தியை நம்பி ஏற்பார்களானால் தங்களுடைய சகல ஆதிக்கமும் அழிந்து விடும் என்று அறிந்திருந்தனர். இயற்கையின் சீற்றங்களும் இன்னல்களும் நேரும் போது அதற்கு மிஷனரிகளே காரணம் என்று சொல்லி அவர்களைக் கொலை செய்ய ஏவினர். வௌ;ளைக்கார வியாபாரிகளும் இத்தீவு மக்களை மிஷனரிகளுக்கு எதிராகத் தூண்டி விட்டனர்.

காரணம் யாதெனில் இங்கு வரும் வியாபாரிகள் தீவு மக்களை ஏமாற்றி தீவுச் செல்வங்களை அபகரித்துச் சென்றனர். இப்படிப்பட்ட தீவில் தான் ஜான் பேட்டனும் அவர் மனைவியும் வந்து இறங்கினர். டான்னா தீவில் கால் வைத்ததும் பேட்டன் அவர்கள், பல வர்ணங்களைத் தங்கள் மேல் பூசிக் கொண்டு இருந்த காட்டு மிராண்டிகள் அமைதலாய் இருப்பதைக் கண்ணுற்றார். அத்தீவு மக்கள் அவரையும் அவர் கொண்டு வந்திருந்த பொருள்களையும் பார்ப்பதில் அதிக ஆர்வமுள்ளவர்களாய் இருந்தனர். பேட்டன் தம்பதிகள் மரவீட்டைத் தங்களுக்கு அமைப்பதில் ஈடுபட்டிருக்கும் பொழுது ஒரு மைல் தள்ளி நர மாமிச விருந்து நடனம் நடந்து கொண்டிருந்தது. மிகுந்த மனபாரத்தோடு இத்தீவின் மக்களின் இரட்சிப்புக்காகப் பாடுபட்டார் பேட்டன்.

டான்னா தீவின் மக்கள் பேசும் மொழிக்கு எழுத்து வடிவம் இல்லை. ஜான் சைகை மூலமாக அவர்களோடு பேசினார். மிகுந்த பிரயாசப்பட்டு இரண்டு கேள்விகளுக்கு டான்னா மொழியின் வார்த்தையைக் கண்டுபிடித்தார். அவை இது என்ன, உன் பெயர் என்ன என்பதே.

தொடர்ந்து இவ்விரு கேள்விகளையே கேட்டு பேட்டன் அத்தீவு மக்களின் மொழியிலுள்ள பல பெயர்களையும் சொற்களையும் அறிந்து கொண்டு அவர்கள் மொழியைக் கற்றுக் கொண்டார்.

உபத்திரவங்கள்
பேட்டன் தம்பதியருக்கு டான்னாவில் தங்கியிருக்கும் போது ஒரு மகன் பிறந்தான். அது அவர்களுக்கு அளவற்ற மகிழ்ச்சியைக் கொடுத்தது. ஆனால் மூன்று வாரங்களுக்குள் தாய் விஷ காய்ச்சலால் தாக்கப்பட்டு மரித்துப் போனாள். மகனும் ஒரு வாரத்திற்குள் மரித்துப் போனான். பேட்டனும் சுகவீனம் அடைந்து விட்டார். எனினும் தானே தன் அருமை மனைவியையும் மகனையும் அடக்கம் செய்ய குழி தோண்ட வேண்டியதாயிற்று. தாங்க முடியாத துக்கம், மனவேதனை என்று பேட்டன் அச்சூழ்நிலையை வர்ணித்துள்ளார். கிறிஸ்துவில் மாத்திரம் என் ஐக்கியம் நிலைத்திராதிருந்தால் ஒரு மன நோயாளியாக மாறியிருப்பேன் என்றார்.

டான்னா தீவு ஊழியத்தில் பேட்டனுடைய உயிருக்கு எப்போதும் ஆபத்துக்கள் சூழ்ந்து இருந்தன. அநேக முறை அத்தீவில் மழை இல்லாத போது வியாதிகள் அத்தீவு மக்களை தாக்கும் போதும், பேட்டன் தான் அதற்கு கார ணமானவர் என்று சொல்லி கொலை செய்ய முயற்சித்தனர். கர்த்தருடைய பாதுகாக்கும் கரம் அவரோடு தொடர்ந்து இருந்ததினால் அவரை உயிர்ச் சேதங்களுக்கு மீட்டு இரட்சித்தது. இதுவுமல்லாமல் பேட்டன் வைத்திருந்த பொருள்களை எடுத்துச் சென்று விட்டனர். ஒரு முறை சமையல் பாத்திரங்கள் அனைத்தையும் எடுத்துச் சென்று விட்டனர். பேட்டன் தீவு தலைவனை அணுகி, கெஞ்சி மன்றாடியதின் விளைவாக அவருடைய வெந்நீர் பாத்திரம் (கெட்டில்) மூடி இல்லாமல் திருப்பிக் கொடுக்கப்பட்டது.

ஒரு நாள் பிரிட்டிஷ் பேட்டனிடம் ஓடி வந்து கப்பல் கேப்டன் உன்னுடைய பொருட்களை நாங்கள் திருடி விட்டோமா என்று கேட்பானா? என்று கேட்டனர். அதற்கு பேட்டன் ஆம் அவன் அப்படிக் கேட்டால் நான் உண்மையைச் சொல்லத்தானே வேண்டும் என்றார். பேட்டன் அப்படி சொன்னவுடனே திருடப்பட்ட அவருடைய எல்லா பாத்திரங்களும் திரும்பி வந்துவிட்டன.

டான்னா தீவு மக்கள் நாஹாக் என்ற தீய சடங்கு செய்வது உண்டு. வேண்டாத ஒருவனை மரிக்கும் படி செய்யப்படும் ஒரு சடங்காகும். அச்சடங்கைச் செய்ய சாகடிக்கத் தீர்மானித்த மனிதன் ருசி பார்த்த ஆகாரம் தேவை. பேட்டன் கடித்து ருசி பார்த்த சில பழங்களை அவர்களிடம் கொடுத்தார். அதை வைத்துக் கொண்டு பேட்டன் மரிக்கும் படியாக தீய சடங்கை நடத்தினர். ஆனால் அவரோ எந்தத் தீங்கும் நேராதவராக இருந்தார். இந்த நிகழ்ச்சி இரண்டு மந்திரவாதிகளின் மனதில் கிரியை செய்தது. அவர்கள் இயேசுவின் ஒப்பற்ற தியாக செய்திக்குச் செவி சாய்த்தனர்.

வௌ;ளைக்கார கப்பல் வியாபாரிகளும் தீவு மக்களைத் தூண்டி விட்டு கொலை செய்யச் சொன்னார்கள். ஏனெனில் பேட்டன் துப்பாக்கி போன்ற அதிக தளவாடங்களை வாங்க வேண்டாமென்றும், புகையிலை மதுபானங்களை பெற்றுக் கொள்ள வேண்டாமென்றும் தடுத்திருந்தார். ஒவ்வொரு முறையும் அவருடைய உயிரை மேற்கொண்ட முயற்சிகளையெல்லாம், வல்ல தேவன் முறியடித்தார். அம்மை நோயால் பாதிக்கப்பட்டிருந்த சிலரை கப்பலில் வந்த வௌ;ளை வியாபாரிகள் அத்தீவில் இறக்கி விட, அம்மை நோய் வேகமாக பரவி அத்தீவு மக்களில் மூன்றில் ஒரு பங்கு மரிக்கும் படி செய்தது. இதற்கு பேட்டனே காரணம் என்று குற்றம் சாட்டிக் கொலை செய்ய எச்சரித் தனர்.

ஒருநாள் பேட்டன் தன் மரவீட்டைப் பழுது பார்த்துக் கொண்டு இருக்கும் போது தீவுத் தலைவன் தன் ஆட்க ளோடு வந்து அவரைச் சூழ்ந்து கொண்டான். சிறிது நேரம் அவரைப் பார்த்துக் கொண்டே இருந்த பின், துப்பாக்கிகளை பேட்டன் தலைக்கு நேராக நீட்டினான். அவர் தப்பிக்க முடியாத சூழ்நிலையில் ஜெபம் மாத்திரமே செய்தார்.

என் நாமத்தினால் நீங்கள் எதை கேட்டுக் கொள்வீர்களோ, அதை நான் செய்வேன் என்ற வசனமே அவருடைய நினைவுக்கு வந்தது. அவர் திடமனதடைந்து தன்னைத் தீமை அணுகாமல் கர்த்தர் பாதுகாப்பார் என்று அறிந்து கொண்டார். முதல் வெடியை வெடிக்க அந்த முரடர்கள் அவர்களுக்குள்ளே ஒருவரையொருவர் தூண்டி விட்டனர். ஆனால் முடியவில்லை. பின் வாங்கிப் போய் விட்டனர். இம்முறையும் தேவன் தமது ஊழியனைப் பாதுகாத்துக் கொண்டார்.

மிஷனரிக் கப்பல் வாங்கப்படுதல்
ஓய்வு நாள் பாடசாலை பிள்ளைகளின் காணிக்கை, ஜெபங்களின் மூலமாக பேட்டன் அவர்கள் ஒரு மிஷனரி கப்பலை வாங்கும் முயற்சியில் ஈடுபட்டார். வளர்ந்து வரும் பலத்த எதிர்ப்புகளை மேற்கொள்ள முடியாதவராய் பேட்டன் டான்னா தீவை விட்டு வெளியேறினார். ஆஸ்திரேலியா நாட்டில் பிரயாணம் செய்து ஒரு மிஷனரிக் கப்பலை வாங்க நிதி திரட்டினார். தீவுகளில் ஊழியம் செய்ய மிஷனரிக் கப்பல் மிக அவசியமாக இருந்தது. அவருடைய மன்றாட்டுக்கள் எல்லாம் ஆஸ்திரேலியா நாட்டின் ஓய்வு நாள் பாடசாலைகளில் கொடுக்கப்பட்டன. அவருடைய வேண்டுதல்களுக்கு இணங்க சிறிய காணிக்கைகளும், நிதிகளும் சேர்க்கப்பட்டு டெஸ்பிரிங் என்ற கப்பலை மிஷனரி உபயோகத்திற்கு என்று வாங்கினார்.

நியூஹெப்ரிஸ் தீவுகளில் திருப்பணியாற்ற எண்ணி முடியாத சிறுபிள்ளைகளின் காணிக்கையும், ஜெபமும் ஒப்பற்ற ஓர் ஊழியத்தை செய்வதற்கான கப்பலை வாங்கும் படி செய்தது. வாலிபரும், பிள்ளைகளும் அவர்களுடைய அற்பமான காணிக்கைகளாலும் ஜெபங்களாலும் ஒரு பெரிய மிஷனரி ஊழியத்தை ஆதரிக்க முடியும் என்று நிரூபித்ததை இந்நிகழ்ச்சியின் மூலம் நாம் அறிந்து கொள்கி றோம் அன்றோ!

அனீவா தீவில் ஊழியம்
ஜான் பேட்டன் மறுமுறை திருமணம் செய்து கொண்டு நியூஹெப்ரிட்ஸ் தீவுகளுக்குப் பயணமானார். இம்முறை அனீவா என்ற தீவைச் சென்றடைந்தார். அனீவா தீவு மக்கள் அவரை அன்புடன் வரவேற்றபோது ஊழியம் வியாபித்துப் பரவியது. முதிர் வயதுள்ள அத்தீவுத் தலைவன் இரட்சிக்கப்பட்டான். பேட்டன் தம்பதியர் அத்தீவு மக்களுக்கு உடையணிய கற்றுத் தந்தார்கள். ஒரு சமயம் சிறிய மரத்துண்டில் பேட்டன் செய்தி எழுதியிருந்தார், தன் அச்செய்தியைப் படித்துவிட்டு பேட்டன் விரும்பிய பொருளைக் கொடுத்து அனுப்பினார். சிறிய மரத்துண்டு பேசுகிறதே என்று அறியாமையிலிருந்த தலைவன் ஆச்சரியப் பட்டுப்போனான். இந்நிகழ்ச்சியை வைத்துப் பேட்டன் அவனுக்கும் மற்றவர்களுக்கும் மரத்துண்டில் எழுதப்பட்ட செய்தியை வாசித்துக் காண்பித்து அத்தீவு மக்களும் எழுத படிக்கக் கற்றுக் கொள்ளும் படி செய்தார்.

அனீவா என்னும் தீவு ஏழு மைல் நீளமும் இரண்டு மைல் அகலமுடைய தீவாகும். தீவின் அனைத்துப் பழங்குடியினரும் வழிநடத்தப்பட்டு அவரால் மீட்கப்பட்டார்கள். இது எப்படி நடந்தது என்றால் அனீவா நல்ல குடிநீர் வசதியற்ற ஒரு தீவாக இருந்தது. பேட்டன் அவர்கள் பலமுறை ஜெபித்து ஒரு கிணறு தோண்டும் முயற்சியில் தானே pஇறங்கினார். தீவு மக்களால் இதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அவர்கள் எப்படி தண்ணீர் பூமிக்கடியிலிருந்து வரும் என்று விளங்கிக் கொள்ள முடியாத நிலையில் இருந்தனர். கிணறு தோண்டப்படும் இடத்தின் அருகே வர பயந்தார்கள். அவர்கள் எல்லாரும் தங்கள் கைகளைக் கோர்த்துக்கொண்டு ஒவ்வொருவராய் உள்ளே எட்டிப் பார்த்தனர். பேட்டன் அவர்கள் தான் தோண்டிய கிணற்று நீரை ருசி பார்க்கச் சொன்னார்.

தீவுத் தலைவன் தண்ணீரைப் பெற்றுக் கொண்டு ஆட்டி ஆட்டி முகர்ந்துப் பார்த்தான். கடைசியில் வாயில் ஊற்றிக் கொண்டு ருசி பார்த்தான். அவன் ஆச்சரியத்தில் மூழ்கியவனாய் யெகோவாவே உண்மையான தெய்வம் என்று ஆரவாரித்தான். பேட்டன் அவர்களும் யெகோவா என் தெய்வம், அவரே உங்களுக்கு இந்த நல்ல நீரைக் கொடுத்தார் என்றார்.

உடனே தீவுத் தலைவனின் ஆணைப்படி எல்லா விக்கிரகங்களும் கொளுத்தப்பட்டு புதைக்கப்பட்டன. தீவின் அனைத்து மக்களும் கிறிஸ்து இயேசுவின் இரட்சிப்புக்குள்ளாக வந்தனர். 1899-ம் ஆண்டு, அனீவா மொழியில் புதிய ஏற்பாட்டை பேட்டன் பிரசுரித்தார். அந்த ஆண்டு முடிவிற்குள் 25 முதல் 30 தீவுகளில் மிஷனரிகள் கிறிஸ்துவின் சாட்சிகளாய், மிலேச்சர்களான காட்டுமிராண்டிகள் மத்தியில் பணிபுரிய வந்து விட்டனர். கிறிஸ்துவின் ஒளி பரவிற்று.

முதுமை அடைந்த நிலைமையிலும், தெய்வ தூதுவர் ஜான் பேட்டன் அவர்கள், நரமாமிசப் பட்சிணிகளுக்கென்று என் உயிருள்ளவரை உழைப்பேன் என்று தீர்மானித்தார். நியூஹெப்ரிட்ஸ் தீவுகளின் இரட்சிப்புக்கென்று ஆஸ்திரேலியாவில் இருந்து கொண்டே ஜெபிப்பார். மற்றவர்களையும் ஜெபிக்;கத் தூண்டுவார். பொருளாதாரத் தேவைகளை தேடி அனுப்புவார். அவரும் தீவுகளுக்குச் சென்று திருப்பணியில் ஈடுபடுவார். அவருடைய மகனும் டான்னா தீவில் தங்கி ஊழியம் செய்து கொண்டு இருந்தார். முன்பு பேட்டனை வெளியேற்றிய அத்தீவார் கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ள ஆரம்பித்தனர்

முடிவில் நூற்றுக்கணக்கான மிலேச்சர்களும் நரமாமிசப் பட்சிணிகளும் கிறிஸ்துவிடம் வருவதைப் பார்த்த பின் 1907-ம் ஆண்டு ஜனவரி 28-ம் நாள் மகிமைக்குள் பிரவேசித்தார். அப்போது அவருக்கு வயது 88.
இன்று, ஐந்து புரோட்டஸ்டண்டு, மிஷனரி இயக்கங்கள் நியூஹெப்ரிட்ஸ் தீவுகளில் பணிபுரிந்து வருகின்றன. டான்னா தீவையும் சேர்ந்த எல்லாத் தீவுகளிலும் ஜான் பேட்டன் அவர்களின் சலியாத உழைப்பின் பயனாக ஏராளமான கிறிஸ்தவ மக்கள் இன்றும் கிறிஸ்துவை வணங்கிப் போற்றுகிறார்கள்.


ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருக்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக் கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம். எபி 12:1

No comments:

Post a Comment